img/728x90.jpg
மீண்டும் அறிவிக்கப்படாத மின் தடைபற்றாக்குறையால் திணறும் வாரியம்

மீண்டும் அறிவிக்கப்படாத மின் தடைபற்றாக்குறையால் திணறும் வாரியம்

 காற்றாலை மின்சாரம் குறைந்ததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிக்க, மாலையில் மட்டும், மீண்டும் அறிவிக்கப்படாமல், மின் தடை செய்யப்படுகிறது.இம்மாத துவக்கத்தில், மத்திய தொகுப்பில் இருந்து, மின் வாரிய அனல் மின் நிலையங்களுக்கு, நிலக்கரி வரத்து பாதித்தது.இதனால், திருவள்ளூர், வட சென்னை; சேலம், மேட்டூர்; துாத்துக்குடி அனல் மின் நிலையங்களில், 1,500 மெகா வாட்டிற்கு மேல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.மத்திய மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு, 3,000 மெகா வாட் மின்சாரம் குறைவாக வழங்கப்பட்டது. மே மாதம் முதல், தினமும், 3,000 மெகாவாட்டிற்கு மேல் கிடைத்த காற்றாலை மின்சாரமும், 500 மெகா வாட்டிற்கு கீழ் சரிந்தது.இதனால், மின் பற்றாக்குறை ஏற்பட்டு, இம்மாதம், 8, 9ம் தேதிகளில் இருந்து, கிராமங்களில், பல மணி நேரம் மின் தடை செய்யப்பட்டது.கூடுதல் நிலக்கரி வழங்கக் கோரி, முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து, 16ம் தேதியில் இருந்து, தமிழகத்திற்கு முழுமையாக நிலக்கரி அனுப்பப்படுகிறது. அன்று முதல், காற்றாலைகளில் இருந்தும், 1,500 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைத்தது.அதே காலத்தில், மின் தேவை அதிகம் உள்ள, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கன மழை பெய்தது.இதனால், தினமும், 14 ஆயிரம் மெகா வாட்டிற்கு மேல் இருந்த மின் தேவை, 12 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்தது. இதையடுத்து, நிலக்கரியை மிச்சப்படுத்த, அனல் மின் உற்பத்தியை மின் வாரியம் குறைத்தது.சில தினங்களாக, காற்றாலைகளில் இருந்து, 100 மெகா வாட்டிற்கு கீழ் தான் மின்சாரம் கிடைக்கிறது. இதனால், அனல் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.வெயில் சுட்டெரித்து வருவதால், மின் தேவையும் உயர்ந்து வருகிறது. தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, மின்சாரம் கிடைக்காமல், மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, 27ம் தேதி, மாலை, 6:00 மணி முதல், சென்னை தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளிலும், 30 முதல், 45 நிமிடங்கள் வரை, மின் தடை செய்யப்பட்டது. இதே நிலை, அடுத்த ஒரு வாரம் தொடரும் என, கூறப்படுகிறது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எந்த பகுதியிலும், திட்டமிட்டு மின் தடை செய்யவில்லை' என்றார்.