img/728x90.jpg
ஓட்டுநரின் மடமையினால் அப்பாவி மாணவர் பலி

ஓட்டுநரின் மடமையினால் அப்பாவி மாணவர் பலி

 கடற்கரைச்சாலையில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய சாலை விபத்தில் மாணவர் உயிரிழந்தார். அஜாக்கிரதையான ஓட்டுநர் ஒருவரால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 
சென்னை மண்ணடியை சேர்ந்தவர் அல்முசமில் (20). சட்டக்கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இவர், நேற்றிரவு 10 மணியளவில் தனது நண்பருடன் மெரினா கடற்கரை அருகே உணவருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
 
கடற்கரை காமராஜர் சாலையில் அவர் இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் வெளியே வந்த ஒரு நபர் நிதானமாக வெளியே வராமல் நேராக உள்ளிருந்து வேகமாக சாலையில் வந்து இணைந்துள்ளார்.
 
இதனால் அவரது வாகனம் அல்முசமிலின் வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அல்முசமிலுக்கு தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. உடன் வந்த நண்பருக்கு லேசாக காயம் ஏற்பட்டுள்ளது.
 
விபத்தில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அல்முல்சமிலை மருத்துவமனை கொண்டுச்செல்ல ஆம்புலன்ஸ் போன் செய்துள்ளனர். ஆனால் சென்னையின் பிரதான சாலையான கடற்கரைச்சாலைக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வரவில்லை என்று கூறப்படுகிறது.
 
பின்னர் வந்த ஆம்புலன்ஸ் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றும் அங்கு அலைகழிக்கப்பட்டு கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அல்முல்சமில் பரிதாபமாக பலியானார். அவரது நண்பர் சிறு காயத்துடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்த விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், அல்முல்சமில் ஹெல்மட் அணியாததும், பொதுபணித்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த நபர் அலட்சியமாக வந்து மோதியதுமே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.