• :
  • :
களத்தில்

டிரைவிங் லைசென்ஸ் சென்சார் ஓடுபாதை விரிவாக்கம்

டிரைவிங் லைசென்ஸ் சென்சார் ஓடுபாதை விரிவாக்கம்

டிரைவிங் லைசென்ஸ்' வழங்குவதற்கான பரிசோதனைக்காக, கரூரில் அறிமுகம் செய்யப்பட்ட, 'சென்சார்' ஓடுபாதை திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதால், மேலும், 13 ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு விரிவுபடுத்த, தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், சாலை விபத்துகளில் இறப்போர் எண்ணிக்கை அதிகரித்ததால், விபத்துகளை கட்டுப் படுத்தும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக போக்குவரத்து துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, விபத்து மற்றும் உயிரிழப்புக்களை குறைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில், 'ஆட்டோமேட்டடு டெஸ்டிங் டிராக்' என்ற, கணினி மயமாக்கப்பட்ட, சென்சார் ஓடு பாதை அறிமுகம் செய்யப்பட்டது. டிரைவிங் லைசென்ஸ் பெற வருவோர், இந்த சென்சார் ஓடு பாதையில், வாகனத்தை ஓட்டி காண்பிக்கும் போது, அவர்கள் செய்யும் தவறுகளை, கேமராக்களும், ஓடுபாதையில் உள்ள சென்சார்களும் கண்காணிக்கும்.
கணினி திரை : இந்த விபரங்களை, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள, கணினி திரையில் காண முடியும். அப்போது, வாகனம் ஓட்டுபவர் செய்யும் ஒவ்வொரு தவறையும், 'பீப்' ஒலி எழுப்பி உணர்த்துவதோடு, தவறு குறித்து, திரையில் வட்டமிட்டும் காட்டப்படும். டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கான, இந்த புதிய தேர்வு முறை துல்லி யமாக இருப்பதால், முன்பை விட, 30 சதவீதம் பேர் மறு தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். இதனால், நன்றாக பயிற்சி பெற்று, வாகனத்தை ஓட்டிக் காட்டுவோருக்கு மட்டுமே, லைசென்ஸ் வழங்கப்படுகிறது. தரமான டிரைவர்கள் லைசென்ஸ் பெறுவதால், விபத்துகள் மற்றும் உயிர் இழப்புக்கள் குறையும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள், நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, போக்குவரத்து துறை கமிஷனர், சமயமூர்த்தி கூறியதாவது: வழக்கமாக, டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான தேர்வுக்கு வருபவருடன், மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்ந்துஇருப்பார். அவர், வாகனத்தை ஓட்டு பவர் செய்யும் தவறுகளை கவனிப்பார். இதனால், ஓட்டுபவர் பதட்டமடைய வாய்ப்பிருக்கும். மேலும், மோட்டார் வாகன ஆய்வாளரால், அனைத்து தவறுகளையும், துல்லியமாக கண்காணிக்க முடியாது. இதை தவிர்க்க, 'ஆட்டோமேட்டடு டெஸ்டிங் டிராக்' எனப்படும், சென்சார் பொருத்தப்பட்ட, நவீன ஓடுபாதை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில், சிறு தவறும் துல்லியமாக கண்காணிக்கப்படுகிறது. அதனால், திறமையாக வாகனம் ஒட்டுபவருக்கு மட்டுமே, லைசென்ஸ் கிடைக்கும்.
தரமான டிரைவர்கள் : இந்த நடைமுறை அமலான பின், பெரும்பாலான ஓட்டுனர் பயிற்சி பள்ளியினர், வாகன ஓட்டிகளுக்கு லைசென்ஸ் பெற, கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை தவிர்த்து, அருகில் உள்ள, மணிமங்கலம், ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு சென்றனர். இந்தத் தகவல் கிடைத்ததும், மணிமங்கலம், ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு, லைசென்ஸ் பெற வருவோரையும், கரூருக்கு அனுப்பும்படி தெரிவித்தோம். தற்போது, தரமான டிரை வர்களுக்கு லைசென்ஸ் வழங்குகிறோம் என்ற திருப்தி உள்ளது.கரூரை தொடர்ந்து, விரைவில், சென்சார் ஓடுபாதை திட்டத்தை, மேலும், 13 ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு விரிவுபடுத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.