img/728x90.jpg
நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் இதுவரை யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் இதுவரை யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்த பணிகள் யார் யாருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளன? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கொடுக் கப்பட்ட புகார் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்து வருகிறார். இந்த வழக்கு கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, ‘மனுதாரரின் புகாரின் அடிப்படையில் போலீசார் இதுவரை மேற்கொண்டுள்ள புலன்விசாரணை குறித்த அறிக்கையை ‘சீலிடப்பட்ட கவரில்’ தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் விசாரணையின் விவரங்களை கொண்ட ரகசிய அறிக்கையை, நீதிபதியிடம் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வழங்கினார்.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, ‘அரசின் ஒப்பந்த பணிகளை வழங்கும் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின், உறவினர்களுக்கு ஒப்பந்த பணிகள் வழங்கக்கூடாது என்று உலக வங்கியின் விதிமுறைகள் தெளிவாக கூறுகின்றன. ஆனால், நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்த பணிகளை வழங்கும் குழுவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். அவரது உறவினர்களுக்கு ஒப்பந்த பணி வழங்கப்பட்டுள்ளது. இது உலக வங்கி விதிமுறைகளை அப்பட்டமாக மீறிய செயலாகும்’ என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக வாதிட்ட அட்வகேட் ஜெனரல், ‘இந்த ஒப்பந்த பணிகளை பெற்றுள்ள நிறுவனங் கள் எல்லாம், 1991-ம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்த பணிகளை பெற்று வருகின்றன. இந்த ஒப்பந்த நிறுவனமோ, ஒப்பந்ததாரர்களோ திடீரென வந்து விடவில்லை. பல ஆண்டுகளாக ஒப்பந்த பணிகளை எடுத்து வருகின்றனர். ஒரு வேளை மனுதாரர் தரப்பில் கூறப்படுவதுபோல, உலக வங்கியின் விதிகள் மீறப்பட்டிருந்தாலும், அது கிரிமினல் குற்றம் அல்ல. அது ஒரு சிவில் பிரச்சினையாகத்தான் கருத முடியும்’ என்றார்.

அதற்கு மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல், ‘பல ஆண்டுகளாக ஒப்பந்த பணிகளை இவர்கள் பெற்றிருந்தாலும், உலக வங்கியின் விதிகளின்படி அவர்கள் ஒப்பந்த பணிகளை பெற தகுதி இல்லாதவர்களாக மாறி விடுகின்றனர். சிவில் குற்றமாக இருந்தாலும், அது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம்தான்’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ‘நெடுஞ்சாலை துறையின், ஒப்பந்த பணிகளை வழங்கும் குழு, வழிக்காட்டு குழு ஆகிய குழுக்கள் எப்போது உருவாக்கப்பட்டன?, அந்த குழுக்களில் உறுப்பினர்களாக யார் எல்லாம் உள்ளார்கள்? குழுக்களின் தலைவர் யார்?, இந்த குழு இதுவரை யாருக்கு எல்லாம் ஒப்பந்த பணிகளை வழங்கியுள்ளன?, அந்த ஒப்பந்த பணிகள் எப்போது வழங்கப்பட்டன? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக அரசு தரப்பில் தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இந்த அறிக்கையை தாக்கல் செய்ய அட்வகேட் ஜெனரல் கால அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணையை 26-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்.