img/728x90.jpg
கோவை மாநகராட்சியன் தண்ணீர் விநியோகத்தை சூயஸ் கார்பரேட் நிறுவனத்திடம் தாரை வார்த்த தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

கோவை மாநகராட்சியன் தண்ணீர் விநியோகத்தை சூயஸ் கார்பரேட் நிறுவனத்திடம் தாரை வார்த்த தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

கோவை மாநகராட்சியன் தண்ணீர் விநியோகத்தை சூயஸ் கார்பரேட் நிறுவனத்திடம் தாரை வார்த்த தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

நாள் : 07.09.2018, 

 இடம் : தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில், கோயம்புத்தூர்,

 நேரம் : மாலை 5 மணி 

அன்பார்ந்த உழைக்கும் தமிழ் மக்களே!

தண்ணீர். இயற்கையின் கொடை, உயிரின் ஆதாரம், மண்ணின் உயிர்த்துளி. மனித வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையான தண்ணீரை இனி நாம் காசுகொடுத்து மட்டும்தான் வாங்க முடியும் என்ற அவல நிலை ஏற்பட போகிறது. ஒவ்வொரு சொட்டுநீருக்கும் கணக்கிட்டு நம்மிடம் கொள்ளையடிக்க போகின்றன முதலாளித்துவ நிறுவனங்கள். தாய்த்தமிழ் தேசத்தின் வளங்களை சூறையாடி, இயற்கையை நாசமாக்கி கொண்டிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர் வளத்தை உறிஞ்ச வெறிபிடித்த ஓநாய்களாக அலைந்து கொண்டிருக்கின்றன.

ஆம். கோவை மாவட்டத்தின் தண்ணீர் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணியை 'சூயஸ்' என்ற பிரெஞ்சு நிறுவனத்திடம் தாரை வார்த்துள்ளது கோவை மாநகராட்சி. 26 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 3 ஆயிரத்து 214 கோடி (400  மில்லியன் யூரோ). முதல் கட்டமாக 60 வார்டுகளில் தண்ணீர் விநியோகத்தை செய்ய உள்ளது இந்த சூயஸ் நிறுவனம். இதனால் கோவை மாவட்டத்திற்கு நீர் வினியோகிக்கும் நீர்த்தேக்கங்கள், நீர்த்தேக்கத் தொட்டிகள், அணைகள் (பில்லூர், சிறுவாணி, ஆழியாறு) மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் என அனைத்தும் இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். எந்த தடையும் இல்லாமல் நீர் வேட்டையை நடத்தி லாபம் கொழிக்கும்.

மக்களை ஏமாற்றும் மாநகராட்சி! 

இது நாள்வரை குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி மூலம் நடைபெற்று வந்த நீர் விநியோகத்தை ஏன் லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனத்திடம் கொடுக்கிறது என்பதற்கு மாநகராட்சி தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் தரப்படவில்லை. மாநகராட்சி மன்றம் செயல்படாத காலத்தில் இந்த ஒப்பந்தத்தை யாருக்கும் தெரியாமல் நிறைவேற்றிவிட்டு அதை மக்கள் மன்றத்தில் வெளியிடவும் மறுத்து வருகிறார் மாநகராட்சி ஆணையர். மக்களை ஏமாற்ற '24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும், விநியோகம் மற்றும் பராமரிப்பு மட்டுமே தனியாரிடம் கொடுக்கப்படும், கட்டணத்தை மாநகராட்சி தான் வசூல் செய்யும்' என்றும் பல்வேறு விளக்கங்களை கொடுத்து வருகிறார். உண்மையோ வேறு, பிற நாடுகளில் தண்ணீர் விநியோகிக்கும் தனியார் நிறுவனமே கட்டணம் வசூலித்ததால் மக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியது. அதுபோல இங்கும் நடந்து விடக்கூடாது என்பதற்காக உத்தியை மாற்றி 'சேவை கட்டணம்' என்ற பெயரில் மக்களிடம் பணத்தை வசூலித்து தனியாரிடம் கொடுக்கும் ஏஜென்டாக செயல்படப்போகிறது மாநகராட்சி. 24 மணி நேரம் என்பது படிப்படியாக குறைக்கப்பட்டு 8 மணி நேரமாக மாற்றப்படும். பொதுக் குழாய்கள் அனைத்தும் அகற்றப்படும்.

தண்ணீர் தனியார்மயம் - ஆபத்துக்கள் என்ன?

தாங்கள் பயன்படுத்தும் மழை நீர், நிலத்தடி நீர், கழிவு நீர் அனைத்திற்கும் மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும். தண்ணீரை பயன்படுத்தி விட்டு கட்டணம் செலுத்தும் நிலை மாறி கட்டணம் செலுத்திவிட்டு தான் தண்ணீரை பயன்படுத்த முடியும். குடிசை உட்பட அனைத்து வீடுகளுக்கும் நீர் அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டு ஒவ்வொரு துளி நீருக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் பல மடங்கு உயரும். இதனால் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே தாராளமாக தண்ணீர் கிடைக்கும் நிலை உருவாகும்.

அடித்து விரட்டப்பட்ட சூயஸ்!

தமிழ்நாட்டில் தண்ணீர் வளத்தை குறிவைத்துள்ள சூயஸ் நிறுவனம் தென் அமெரிக்க நாடுகளான பொலிவியா, அர்ஜென்டினாவிலும்  இக்கொள்ளையை நடத்தி வந்தது. தண்ணீரின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதால் மக்கள் குளம், குட்டைகளில் நீரை எடுத்தனர். ஒப்பந்தப்படி அனைத்து நீர்நிலைகளும் அந்நிறுவனத்துக்கே சொந்தம் என்பதால் அதை தடுத்தது சூயஸ். மக்கள் வெகுண்டெழுந்தார்கள். இடைவிடாத போராட்டத்தால் சூயஸ் நிறுவனம் அந்நாடுகளை விட்டே துரத்தி அடிக்கப்பட்டது. மக்கள் மீது எள்ளளவும் அக்கறையற்ற, ஈவிரக்கமில்லாத இந்த சூயஸ் நிறுவனம் தான் கோவை மாவட்ட மக்களுக்கு தண்ணீரை விநியோகிக்க உள்ளது.

 விற்பனை சரக்கா தண்ணீர்? 

தண்ணீரை அரிசி, கோதுமை, காய்கறிகள் போல உற்பத்தி செய்ய முடியாது. அது மனித குலத்திற்கு இயற்கை அளித்த கொடை. நீரின் முக்கியத்துவத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே 'நீரின்றி அமையாது உலகு' என மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார் வள்ளுவர். பொதுச் சொத்தான  தண்ணீர் வளத்தை பாதுகாத்து அடுத்து வரும் தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டியது நமது கடமை.

ஆனால்,  முதலாளித்துவமோ தண்ணீரை விற்பனைப் பண்டமாக கருதுகிறது. தண்ணீரை தனியுடைமையாக்கி அதன் மூலம் கோடி கோடியாக கொள்ளை அடித்துவருகிறது. அதற்காகவே 'உலக வங்கி', 'உலக வர்த்தகக் கழகம்' போன்றவைகள் பல்வேறு நாடுகளின் இறையாண்மை உரிமையில் தலையிட்டு தனக்கு சாதகமான சட்டங்களை இயற்றிக் கொள்கிறது. தண்ணீர் மட்டுமல்ல கல்வி, மருத்துவம், மின்சாரம், தொலைத்தொடர்பு, போக்குவரத்து என சேவைத் துறைகள் அனைத்தும் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்ட வேண்டும் காசு உள்ளவர்கள் மட்டுமே அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இவர்களின் கொள்கையான உலக மயமாக்கலின் விதி.

ஏகாதிபத்தியங்களின் எடுபிடி டெல்லி!

இத்தகைய உலகமயமாக்கல் கொள்கையை பின்பற்றி தான் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூறுபோட்டு விற்கிறது டெல்லி அரசு. 1994இல் அதற்காக நாட்டு மக்களுக்கு தெரியாமல் போடப்பட்டது தான் 'காட்ஸ்' ஒப்பந்தம். அதனை ஒட்டி தான் 2002இல் 'தேசிய நீர்க் கொள்கை'யை உருவாக்கியது அன்றைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு. அனைத்தையும் வெளிநாட்டுக்காரனுக்கு கொடுத்துவிட்டு 'சுதேசி', 'மேக் இன் இந்தியா' என மக்களை ஏமாற்றி வருகிறது இன்றைய மோடி தலைமையிலான பாஜக அரசு.

வெறும் தண்ணீர் பிரச்சினை இல்லை இது!

உலகம் முழுக்க இத்தகைய தண்ணீர் தனியார்மயமாக்கல் நடவடிக்கை படுதோல்வி அடைந்துள்ளது. சென்ற இடங்களிலெல்லாம் தனியார் நிறுவனங்கள் மக்களால் ஓட ஓட அடித்து விரட்டி அடிக்கப்பட்டது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் கூட மைசூர் நகரில் தண்ணீர் விநியோகம் தனியார் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டிருந்தது. பின்பு மக்கள் எதிர்ப்பால் பின்வாங்கிவிட்டது. இவையெல்லாம் தற்காலிக தீர்வுதான்.

8 கோடி மக்களைக் கொண்ட தாய் தமிழ் தேசத்தின் தண்ணீர் வளத்தை எங்கிருந்தோ வரும் ஒருத்தன் உரிமை கொண்டாடுவானாம். தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் - மாநில அரசு இதனை அனுமதிக்குமாம்.

 இதற்கு பெயர் என்ன? அடிமைத்தனம் இல்லையா? 

ஆம். இந்த அரசு அடிமை அரசு. பன்னாட்டு முதலாளிகளின் சேவகன் டெல்லி அரசின் எடுபிடி அரசு. ஸ்டெர்லைட், மீத்தேன், இந்தித் திணிப்பு, நிதி கொள்ளை, நீட் திணிப்பு என எதையும் தடுக்க முடியாத அதிகாரமற்ற -  கையாலாகாத அரசு. 

நாம் ஒரு சொட்டு குடிதண்ணீரை உரிமை கொண்டாட வேண்டுமானால் கூட நமக்கு சுதந்திரமான இறையாண்மை பெற்ற அரசு வேண்டும். 

பன்னாட்டு நிறுவனங்களை விரட்டியடித்து தண்ணீர் உட்பட அன்னைத் தமிழ் மண்ணின் அனைத்து வளங்களையும் பாதுகாக்க வேண்டுமானால் அன்று வெள்ளையர்களுக்கு எதிராக நடந்தது போல் இன்று டெல்லி கொள்ளையர்களுக்கு எதிராக நடத்த வேண்டும் விடுதலைப் போர்...

தமிழக அரசே!

★ கோவை மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தை தனியாரிடம் தாரைவார்க்காதே!

★ சூயஸ் கார்ப்பரேட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்!

தமிழக மக்களே!

★ தண்ணீர் கொள்ளைக்கு எதிராக சாதி, மதம் கடந்து உழைக்கும் தமிழராக ஒன்றிணைந்து போராடுவோம்!

புரட்சிகர இளைஞர் முன்னணி

புரட்சிகர மாணவர் முன்னணி 

கோயம்புத்தூர். 

தொடர்புக்கு: 8680865204

PDF

PDF Link