• :
  • :
களத்தில்

மதுபோதையில் மனைவி 2 குழந்தைகளை எரித்துக்கொன்ற கணவன்

மதுபோதையில் மனைவி 2 குழந்தைகளை எரித்துக்கொன்ற கணவன்

 ஆத்தூர் அருகே 2 குழந்தைகளுடன் தீக்குளித்த தாயும், அவரது பெண் குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில், குழந்தைகள் மற்றும் மனைவி மீது கணவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தது குறித்து அவரது மனைவி அளித்த மரண வாக்குமூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
ஆத்தூரை அடுத்த செல்லியம்பாளையம் அழகாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (31) ஆழ்துளை கிணறு அமைக்கும் ரிக் வண்டித் தொழிலாளியாகப் பணிபுரிபவர். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த தண்டலை கிராமத்தை சேர்ந்த பூமதிக்கும் (26)  6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களது குழந்தைகள் பூவசரன் (4) மற்றும் நிலாஸ்ரீ (3).
 
மது அருந்தும் பழக்கம் கொண்ட கார்த்திக் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி வழக்கம்போல கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில் பூமதி தனது குழந்தைகள் பூவரசன், நிலாஸ்ரீ ஆகியோர் தீக்குளித்தனர். இதில் படுகாயமடைந்த பூமதி மற்றும் அவரது குழந்தைகள் உள்ளிட்ட மூவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூமதி, குடும்பத் தகராறு காரணமாக குழந்தைகளுடன் தான் தீக்குளித்ததாக மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தார். முதல் கட்ட விசாரணையைத் தொடர்ந்து தற்கொலை முயற்சி பிரிவின் கீழ் பூமதி மீதும், தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கார்த்திக் மீதும் ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
 
இதன்பின்னர் சிகிச்சை பெற்று வந்த பூமதியிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். அதில் பூமதி மற்றும் அவரது குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தது பூமதியின் கணவர் கார்த்திக் என்பது தெரியவந்தது.
 
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
 
''மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பூமதியிடம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தோம். சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வந்த கார்த்திக் தனது மனைவி பூமதியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பூமதி அவரது குழந்தைகள் மீது கார்த்திக் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த நிலையில், 108 ஆம்புலன்ஸில் பூமதி மற்றும் அவரது குழந்தைகளைக் கொண்டுவரும்போது, சம்பவம் குறித்து உண்மையை கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று பூமதியை கார்த்திக் மிரட்டியுள்ளார்.
 
அதில், பயந்துபோன பூமதி தனது முதல் வாக்குமூலத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார். பின்னர் குழந்தைகளின் நிலை அறிந்த அவர், மீண்டும் அளித்த வாக்குமூலத்தில் கணவர் கார்த்திக் தான் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார் என்று தெரிவித்துள்ளார்''.
 
இவ்வாறு அவர்கள் கூறினர்.
 
இதனிடையே, பூமதி அளித்த வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்தனர். இந்நிலையில் 4 நாட்களாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூமதியும், அவரது மகள் நிலாஸ்ரீயும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தனர்.
 
இதனால், தற்கொலை முயற்சி என்ற வழக்கினை கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்தனர். மேலும், தகவல் அறிந்தது தலைமறைவாகிவிட்ட கார்த்திக்கை போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே, பூமதியின் மகன் பூவரசன் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.