• :
  • :
களத்தில்

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்

 திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்

 திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டப்பேர வைத் தொகுதிகளின் இடைத்தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

 
தேர்தல் பணிகள் தொடர்பாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், நாமக்கல் ஆகிய 9 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 
‘‘2019-ம் ஆண்டு ஜனவரியில் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுவிட்டது. விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்க்கவும், திருத்தம் செய்வதற்குமான சிறப்பு  முகாம்கள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும், இறந்த வர்கள் மற்றும் இடம் மாறியவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
 
திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம். காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்பதால், அதற்குள்ளாக தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும், நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
 
தமிழ்நாட்டில் தற்போது 5.82 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2 கோடி வாக்காளர்களின் விவரங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முடிந்துவிட்டது.
 
உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக, இப்பணிகளை நிறுத்தி வைத்திருந்தோம். தற்போது வெளியாகியுள்ள உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவுப்படி தேர்தல்ஆணையத்தின் வழிகாட்டுதல் கிடைத்தவுடன், அதற்கேற்ப மீண்டும் பணிகள் தொடங்கப்படும்.
 
பணப் புழக்கத்தை தடுக்க...
 
தேர்தலில் பணப் புழக்கத்தைத் தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இடைத்தேர்தல்களில் பணப்புழக்கத்தைத் தடுக்க கூடுதல் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
 
புதிய வாக்காளர்களுக்கு ஜனவரியில் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
 
செய்தியாளர்களுக்கு தபால் வாக்குரிமை?
 
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், காவல்துறையினர் தங்களது வாக்குகளை முன்கூட்டியே பதிவு செய்வதற்காக, தபால் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாள அட்டையுடன், தேர்தல் நாளில் களத்தில் செய்தி சேகரிக்கச் செல்லும் பெரும்பாலான செய்தியாளர்களால், தங்களது சொந்த ஊருக்குச் சென்று வாக்குரிமையை பதிவு செய்ய முடிவதில்லை. எனவே, தேர்தல் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் செய்தியாளர்களுக்கும் தபால் வாக்குரிமை வழங்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த சத்யபிரதா சாஹூ, "இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அளித்தால், அதை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.