img/728x90.jpg
ஆணழகன் போட்டியில் வென்ற தலைமைக் காவலருக்கு ஆணையர் பாராட்டு

ஆணழகன் போட்டியில் வென்ற தலைமைக் காவலருக்கு ஆணையர் பாராட்டு

 தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் 80 கிலோ எடை பிரிவில் தங்கம் மற்றும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற அடையாறு போக்குவரத்துக் காவல் நிலைய தலைமைக் காவலரை காவல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
சென்னை, அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் புருஷோத்தமன். இவர் கடந்த கடந்த மே மாதம் 20-ம் தேதி அன்று சென்னை நேரு விளையாட்டரங்கத்தில், தேசிய அமெச்சூர் பாடிபில்டிங் அசோசியேஷன் (National Amateur Body Building Association (NABBA))சார்பில் நடைபெற்ற மிஸ்டர் சென்னை ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
 
இதன் மூலம் கடந்த கடந்த 9-ம் தேதி அன்று, மேற்படி NABBA சார்பில் சென்னையில் நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் தலைமைக் காவலர் .புருஷோத்தமன் கலந்து கொண்டு, 80 கிலோ எடை பிரிவில் முதல் பரிசைப் பெற்று தங்கப்பதக்கம் மற்றும் இப்போட்டியின் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சென்னை பெருநகரக் காவல்துறைக்குப் பெருமை சேர்த்தார்.
 
சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், 8-வது முறையாக ஆணழகன் போட்டியில் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்ற அடையாறு போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் புருஷோத்தமனை இன்று (22.9.2018) நேரில் அழைத்து, வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.
 
மேலும், வருகிற அக்டோபர் மாதம் 7-ம் தேதி ராசிபுரத்தில் நடைபெற உள்ள அகில இந்திய ஆணழகன் போட்டியில் முதல் பரிசு பெற்று தங்கப்பதக்கம் வெல்வதற்கும் தலைமைக் காவலர் புருஷோத்தமனை வாழ்த்தினார்.
 
தலைமைக் காவலர் புருஷோத்தமன் 2002-ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிக்குச் சேர்ந்தவர். மேலும், இவர் கடந்த 2000 மற்றும் 2001 ஆகிய 2 ஆண்டுகள் மற்றும் 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் என மொத்தம் 7 ஆண்டுகள் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு 7 முறை மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர பல்வேறு பதக்கங்களைப் பெற்று தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.