• :
  • :
களத்தில்

தமிழக எல்லை அருகே தலைதூக்கும் நக்சல்கள்

தமிழக எல்லை அருகே தலைதூக்கும் நக்சல்கள்

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில், நக்சலைட்கள் நடமாட்டம் அதிகரித்ததன் காரணமாக, நீலகிரி எல்லையில், தீவிர கண்காணிப்பு பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.கேரளா மாநிலம், மலப்புரம், நிலம்பூர் வனத்தில், 2016ல் நக்சலைட் தலைவர்கள் குப்புதேவராஜ், அஜீதா ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அதன்பின், இப்பகுதியின் நக்சலைட் தலைவராக, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டார்.அவருடன், பெண் தலைவர்கள் சாவித்திரி, லதா ஆகியோர், நாடுகாணி மற்றம் கபினி பகுதிகளில், தங்கள் ஆதரவாளர்களை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நக்சலைட் இயக்கத்தில், 'கொரில்லா ஆர்மி' எனும் அமைப்பு செயல்படுவதுடன், அதன் நிர்வாகியாக விக்ரம் கவுடா என்பவர் உள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, சோலாடி அருகே பூக்கோட்டுபாடம், கால்நடை மருத்துவ கல்லுாரி மெயின் கேட் பகுதிக்கு, துப்பாக்கியுடன் ஒரு பெண் உள்ளிட்ட மூன்று நக்சலைட்கள் வந்துள்ளனர். பெண், அங்கு பணியில் இருந்த காவலாளி, பிரபாகரன் என்பவரை பிடித்து, அவரிடமிருந்து மொபைல் போனை வாங்கி வைத்து கொண்டார்.ஆண்கள் இருவரும், அங்கு பேனர்களை ஒட்டியதுடன், 'மெயின்கேட்' துாண் அருகே, ஒயர்கள் சொருகிய பாட்டிலை வைத்து, வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி, 'அபாயம்' என, எழுதப்பட்ட போஸ்டரை ஒட்டி உள்ளனர். அதிகாலை, கால்நடை கல்லுாரி மாணவர்களிடம் பேசியுள்ளனர்.தகவல் அறிந்த, எஸ்.பி. கருப்புசாமி, டி.எஸ்.பி., பிரின்ஸ்ஆபிரகாம் மற்றும், 'தண்டர்போல்ட்' அதிரடிப்படையினர், வெடிகுண்டு பரிசோதனை குழுவினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.கேரள போலீசார் கூறியதாவது:குறிப்பிட்ட பகுதியில், வெடிகுண்டு ஏதும் இல்லை; இங்கு வந்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.இதை தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், கேரளா, கர்நாடக மாநில எல்லையில் உள்ள, 'டிரைஜங்ஷன்' பகுதியில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்