img/728x90.jpg
அம்பத்தூரில் சிசிடிவி விழிப்புணர்வு முகாம் பொதுமக்கள் நிதி உதவி

அம்பத்தூரில் சிசிடிவி விழிப்புணர்வு முகாம் பொதுமக்கள் நிதி உதவி

 அம்பத்தூரில் அம்பத்தூர் சரக காவல்துறை சார்பாக சிசிடிவி விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது சிசிடிவி அமைக்க வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் கூடுதல் ஆணையர் தினகரனிடம் நிதி உதவி அளித்தனர்.

 
சென்னை மாநகரில் குற்றங்களை கண்டறிவதில் சிசிடிவி கேமராக்களின் பங்கு அளப்பறியது. எனவேதான் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சென்னை முழுதும் சிசிடிவி பொருத்தும் திட்டத்தை காவல்துறையில் கொண்டுவந்துள்ளார். இதற்கான விழிப்புணர்வு கூட்டங்கள் அனைத்து துணை ஆணையர்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கிறது.
 
தொழிலதிபர்கள், வியாபார, கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் உதவியுடன் சிசிடிவி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் பூக்கடை காவல் மாவட்ட எல்லைக்குள் இருக்கும் யானைக்கவுனி காவல் நிலைய எல்லை முழுதும் 100 சதவிகித சிசிடிவி அமைப்புக்கு கீழ் கொண்டுவரப்பட்டது.
 
இதை கூடுதல் வடக்கு மண்டல ஆணையர் தினகரன் முன்னிலையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று அம்பத்தூர் மாவட்ட சரக காவல்துறை சார்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அய்மா சென்டரில் சிசிடிவி பொருத்துவதற்கான விழிப்புணர்வு கூட்டத்தை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
 
இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதியில் இருந்து ஏற்கனவே சிசிடிவி பொருத்தி பயன் அடைந்தவர்கள் அவர்களுடைய கருத்துகளை பதிவு செய்தனர். அம்பத்தூர் பகுதியில் உள்ள தொழில் நிறுவனத்தார் அம்பத்தூர் பகுதியில் சிசிடிவி அமைப்பதற்கான உதவி தொகையை நன்கொடையாக வழங்கினர்.
 
இதில் பல்வேறு வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தோர் லட்சக்கணக்கில் நிதியுதவி அளித்தனர். இன்று நடைப்பெற்ற கூட்டத்தில் கிடைத்த தொகைகளை கொண்டு சிசிடிவி கேமராக்கள் அவசியம் தேவைப்படும் பகுதிகளில் காவல்துறை சார்பாக சிசிடிவி அமைக்கப்படும் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இந்நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்(வடக்கு) தினகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன், உதவி ஆணையர்கள் கண்ணன், இராதாகிருஷ்ணன், சந்திரசேகர், ஜெயராமன் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.