• :
  • :
களத்தில்

8 வழிச் சாலை திட்டத்திற்கு திட்டப் பணிகளின்போது பொது மக்களை துன்புறுத்தக்கூடாது

8 வழிச் சாலை திட்டத்திற்கு திட்டப் பணிகளின்போது பொது மக்களை துன்புறுத்தக்கூடாது



 சேலம் 8 வழிச் சாலை திட்டத்திற்கு திட்டப் பணிகளின்போது பொது மக்களை துன்புறுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய பொதுநல வழக்குகள் மற்றும் நில உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவின்படி, 8 வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளை அட்டவணையாக ((Flow Chart)) மத்திய அரசு சாலை போக்குவரத்துத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
 

அதைப் பார்த்த நீதிபதிகள், 8 வழிச் சாலை திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு முன்பே நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் தொடங்கியது குறித்தும், மக்களிடம் கருத்து கேட்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது, நிலங்களை உட்பிரிவு செய்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.

8 வழிச் சாலை திட்டத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும், ஒருவேளை இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்காவிட்டால் திட்டத்தைத் தொடர முடியாது என்ற சட்ட விதிகள் உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தர்மபுரி மாவட்டம் அரூரில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக 1,200 மரங்களை நடவுள்ளதாகத் தெரிவித்தார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நீதிமன்ற உத்தரவை மீறி செய்யாறு பகுதியில் காவல் துறையால் மக்கள் துன்புறுத்தப்படுவதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து, திட்டப் பணிகளின் போது நிலம் கொடுக்க விரும்பாத அல்லது ஆட்சேபனை கூறும் பொதுமக்களை துன்புறுத்தக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், இதுகுறித்து அந்தந்த மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அதிகாரி கண்காணிக்க முடியுமா என தெரிவிக்கவும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, வழக்கின் விசாரணை செப்டம்பர் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.