img/728x90.jpg
 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் சிக்கின தொழிலதிபர் வீட்டில் 68 சாமி

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் சிக்கின தொழிலதிபர் வீட்டில் 68 சாமி

சென்னையில், நடிகரும், தொழிலதிபருமான, ரன்வீர் ஷா என்பவரின், சொகுசு பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 68 சிலைகள் உட்பட, 89 பொருட்களை, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், அதிரடி வேட்டை நடத்தி, பறிமுதல் செய்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இச்சிலைகளை, வெளிநாடுகளுக்கு கடத்தவிருந்த தகவல், விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர், ரன்வீர் ஷா, 62. இவர், சென்னை, சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனியில், சொகுசு பங்களாவில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.ராஜிவ் மேனன் இயக்கத்தில், 1997ல் வெளிவந்த, மின்சார கனவு என்ற படத்தில் நடித்துள்ள, ரன்வீர் ஷா, மகள் பிராகிருதி பெயரில், அறக்கட்டளை துவங்கி, 10 நிமிட மேடை நாடகங்களை நடத்தி வந்தார். 
 
பின், 'பி.எஸ்., எக்ஸ்போர்ட்' என்ற, நிறுவனம் துவக்கி, ஆடை ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு வந்தார். சென்னை மற்றும் மும்பையில், நடிகர், தொழில் அதிபர் என, பலராலும் அறியப்பட்ட, ரன்வீர் ஷா, சிலைகளை வாங்கி, விற்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருவதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேலுக்கு தகவல் கிடைத்து உள்ளது.
 
இதையடுத்து, ரன்வீர்ஷா வின் நடவடிக்கைகளை, போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அவர், அடிக்கடி வெளி நாடுகளுக்கு சென்று வருவதும், அங்கு, சிலை கடத்தல் நபர்களை சந்திப்பதும், போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால்,
 
ரன்வீர் ஷாவின் பங்களாவில் சோதனை நடத்த, முடிவு செய்தனர். ஆனால், பங்களா பல நாட்கள் பூட்டியே கிடக்கிறது. அதை, பெண் உதவியாளர் ஒருவர், கவனித்து வருகிறார்; காவலாளிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
அதிரடி
 
இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன், ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் படையினர், நேற்று காலை, 9:30 முதல், பகல், 2:30 மணி வரை, ரன்வீர் ஷா பங்களாவில், ஒரு இடம் விடாமல் சோதனையிட்டனர். அப்போது, ஒரு அறையில், 12 பஞ்சலோக சிலைகள் பதுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது.மேலும், பங்களா முழுவதும், 56 கற்சிலைகள் இருந்தன. அவற்றில், நந்தி மற்றும் பெண் தெய்வ கற்சிலைகள் அதிகம். அத்துடன், கலைநயமிக்க கோவில்
 
கல் துாண்கள், சுவாமி சிலைக்கு பின் சாத்தப்படும் திருவாச்சி என, பங்களா முழுவதும், பல விதமான கலைப் பொருட்கள் இருந்தன. அந்த பங்களாவே, கோவில் வளாகம் போல் காட்சி அளித்தது.
 
 
ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறியதாவது:
 
ரன்வீர் ஷா வீட்டில், ஐந்து மணி நேரம் சோதனை நடத்தினோம். 12 பஞ்சலோக சிலைகள், 56 கற்சிலைகள், கலை நயமிக்க கோவில் துாண்கள் என, 89 பொருட் களை பறிமுதல் செய்து உள்ளோம். இவை அனைத்தும், தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டவை
 
100 ஆண்டுகள் பழமை
 
 
இவற்றில், 75 சதவீத சிலைகளை, சர்வ தேச சிலை கடத்தல்காரன் தீனதயாளன் தான், ரன்வீர் ஷாவுக்கு விற்றுள்ளான். இந்தசிலைகளை, வெளிநாடுகளுக்கு கடத்த இருந்தது தெரிந்தது. சிலைகளை வாங்கி விற்க, உரிமம் பெற்று இருப்பதாக, ரன்வீர் ஷா தெரிவிக்கிறார். அவரது வீட்டில் பறிமுதல் செய்த சிலைகள் அனைத்தும், 100 ஆண்டுகள் பழமையானவை. 
 
இது போன்ற, தொன்மையான சிலைகளை வாங்கவோ, விற்கவோ, உரிமம் பெற முடியாது. அப்படி பெற்று இருந்தால், அது, சட்ட விரோதமானது. தீனதயாளனுடன் சேர்ந்து, கோவில்களை கபளீகரம் செய்து, சிலைகளை திருடி பதுக்கி இருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். சோதனை நடக்கும் போது, ரன்வீர் ஷா வீட்டில் இல்லை; குடும்பத்தினரும் இல்லை. முழுமையான விசாரணைக்கு பின், ரன்வீர் ஷா கைது செய்யப்படுவார்.
 
சிலைகளை, சென்னை, எழும்பூரில் உள்ள, அருங்காட்சியகத்தில் வைக்க இடம் கேட்டோம்; 'இல்லை' என, தெரிவித்து விட்டனர். சிலைகள் உள்ளிட்ட, 89 பொருட் களையும், இவ்வழக்குகளை விசாரிக்கும், கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
 
பறிமுதல் செய்த கற்சிலைகள் சிலவற்றை, 'கிரேன்' மூலம், மாநக ராட்சி லாரி ஒன்றில் ஏற்றி, கும்பகோணத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மற்ற சிலைகள், ரன்வீர் ஷாவின் வீட்டில் தான் உள்ளன. இதனால், அங்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.