• :
  • :
களத்தில்

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாரா?

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாரா?

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், ஊராட்சி அளவிலான திட்டங்கள் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழக அரசு மீது எழுந்துள்ளது.

வடதமிழகத்தில் 2015 -ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளமும், அடுத்த ஆண்டுகளில் வந்த புயலையும் மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். இன்னும் சில தினங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. தமிழக அரசும் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 4,000 இடங்கள் மழைநீர் தேங்கும் வாய்ப்புள்ள இடங்களாக அரசு கண்டறிந்துள்ளது. இதில், காஞ்சிபுரத்தில்தான் அதிக இடங்கள் (515) உள்ளன. சென்னையில் 306 இடங்கள் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. 

கனமழையின்போது, தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 321 இடங்கள் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கும் இடங்களாக அரசு இனம் கண்டுள்ளது. இதிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில்தான்  அதிகபட்சமாக 84 இடங்கள் உள்ளன. சென்னையில் 37 இடங்களும், திருவள்ளூரில் 29 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவித்தாலும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் காஞ்சிபுரத்தில் பெய்த மழையில் நெல்மூட்டைகள் அனைத்தும் நனைந்து சேதமாயின. அரசின் அலட்சியப்போக்கே இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

புகழேந்திஇது தொடர்பாகவும், அரசு எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாகவும் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தியிடம் பேசினோம்.  ``தமிழக அரசு, வடகிழக்குப் பருவமழை பாதிப்பை எதிர்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சிதான். இருப்பினும் இதை நடைமுறைப்படுத்தினால் தான் தீர்வு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மழை சேதத்தை சமாளிக்க ரூ.100.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், மாவட்ட ரீதியிலான திட்டம் இன்னமும் தயாராகவில்லை. வரும் 30-ம் தேதிக்குள் இந்தத் திட்டம் தயாராகலாம் என்று தெரிவிக்கிறது. இருப்பினும், ஊராட்சி அளவிலான திட்டங்கள் இன்னும் தயாரிக்கப்படவில்லை. அதனால் சாதாரண மக்களைப் பொறுத்தமட்டில் அரசு இன்னும் அலட்சியத்துடன்தான் செயல்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் மழைநீர் தேங்குவதற்குக் காரணமான செயற்கைக் காரணங்களை, ஆக்கிரமிப்புகளை, மழைநீர் வடிகால் முதலியவற்றைப் பத்திரிகை வாயிலாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். சமச்சீரற்ற வளர்ச்சி காரணமாக, நகர்ப்புறம் நோக்கி மக்கள் வருகிறார்கள். இதனால், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு நடக்கிறது. மத்திய ஆணையம் 1975-ம் ஆண்டிலே நகரின் மழைநீர் வழிந்தோடும் பகுதிகளை குறிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகச் சொல்லியிருந்தும், சென்னை மாநகர பெருநகரத் திட்டம் 2ல் கூட அதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதனால், பாதிக்கப்படும் மக்களான நாம் சிந்தித்துச் செயல்படவேண்டிய நேரம் இது” என்றார்.