• :
  • :
களத்தில்

விமோசனம் குப்பையில் இருந்து மூவரசம்பட்டு ஏரிக்கு நலச்சங்கத்தினர் பல ஆண்டு முயற்சிக்கு வெற்றி

விமோசனம் குப்பையில் இருந்து மூவரசம்பட்டு ஏரிக்கு நலச்சங்கத்தினர் பல ஆண்டு முயற்சிக்கு வெற்றி

மூவரசம்பட்டு ஏரியில், 20 ஆண்டுகளாக கொட்டப்பட்டு, மலை போல குவிந்திருந்த பல ஆயிரம் டன் குப்பை, நலச்சங்கத்தினரின் நீண்ட நாள் போராட்டத்தின் பலனாக அகற்றப்பட்டு வருகிறது.மடிப்பாக்கம் அடுத்துள்ளது, மூவரசம்பட்டு ஏரி. 200 ஏக்கர் பரப்பளவு உள்ள, இந்த ஏரி, சுற்றுவட்டார பகுதி விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்கியது. மேலும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கியது.கடந்த, 40 ஆண்டுகளில், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து, இந்த ஏரியும் தப்பவில்லை. ஏரி நிலத்தை கூறு போட்டு, அப்பாவிகளிடம் விற்பனை செய்தனர். இதனால், ஏரியின் பரப்பளவு சுருங்கியது. ஏரி பராமரிப்பு என்பதும்இல்லாமல் போனது.பொதுமக்கள் சுகாதாரத்தையும், நீர்நிலையை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே, மூவரசம்பட்டு ஏரியில், 20 ஆண்களுக்கு முன், குப்பை கொட்ட துவங்கியது. பொதுப்பணித்துறையும், இதை கண்டுக்கொள்ளவில்லை.மேலும், சுற்றுவட்டார குடியிருப்புகளின் கழிநீர் சேகரிப்பு மையமாகவும், இந்த ஏரி மாறியது.அவ்வூர் நலச்சங்கத்தினர், கிராம சபை கூட்டங்களில், ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என, குரல் எழுப்பினர். ஆனால், ஊராட்சி நிர்வாகமே, அங்கு குப்பை கொட்டுவதால், செவிடன் காதில் ஊதிய சங்காகிப்போனது.இந்நிலையில், ஏரியை காப்பாற்ற போராடி வரும் சபரி பசுமை அறக்கட்டளை அமைப்பு, 2015ல், அவ்வூர் பொதுமக்கள் உதவியுடன், 3.5 லட்சம் ரூபாய் நிதியில், ஏரியை சுத்தப்படுத்தி, கரைகளை ஒழுங்குபடுத்தியது. மேலும், மூவரசம்பட்டு ஏரியில், குப்பை கொட்டுவதை தடுக்க, பசுமை தீர்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பலனாக, ஏரியில் குப்பை கொட்டுவதை, ஊராட்சி நிர்வாகம் நிறுத்தியது. மேலும், ஏரியில் உள்ள குப்பையை அகற்றுவதற்கு, பல்வேறு முயற்சிகளை, சமூக நல விரும்பிகள் மேற்கொண்டனர்.இந்நிலையில், பசுமை தீர்ப்பாய உத்தரவு ஒன்றின் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், இந்த ஏரியை நேரில் ஆய்வு மேற்கொண்டு, குப்பையை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து, மூவரசம்பட்டு ஏரிக்கு, தற்போது விமோசனம் பிறந்துள்ளது.இரண்டு நாட்களாக, மூவரசம்பட்டு ஏரியில் உள்ள, குப்பை முழுவதுமாக அகற்றப்பட்டு வருகிறது. தினமும், 50க்கும் மேற்பட்ட லாரிகளில் குப்பை அகற்றப்பட்டு, ஒரகடம் பகுதியில் உள்ள, அரசுக்கு சொந்தமான, 5.5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில், குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி, அங்கு மேற்கொள்ளப்பட உள்ளது.-ஏரியை காப்பாற்ற செய்ய வேண்டியது என்ன?மூவரசம்பட்டு ஏரியில், ஏராளமான கருவேல மரங்கள், செடிகள் வளர்ந்துள்ளன. அவற்றை அகற்றி, ஏரியை துார் வாரி சுத்தப்படுத்த வேண்டும்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஏரியில் விடும் கழிவுநீரை, தடுக்க வேண்டும்ஏரி கரைகளை பலப்படுத்த வேண்டும்ஏரிக்கு, நீர் வரத்து பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மூவரசம்பட்டு ஏரியில் இருந்து, மடிப்பாக்கம் ஏரிக்கு செல்லும், போக்குக் கால்வாயை மீட்டு, சீரமைக்க வேண்டும்