• :
  • :
களத்தில்

ஜெ க்கு 120 முறை பிசியோதெரபி சிகிச்சை

ஜெ க்கு 120 முறை பிசியோதெரபி சிகிச்சை

'அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த போது, ஜெயலலிதாவுக்கு, 120 முறை, 'பிசியோதெரபி' சிகிச்சை அளிக்கப்பட்டது' என, டாக்டர் ராஜ் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

A.D.M.K,Jayalalithaa,அ.தி.மு.க,ஜெயலலிதா,120 முறை,பிசியோதெரபி,சிகிச்சை


ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம், அப்பல்லோ மருத்துவமனை பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் ராஜ் பிரசன்னா, தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் விக்னேஷ் ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம், 2 மணி நேரம் விசாரணை நடந்தது.

கடந்த, 2016 செப்., 29ல், ஜெ.,க்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்க, ராஜ் பிரசன்னா சென்று உள்ளார். அப்போது, ஜெ., உடல் நிலை, சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நிலையில் இல்லை. அவர் உடல்நிலை சரியான பின், அக்., 2 முதல், ஜெ.,க்கு பிசியோதெரபி பயிற்சி கொடுத்துள்ளார். மொத்தம், 59 நாட்களில், 120 முறை, சிகிச்சை அளிக்கப்பட்டதாக, அவர் கூறியுள்ளார்.

டாக்டர் விக்னேஷிடம், தீவிர சிகிச்சை பிரிவில், ஜெ.,க்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், 'செயற்கை மூச்சு குழல் பொருத்தப்பட்ட பின்னும், அவர் சுயமாக சுவாசித்தார். இரவு நேரங்களில் மட்டும், ஐந்து மணி நேரம், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது' என, தெரிவித்துள்ளார்.

கவர்னர் அக்கறை காட்டாதது ஏன்?


சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது உடல்நிலை குறித்து, அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ், ஐந்து முறை, மத்திய அரசுக்கு, அறிக்கை அனுப்பி உள்ளார்.

இது தொடர்பாக, செப்., 11ல் விசாரணைக்கு ஆஜரான, கவர்னரின் செயலராக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரமேஷ்சந்த் மீனாவிடம், விசாரணை கமிஷனில், சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

* கவர்னர், முதன் முறையாக, 2016 அக்., 1ல், மருத்துவமனைக்கு சென்றபோதே, ஜெ., உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் யாரும் இல்லாத நிலையில், மாநில முதல்வராக இருந்தவருக்கு, மேல் சிகிச்சை அளிக்க, ஏன் கவர்னர் பரிந்துரை செய்யவில்லை?


* ஜெ., கவலைக்கிடமாக இருந்த நிலையிலும், மருத்துவமனை அறிக்கையில், ஜெ., நலமாக இருந்ததாக தெரிவித்தது குறித்து, கவர்னர் ஏன் விசாரிக்கவில்லை?

* ஜெ., உடல்நிலை தொடர்பாக, இருவர் பொது நல வழக்கு தொடர்ந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து, கவர்னர் மாளிகை ஏன் அக்கறை காட்டவில்லை?

* எதிர்க்கட்சி தலைவர் அழுத்தம் கொடுத்த பின்னர் தான், முதல்வரின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன. அதை, ஏன் முன் கூட்டியே செய்யவில்லை?

* கவர்னர், யார் கொடுத்த தகவல் அடிப்படையில், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார்?

இவ்வாறு சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கேள்விகளுக்கு, 'தெரியவில்லை' என்றே, கவர்னராக வித்யாசாகர் ராவ் இருந்த போது, அவரது செயலராக இருந்த, ரமேஷ்சந்த் மீனா பதில் அளித்துள்ளார்.