img/728x90.jpg
மொகரம் தினத்தில் இந்துக்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன்

மொகரம் தினத்தில் இந்துக்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன்

 முஸ்லிம்களில் நீத்தார் நினைவு நாளான மொகரம் பண்டிகையை முன்னிட்டு சமய நல்லிணகத்தை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே பெரிய குளம் கிராமத்தில் இந்துக்கள் தீ மிதித்து மொகரம் பண்டிகையை நேற்று (சனிக்கிழமை) கடைப்பிடித்தனர்.
கர்பாலா என்ற இடத்தில் நபிகள் நாயகம் முகமதுவின் பேரனான இமாம் உசைன் குடும்பத்தினர் இஸ்லாமிய மத கட்டளையைப் பாதுகாக்கும் பொருட்டு போரில் தங்களின் இன்னுயிரை ஈந்து தியாகம் புரிந்த நாளே மொகரமாக முஸ்லிம்கள் ஒருபிரிவினர் கடைப்பிடிக்கின்றனர்.
 
முஸ்லிம்கள் மட்டுமே கொண்டாடுவதாக அறியப்பட்ட இந்த நீத்தார் பண்டிகையை காலம் காலமாக ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள பெரிய குளம் கிராமத்தில் இந்துக்களும் கடைப்பிடிக்கின்றனர் என்பது சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான ஒன்றாகும்.
 
நீண்ட காலங்களுக்கு முன்னர் பெரிய குளம் கிராமத்தில் குறைவான முஸ்லிம்களும், பெருவாரியான இந்துக்களும் வசித்து வந்தார்கள். ஒரு முறை இரு சமுதாயத்தினருக்கும் நடைபெற்ற மோதலில் மாமு நாச்சி என்பவரின் இரண்டு மகன்கள் இருவரும் கொல்லப்பட்டதால் மாமு நாச்சியும் தீயில் விழுந்து தன்னுயிரை மாய்த்துக்கொண்டாராம். அன்றிலிருந்து பல நாட்களுக்கு பெரியகுளம் கிராமமே கடும் பஞ்சத்தில் மூழ்கி பலருக்கு வாந்தி, பேதி, அம்மை நோய்களும் பரவியதாம். அப்போது கிராமத் தலைவர் தவமுனித்தேவரின் கனவில் தோன்றிய மாமு நாச்சி, பஞ்சம், நோய்களிலிருந்து காப்பாற்ற இரண்டு சமயத்தவரும் மொகரம் பண்டிகையில் இணைந்து பூக்குழி திருவிழாவை நடத்தச் சொன்னாராம். அதன்படி மாமு நாச்சிக்கு இந்துக்களே தர்ஹா கட்டி வழிபட்டு வருடந்தோறும் மொகரம் பண்டிகை அன்று இந்துக்கள் தீ மிதித்து வருகின்றனர்.
 
சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மாமு நாச்சி அம்மன் ஆலயம் முன்பு 15 அடி ஆழத்தில் குழி வெட்டி அதில் தீ வளர்த்து மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை கையில் பச்சை வெள்ளை பிறைக் கொடியை ஏந்தி ஆண்களும், சிறுவர்களும் பூர்த்தி செய்தார்கள்.
 
பெண்கள் அனைவரும் தீ மிதித்த பின்னர் முக்காடு போட்டுக்கொண்டு தங்கள் தலையில் தீ கங்குகளை அள்ளிக்கொட்டி பூ மெழுகுதல் என்ற நேர்த்திக் கடனை 'லாவுசே மாவுசே’ கோஷமிட்டு செலுத்தினர். அதனைத் தொடர்ந்து சப்பரம் ஊர்வலமும் மாமு நாச்சி அம்மன் ஆலயத்தை சுற்றி நடைபெற்றது.
 
முஸ்லிம்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் மொகரம் பண்டிகையை இந்து சமுதாயத்தைச் சேர்ந்த பெரிய குளத்து கிராம மக்கள் தீ மீதித்து நேர்த்திக் கடன் செலுத்துவது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்றால் மிகையல்ல.