img/728x90.jpg
8 ஆண்டுகளுக்கு பின் நீதி வென்றது  பாலியல் தொல்லைக்கொடுத்த தலைமைக்காவலர் பணிநீக்கம்

8 ஆண்டுகளுக்கு பின் நீதி வென்றது பாலியல் தொல்லைக்கொடுத்த தலைமைக்காவலர் பணிநீக்கம்பெண் காவல் அதிகாரி கொடுத்த பாலியியல் புகாரில் எட்டு ஆண்டுகள் கழித்து மனித உரிமை ஆணையம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. தலைமை காவலரை பணி நீக்கம் செய்து பரிந்துரை செய்ததோடு 5 லட்சம் இழப்பீடு வழங்கவும், உதவிய ஐஜி மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது

கடந்த 2010 ம் ஆண்டு பெண் காவல் உதவி ஆய்வாளராக இளையான்குடி காவல் நிலையத்தில் பணியாற்றிவர் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவருக்கு அக்காவல் நிலையத்தில் எஸ்பிசிஐடி தலைமை காவலராக இருந்த செந்தாமரை கண்ணன் என்பவர் பாலியில் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.
 

அதற்கு கீதா இணங்காததால் அவரைப்பற்றி தவறான கருத்துகளையும் பரப்பி தொல்லை கொடுத்துள்ளார். செந்தாமரைக்கண்ணன் எஸ்பிசிஐடி போலீஸாக இருந்ததால் அவரைப்பற்றி பேசவே மற்ற போலீஸார் அஞ்சியுள்ளனர். பேசினால் எங்கே தன்னைப்பற்றி மேலதிகாரிகளுக்கு ரிப்போர்ட் போட்டுவிடுவாரோ என்ற பயத்தினால் யாரும் எதுவும் பேசாமல் அடங்கி போயுள்ளனர்.

இந்த தைரியத்தில் செந்தாமரைக்கண்ணன் மேலும் துணிச்சல் பெற்று பல பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்து தனது திட்டத்தை நிறைவேற்றியதாக அப்போது புகார் உண்டு. இது தவிர தனக்கு விருப்பப்பட்ட பெண்களை கேலி செய்வது, பாலியல் ரீதியாக சீண்டும் வேலையையும் செய்து வந்துள்ளார்.

அரசியல் ரீதியாக செல்வாக்கும், அப்போதைய மாவட்ட எஸ்பி ராஜசேகரனுக்கு நெருக்கமாகவும் தலைமை காவலர் செந்தாமரைக்கண்ணன் இருந்ததால் அவரைப்பற்றிய புகார்கள் அனைத்தும் குப்பைக்கூடைக்கு சென்றது. செந்தாமரைக்கண்ணனின் தொல்லை பொறுக்க முடியாமல் மேலதிகாரியான எஸ்பி ராஜசேகரன் ஐபிஎஸ்ஸிடம் கீதா புகார் அளித்தார்.

ஆனால் எஸ்பி ராஜசேகரன் அந்த புகாரில் நடவடிக்கை எடுக்க வில்லை. மாறாக புகார் அளித்த கீதாவுக்கு தொல்லைகள் அதிகரித்தது. துறை ரீதியாக தொல்லை அதிகமானது. இதுப்பற்றி நேரடியாக குறை தீர் மையத்தில் கீதாவின் தந்தை ராமன் புகார் அளிக்க சென்றபோது எஸ்பி கேட்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் செய்தித்தாள்களில் வெளியானவுடன் எஸ்பியே நேரடியாக கீதாவை விசாரணை என்ற பெயரில் அழைத்து அவமானப்படுத்தியுள்ளார்.

ஒரு கட்டத்தில் கீதாவுக்கு துறை ரீதியாக மன உளைச்சல் ஏற்படுத்தும் விதத்தில் தொல்லைகளும், கீதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் தலைமை காவலர் தொடர்ச்சியாக அவதூறு பரப்பியதும் பொறுக்க முடியாமல் போன நிலையில் வேறு வழியில்லாமல் மேற்கண்ட தனது பிரச்சினைகளை புகாராக எழுதி மாநில மனித உரிமை ஆணையத்தில் அளித்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு விசாரணையில் வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், இந்த விவகாரத்தை சரியாக கையாளாமல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட அப்போதிய சிவகங்கை மாவட்ட எஸ்பியும் தற்போது ஐஜியாக பதவி வகிக்கும் ராஜசேகரன் ஐபிஎஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

மேலும் பாலியியல் தொல்லை கொடுத்த தலைமைகாவலர் செந்தாமரை கண்ணனை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டதோடு, 3 லட்ச ரூபாயை தலைமை காவலரிடமும், 2 லட்ச ரூபாயை அப்போதைய சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரனிடமும் பெற்று மொத்தம் ரூ.5 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண் எஸ்.ஐ கீதாவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

மேலும் இளையங்குடி பெண் காவல் உதவி ஆய்வாளர் கீதாவுக்கு பதவி வழங்கவும் உத்தரவிட்டது. உயர் அதிகாரிகளிடம் கொடுக்கும் புகாரில் உடனடியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பான உரிய உத்தரவுகளை டிஜிபி பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் மூலம் மாநில அளவில் மட்டுமல்ல மாவட்டம், தாலுகா அளவிலும் விசாகா கமிட்டி அமைக்கப்படவேண்டியது அவசியம் என தெரிகிறது. தாமதிக்கப்பட்ட நீதி என்றாலும் நியாயமான நீதியை வழங்கிய மனித உரிமை ஆணையம் கீதா போன்ற பெண் காவலர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.