img/728x90.jpg
சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி கோயில்களில் சாதியப் பாகுபாடும் களையப்பட வேண்டும்

சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி கோயில்களில் சாதியப் பாகுபாடும் களையப்பட வேண்டும்

 சபரிமலையில் பெண்கள் வழிபடலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்புக்குரியது என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 
இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,. “சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சென்று வழிபடுவதற்குப் பன்னெடுங்காலமாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியது. அனைத்து வயதுப் பெண்களும் அங்கு சென்று வழிபட எந்தத் தடையும் இல்லை. பக்தியில் பாலினப் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்.
 
உயிரியல் அடிப்படையிலோ, உடலியல் அடிப்படையிலோ எந்தப் பாகுபாட்டையும் காட்டக்கூடாது எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம் ஆண்கள் விரதமிருப்பதற்காகப் பெண்கள் தண்டனையை சுமக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஐயப்ப பக்தர்களை தனிப் பிரிவினராகக் கருத முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சபரிமலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு பரந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். ஆண்டவன் சந்நிதியில் பாலினப் பாகுபாடு கூடாது என்றால் சாதிப் பாகுபாடு மட்டும் பார்க்கலாமா என்ற கேள்வி எழுகிறது. தலித்துகள் சென்று வழிபட முடியாத லட்சக்கணக்கான கோயில்கள் இந்த நாட்டில் உள்ளன. அந்தப் பாகுபாட்டைக் களைவதற்கு நீதிமன்றம் தீர்ப்பளிக்கவேண்டும் எனக் காத்திராமல் அரசாங்கங்களே அதைக் களைய முன்வரவேண்டும் என வலியுறுத்துமிறோம்.
 
வழிபடும் உரிமைகள் மட்டுமின்றி அர்ச்சனை செய்வதிலும் பெண்களுக்கு இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். பெண்களை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு அரசு முன்வர வேண்டும். அதற்கான பாதையை இந்த தீர்ப்பு அமைத்துத் தந்துள்ளது.
 
சபரிமலை வழக்கில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா அளித்துள்ள சிறுபான்மை தீர்ப்பில் அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பெரும்பான்மை தீர்ப்பிலேயே விடையுள்ளது என்பதால் இந்தத் தீர்ப்பை விரிவான அமர்வுக்கு எடுத்துச் செல்லவோ, சீராய்வு செய்யவோ தேவையில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதிகளுக்கு எமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.