img/728x90.jpg
பார்டரை தாண்டினால் தி.மு.க-வுக்கு முகவரி கிடையாது - பொதுக்கூட்டத்தில் கொந்தளித்த தமிழிசை

பார்டரை தாண்டினால் தி.மு.க-வுக்கு முகவரி கிடையாது - பொதுக்கூட்டத்தில் கொந்தளித்த தமிழிசை

ச்சியில் நடந்த அமைப்புச் சாரா தொழிலாளர்களின் மாநில மாநாட்டுக் கூட்டத்தில் தமிழிசை கீழிறங்கியதும் பொன்.ராதாகிருஷ்ணன் மேடையேறியது பி.ஜே.பி-யினரை அதிர்ச்சியடைய வைத்தது.
பாஜக
 
திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புச் சாரா தொழிலாளர்களின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
 
கூட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஒய்வூதியத் தொகை ரூ.1,000-ஐ, ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகை போன்று அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
மேடையில் தமிழிசை செளந்தரராஜன், ``விடுதலைப் புலிகளை அழிக்க காங்கிரஸ் உதவியதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார். போர் நடைபெற்ற காலத்தில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தது. இதை விடுத்து வைகோ பா.ஜ.க-வை அப்புறப்படுத்துவோம் எனக் கூறி வருவது அவரது அரசியல் நடிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தமிழிசை
மத்திய அரசாங்கம் தமிழகத்துக்கு பல்வேறு கோடி ரூபாய்களை வாரி வழங்கியுள்ளதை குறிப்பாக ரூ.450 கோடி தூய்மை இந்தியா திட்டத்துக்கும் ரூ.623 கோடி நதிகளை சுத்தப்படுத்த, துறைமுகங்களை மேம்படுத்த 2,800 கோடி ரூபாய் என இதுவரை தமிழகத்துக்கு மட்டும் 5 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மத்திய பா.ஜ.க அரசின் சாதனைகள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது தமிழகத்துக்கு தி.மு.க கொண்டு வந்த திட்டங்கள் எவை?
 
ஸ்டாலின்  தமிழகத்தில் என்ன கொண்டு வந்தீர்கள் எனக் கேட்கிறார்.  தமிழகத்தில் எய்ம்ஸ் உங்களால் கொண்டுவர முடிந்ததா? காவிரியையும் எய்ம்ஸையும் கொண்டுவந்தது மோடிதான். திருச்சி உட்பட 5 மாவட்டங்களில் ராணுவத் தளவாட தொழிற்சாலை உண்டாக்கியது மோடிதான். முத்ரா வங்கியில் தமிழகத்தில் மட்டும் பயன்பெற்றவர்கள் 1.30 கோடி பேர்.
 
வெளிநடப்புச் செய்வது மட்டும்தான் ஸ்டாலின் வரலாறு. ஸ்டாலினுக்கு டைம் சரியில்லை. பெரியவர் போனபிறகுதான் அவருக்கு தலைவர் பதவி கிடைத்தது. பெரியாரின் சிலை மீது யாரோ ஒருவர் செருப்பு வீசியதற்கும் பா.ஜ.க-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அண்ணன் ஹெச்.ராஜா பேசியதால்தான் செருப்பு வீசினார்கள் என்றால் பா.ஜ.க பேசுவதைதான் மக்கள் கேட்கிறார்களா. பார்டரை தாண்டினால் தி.மு.க-வுக்கு முகவரி கிடையாது. இவர்கள் 22 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வை அழிக்கப் போகிறார்களாம்.
 
ஜன்தன் திட்டத்தில் சேர்த்தால் மக்களுக்கு 2 லட்சம் கிடைக்கும். பெட்ரோலை முதன்முதலில் குறைத்தது ராஜஸ்தான் பா.ஜ.க அரசு தான். ஜி.எஸ்.டி-க்குள் வந்ததானால்  பருப்பு, பால் விலை குறைந்துள்ளது. மக்களைப் பற்றி கவலைப்படாத முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தலைவராக இருப்பதுதான் சிரிப்பாக உள்ளது. நேற்று வரை காங்கிரஸ் ஜெயிக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், முற்றிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிடும். இந்துக்கள் அமைதியானவர்கள். காவியை இங்கு பரவ விடமாட்டோம் என நீங்கள் சொல்லச் சொல்ல தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்" என முடித்தார்.
 
தமிழிசை பேசி முடித்ததும் மேடையை விட்டு இறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் என்ட்ரி கொடுத்தார். அவரை குட்டிக் காமராஜரே என வாழ்த்தினர்.பொன். ராதாகிருஷ்ணன் அடுத்து பேசிய பொன் ராதாகிருஷ்ணன், ``தமிழக பா.ஜ.க வரலாற்றில் அழிக்க முடியாத நிகழ்வில் இது மறக்க முடியாத நிகழ்வு. விஸ்வகர்மா ஜயந்தி தினத்தில், இந்திய அரசியல் எப்படி அமைக்கப்பட வேண்டும் என நினைக்கிற இன்னொரு விஸ்வகர்மா மோடியின் பிறந்தநாளில் இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு  மத்திய அரசு தொடர்ந்து மிகப் பெரிய ஆதரவு கொடுத்து வருகிறது. இதை அரசியல் ஆதரவோடு பார்க்காதீர்கள். தமிழகத்துக்காக 758.6 லட்சம் கோடி கிராம உள்ளாட்சி மேம்பாட்டுக்காகவும், நகர்ப்புற வளர்ச்சிக்காக  631.98 லட்சம் என மொத்தம் ரூ.1,400 கோடி உள்ளாட்சி மேம்பாட்டுக்காக ஒதுக்கி இருக்கிறது.
 
தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 93 சதவிகிதம் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் அமைப்புச் சாரா தொழிலாளர், அவர்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்தார். ஆம் ஆத்மி யோஜனா காப்பீடு  திட்டத்தின் மூலம்  அடிப்படையில் தொழிலாளர், தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆரோக்கிய மேம்பாட்டுக்காகவும், உடல் பாதிப்புக்கான இழப்பீடு ஆகிய அம்சங்கள் இருக்கின்றது.
 
முதியோர் மேம்பாட்டுக்காக அடல் பீமா யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கொத்தடிமைத் திட்டத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர் திட்ட ஒழிப்புக்காகவும் மத்திய அரசு செயல்படுகிறது. அரசு கொண்டு வந்த திட்டங்கள் மக்களுக்குப் பயன்படுவதை பா.ஜ.க தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.
 
மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இந்தியாவில் தொழிற்சாலைகள் உருவாகி இருக்கிறது. இன்று மோடி அரசின் சார்பில் டிபென்ஸ் காரிடர் தமிழகம் முழுவதும் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிறைய தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலைகள் பார்த்தால் பாரதிய ஜனதா கூட்டணிக்காக ஏங்கி வருவதுபோல கூறுகிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணிக்காக ஏங்கும் நிலை இல்லை. பா.ஜ.க எந்த முடிவு எடுக்கிறதோ அந்த முடிவின் அடிப்படையில் தமிழக அரசியலின் சரித்திரம் இருக்கும். 130 கோடி பேர் வாழும் நாட்டில் பிரதமர், பா.ஜ.க பற்றி அவமானமாக, ஏளனமாக பேச என்ன யோக்கிதை அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது.
 

பா.ஜ.க.வுக்கு மட்டும் கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. எத்தனை தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. விளைநிலங்கள் நிலைமை என்ன. விவசாயம் பரப்பு கூடி இருக்கிறதா, குறைந்துள்ளதா..? 150 ஆண்டுகால காவிரி பிரச்னை கழக அரசுகளால் தீர்க்கப்பட்டுள்ளதா. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் நீர் தரும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து முறை முதல்வரோ, ஆறு முறை முதல்வரோ என்ன செய்தீர்கள். தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ளது. தொழிற்சாலைகள் ஏன் மற்ற மாநிலங்களுக்குச் செல்கிறது? தி.மு.க மத்தியில் அங்கம் வகித்தபோது ஸ்டெர்லைட், நீட் போன்றவை துவக்கப்பட்டது. எல்லாப் பிரச்னைகளும் பா.ஜ.க மீது திணிக்கப்படுகிறது.

பெரியார் சிலையின் மீது செருப்பு வீசியது மகிழ்ச்சி தரக் கூடிய விஷயம் அல்ல. தமிழ் தீவிரவாத அமைப்புகள் இங்கு பெரியாருக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்களை நடத்தி வருகிறது. பா.ஜ.க எந்த கட்சிகளையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க மாட்டோம். திராவிட கொள்கைகள் செத்து விட்டன. இதை மீட்க முடியாது. தமிழ் சமூகம் திராவிட கொள்கைகளை குழி்தோண்டி புதைக்க தயாராகி வருகிறார்கள். பா.ஜ.க கொள்கை, கோட்பாடுகள், லட்சியங்களை மக்களிடம் சொல்ல வேண்டிய தருணம் வந்திருக்கிறது. ஏனென்றால் தி.மு.க, அ.தி.மு.க, தமிழ் தீவிரவாத அமைப்புகளால் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த முடியாது. மக்களை நாம் சந்திக்கத் தயாராக வேண்டும். பா.ஜ.க-வால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும். தமிழக மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று சொன்னால் பா.ஜ.க ஆட்சிக்கு வர வேண்டும்.

தமிழகத்தின் மீது அதிக அக்கறை கொண்ட கட்சி பா.ஜ.க. மன்மோகன் சிங் ஒரு முறையாவது தமிழில் பேசி இருப்பாரா. உலகில் வாழும் அனைத்து தமிழர்களுக்காகவும் பேசுகிறவர் பிரதமர் நரேந்திர மோடி. தமிழ் மொழி உலகை ஆள வேண்டும் என மோடி விரும்புகிறார்.

புதுச்சேரி மற்றும் தமிழகம் தவிர எங்கும் தமிழ் இல்லை. ஆனால், முதலமைச்சர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது,  எல்லோருக்கும் தமிழ் வார்த்தைகள் நூறு தெரிய வேண்டும் எனச் சொன்னார். உலகில் இருக்கிற மிகப் பழைமையான மொழி எனவும், சம்ஸ்கிருத மொழியை விட  தமிழ் பழைமையானது என குறிப்பிட்ட முதல் பிரதமர் மோடி என கூறினார்.

இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு முழு ஆதரவு அளிப்பது மோடி அரசு. தமிழ் உலகை ஆள வேண்டும் என்றால் மோடியால் மட்டுமே முடியும். எட்டு கோடி தமிழர் வாழ்வு நலம் பெற தமிழை வாழ வைக்க பா.ஜ.க வெற்றி பெற வேண்டும். பா.ஜ.கவை ஆதரிப்பவர்கள் தமிழுக்கு ஆதரவு தருபவர்கள், தமிழை வாழ வைக்க விரும்புகிறார். தமிழ்ச் சமுதாயமே குனியக் குனிய குட்டும் கழகங்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கலாசாரத்தின் பொக்கிஷம் தமிழகம்" என முடித்தார்.