• :
  • :
களத்தில்

தமிழகத்தில் விவசாயப் பணிகளிலும் கால்பதித்த வட மாநிலத்தவர்கள்

தமிழகத்தில் விவசாயப் பணிகளிலும் கால்பதித்த வட மாநிலத்தவர்கள்

கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் நெல் நடவு செய்யும் பணியில் மேற்குவங்க விவசாய கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராமங்களில் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப் படுவதால், விவசாயப் பணி களுக்கு போதுமான ஆட்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச் சாட்டு இருந்து வருகிறது. எனவே, அத்திட்டத்தில் விவசாயப் பணிகளையும் சேர்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் வடமாநில தொழிலாளர் கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, இங்கு விவசாயப் பணிகளுக்கும் ஆட்கள் தேவை என்பதை அறிந்துகொண்டதால், வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு வந்து விவசாய கூலி வேலைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேட்டூர் அணையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் தண்ணீர் திறக்கப்பட்டதால், நிகழாண்டு கரூர் மாவட்டத்தில் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதையடுத்து, கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள கொம்பாடிப்பட்டிக்கு மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 42 ஆண் விவசாய கூலித் தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் வந்து தங்கியுள்ளனர்.

அவர்கள், நெல் நடவுப் பணி களை மட்டும் ஒப்பந்த முறையில் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு ஏக்கர் நெல் நடவுக்கு ரூ.4,000 கூலியாக பெறுகின்றனர்.

பொதுவாக உள்ளூரில் பெண் கள் நெல் நடவுப் பணிகளை மட்டுமே செய்வார்கள். அவர் களுக்கு நாற்றுகளைப் பறித்துத் தர வேண்டும். உரமிடும் பணி களையும் தனியாக மேற்கொள்ள வேண்டும். கூடுதல் நேரம் பணி யாற்ற தனியாக கூலி அளிக்க வேண்டும். ஆனால், மேற்குவங்க தொழிலாளர்கள் அவர்களே நாற்று களைப் பறித்து, உரமிட்டு நடவுப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

15 பேர் கொண்ட குழுவினர், ஒரு நாளில் 4 முதல் 5 ஏக்கர் நடவு செய்கின்றனர். கயிறு கட்டி மிக நேர்த்தியாக நடவுப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

கடந்த இரு வாரங்களில் பிள்ளபாளையம், மகாதானபுரம், கொம்பாடிப்பட்டி, மருதூர், மகிளிப்பட்டி என சுற்று வட்டார கிராமங்களில் 150 ஏக்க ருக்கு மேல் நடவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியபோது, “மேற்குவங்க தொழிலாளர்கள், அவர்களே நாற்றுகளைப் பறித்து, உரமிட்டு, நடவு செய்கின்றனர். பணிகளையும் துரிதமாக, நேர்த்தியாக மேற்கொள்வதால் திருப்தியாக உள்ளது” என்றனர்.

மேற்குவங்க விவசாய கூலித் தொழிலாளர்கள் அரவிந்த் சர்க்கார், சந்தோஷ் சர்க்கார் ஆகியோர் கூறியபோது, “பல ஆண்டுகளாக நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். சீசனில் குறிப்பிட்ட மாநிலங்களுக்குச் சென்று நடவுப் பணிகளை மேற்கொள்வோம். நிகழாண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டு, இப்பகுதியில் விவசாயப் பணிகள் நடைபெறுவதால், இங்கு வந்து நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.