img/728x90.jpg
பெருகும் வாராக்கடன்களுக்குக் காரணம் என்ன? வங்கிகளின் அளவுக்கு மீறிய நம்பிக்கை, அரசு முடிவுகளில் மந்தம்: ரகுராம் ராஜன் கருத்து

பெருகும் வாராக்கடன்களுக்குக் காரணம் என்ன? வங்கிகளின் அளவுக்கு மீறிய நம்பிக்கை, அரசு முடிவுகளில் மந்தம்: ரகுராம் ராஜன் கருத்துவங்கிகளின் அதீத நம்பிக்கை, அரசு முடிவெடுப்பதில் ஏற்பட்ட மந்த நிலை, பொருளாதார வளர்ச்சியில் மிதமான போக்கு ஆகியவையே வாராக்கடன்கள் அதிகரிக்கக் காரணம் என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் குழுவுக்கு அளித்த அறிக்கையில் ரகுராம் ராஜன் இவ்வாறு தெரிவித்துள்ளார். எஸ்டிமேட்ஸ் கமிட்டியின் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு அவர் அளித்த அறிவிக்கையில், “பலதரப்பட்ட ஆட்சி நிர்வாகப் பிரச்சினைகள், அதாவது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சந்தேகத்துக்குரிய விதங்களில் ஒதுக்கீடு, இதனுடன் விசாரணைகள் குறித்த அச்சம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகளின் முடிவெடுக்கும் திறன்களில் மந்தம்” ஆகியவை வாராக்கடன் பிரச்சினைகளுக்குக் காரணமானது என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

நிறுத்தப்பட்ட திட்டங்களின் அதிகரித்த செலவினங்கள், நாட்டில் மின் பற்றாக்குறை இருந்த போதிலும் பணியில் இல்லாத மின் உற்பத்தி நிலையங்கள், ஆகியவை அரசின் திட்டமிடல், முடிவெடுக்கும் விவகாரங்களில் மந்தநிலை இருந்ததையே காட்டுகிறது.

2006-2008 காலக்கட்டத்தில்தான் அதிக அளவில் வாராக்கடன்கள் உருவாகின. அதாவது பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்த போது. முந்தைய உள்கட்டமைப்புத் திட்டங்கள், அதாவது மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவை பூர்த்தி செய்யப்பட்ட காலத்தில்தான் வாராக்கடனும் அதிகரித்துள்ளது.

“இந்தக் காலக்கட்டங்களில்தான் வங்கிகள் தவறிழைத்தன. கடந்த கால வளர்ச்சி, செயல்திறனை எதிர்காலத்துக்கானதாகவும் மதிப்பீடு செய்தனர். புரோமோட்டர்களின் முதலீட்டு வங்கியின் அறிக்கைகளை வைத்து வங்கிகள் சில வேளைகளில் கடன்களை வழங்க முடிவெடுத்தன. அதாவது தாங்களாகவே ஆராய்ந்து முடிவெடுக்காமல் கடன் வழங்கினர்.

ஒரு உதாரணம் கூற வேண்டுமெனில், ஒரு புரமோட்டர் என்னிடம் கூறியபோது எப்படி வங்கிகள் இவரை கடன் வாங்கத் தூண்டின என்றும் காசோலைப் புத்தகங்களைக் காட்டி எவ்வளவு வேண்டும் என்று கேட்டதாகவும் கூறினார். இதுதான் அறிவுக்குப் புறம்பான பூரிப்பின், நம்பிக்கையின் வரலாற்று நிகழ்வாகும். ஆனால் இது அந்த பொருளாதார சுழற்சியில் அனைத்து நாடுகளிலும் கூட இதே நிலைமைதான்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக வளர்ச்சி என்பது நம் எதிர்பார்ப்பிற்கு இணங்க நிகழாது. ஆண்டுக்கணக்கான வலுவான உலக வளர்ச்சி உலக பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு மந்தமடையவே செய்யும். இது இந்தியாவுக்கும் நிகழ்ந்தது. பலதரப்பட்ட திட்டங்களுக்கான தேவை எதிர்நோக்குதல் மேலதிகமாக நடைமுறைக்கு ஒவ்வாததாக அமைந்தது, காரணம் உள்நாட்டுத் தேவை மந்தமடைந்திருந்தது.

செயலில் இல்லாத சொத்துகளின் அதிகரிப்பு:

சந்தேகமின்றி ஏதோ ஒன்று, வங்கியாளர்களின் அலட்சியம், அளவுக்கு மீறிய நம்பிக்கை, சிறிதளவு ஊழல் கடன் தாரர்களை மதிப்பிடுவதில் திறமைக்குறைவு வாராக்கடன் என்பதற்கான புதிய இலக்கண வரயறை என்று எல்லாமும் சேர்ந்ததுதான்.

பலரும் தனித்த ஆய்வில் ஈடுபடாமல் எஸ்பிஐ, ஐடிபிஐ வங்கிகளை நம்பியிருந்தனர். பகுப்பாய்ந்து கொடுக்க வேண்டிய கடன்களுக்கான ஆய்வுகளை அவுட் சோர்ஸிங் செய்து அதனடிப்படையில் கடன்களை வழங்கியது இந்த அமைப்பின் பலவீனம். இதனால் தேவையற்ற செல்வாக்குகளும் பல்கியது.

இதற்குத் தீர்வாக பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும், செயலில் இல்லாத சொத்துக்கள் எந்தத் திட்டங்களினால் உருவானதோ அதன் ரிஸ்க் அம்சங்களைக் குறைக்க வேண்டும். மீட்புத் திட்டங்களை வலுப்படுத்துவதோடு அரசிலிருந்து பொதுத்துறை வங்கிகளை அன்னியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு கூறினார் ரகுராம் ராஜன்.

செயலில் இல்லாத சொத்துக்களை அடையாளம் கண்டவர் ரகுராம் ராஜன் தான், அதற்கான தீர்வுகளையும் முயன்றவர் என்று முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறியதையடுத்து நாடாளுமன்றக் குழு ரகுராம் ராஜனை அதுகுறித்து கருத்துகளை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.