img/728x90.jpg
காவிரி நீர் கடலில் கலப்பதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்

காவிரி நீர் கடலில் கலப்பதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்

 பி.ஆர்.பாண்டியன் - தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்

 
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு மேட்டூர் அணை 4 முறை நிரம்பியது. கல்லணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீர் டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு தொடர்ந்து 30 நாட்கள் திறக்கப்பட்டது. ஆனாலும் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவே 32 நாட்கள் ஆனது. சுமார் 100 டிஎம்சி உபரி நீர் கடலில் கலந்தது.
 
பொதுவாக மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டாலே 7-வது நாளில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து விடும். 8, 9-வது நாட்களில் விளைநிலங்களுக்கு நீர் சென்று சேர்ந்துவிடும். ஆனால், இந்நிலை மாறி இன்றுவரை பல கிராமங்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட சென்றுசேரவில்லை.
 
காரணம் என்ன?
 
 
ஆறுகளில் மணல் முழுவதும் அள்ளப்பட்டதால் வண்டல் மண் ஆறுகளின் நடுவே புதர் மண்டி மேடிட்டு நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஆற்றின் வலது கரையில் பாசன மதகு உள்ளது என்றால் ஆற்றின் நடுவில் மண்மேடு தடுப்பதால் இடது ஓரம் தண்ணீர் செல்வதால் பாசனம் பாதிக்கப்படுகிறது.
 
ஆறுகள் பாசன மதகைவிட 2 அடி முதல் 5 அடி வரை பள்ளமாகிப் போனது. இதனால், நிர்ணயிக்கப்பட்ட முழு பாசன கொள்ளளவு தண்ணீர் விடுவிக்கப்பட் டாலும் பாசனப் பகுதிகளுக்கு செல்ல வழியில்லாமல் தண்ணீர் கடலில் சென்று கலக்கிறது. பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால் நிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியவில்லை.
 
ஆறுகளின் கரைகள் பலவீனமாகவும், ஷட்டர்கள் உரிய பராமரிப்பு இல்லாத தாலும் அனுமதிக்கப்பட்ட பாசன நீர் விடுவிக்கப்பட்டாலே உடைத்துக் கொண்டு வெளியேறும் நிலை உள்ளது. இதனால் தொடந்து முழு அளவு நீரை விடுவிக்க அச்சப்படுகிறார்கள்.
 
நீடாமங்கலம், மூணாறு, தலைப்பு உள்ளிட்ட பல இடங்களில் நீர் கணக்கிடும் கருவிகள் இயங்காமல் உள்ளன. கிராம வடிகால் வாய்க்காலை தூர் வாரததால் எதிர்காலத்தில் சிறுமழை பெய்தால்கூட வடியாமல் பேரழிவு ஏற்படும் நிலை யும் உள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் நடைபெறும் பணிகள் உரிய ஒருங்கிணைப்பின்றி, ஒப்பந்தக்காரர்களின் முன் அனுபவ மின்மையாலும், பணிகளை கண்காணிக் கும் அதிகாரிகளின் அனுபவமின்மை யாலும், தொழில் நுட்ப ரீதியில் பணிகளை மேற்கொள்வதில் பின்னடைவு ஏற்பட் டுள்ளது.
 
எனவே, தற்போதைய பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்து அடுத்த ஆண்டு பாசன காலத்துக்குள் தேவையான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தாவிடில் காவிரி டெல்டா, வானம் பார்த்த பூமியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
விவசாயிகளின் கோரிக்கைகள்
 
பிப்ரவரி மாதம் முதல் வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான மண் சமன்படுத்தும் இயந்திரங்கள் (டோசர்) அனைத்தையும் பயன்படுத்தி ஆறுகளில் உள்ள புதர்களை அகற்றி, சமன்படுத்தி, நீரோட்டத்தை ஒழுங்குபடுத்துவதோடு, கரைகளை பலப்படுத்த வேண்டும். ஆறுகளில் மணல் அள்ளுவதை முற்றி லும் கைவிட வேண்டும். பராமரிப்புக்காக ஒதுக்கப்படும் நிதியை வேறு பணிகளுக் குப் பயன்படுத்தாமல் பாசன மதகுகள், ஷட்டர்களை பழுது பார்க்கவும், பராமரிக் கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
 
தூர் வாருவதற்கென நிரந்தர அர சாணை வழங்க வேண்டும். குடிமராமத்துப் பணிகளில் அரசியல் தலையீடுகளை தடுத்து நிறுத்திட வேண்டும். விவசாயிகள் கொண்ட குழுக்கள் மூலமே குடிமராமத்து பணிகளைச் செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
 
தன்னாட்சி அதிகாரம்
 
ஒவ்வொரு பாசன மதகுகளின் அருகே ஆறுகளின் குறுக்கே தளமட்ட சுவர்கள் அமைத்து பாசனத்தை உறுதிப்படுத்துவதோடு, ஆங்காங்கே மணலையும் தேவைக்கேற்ப சேமித்து நிலத்தடி நீரையும் பாதுகாக்க வேண்டும். பாசனத்துக்கென வனத்துறை போன்று தன்னாட்சி அதிகாரம் கொண்ட தனித் துறையை உருவாக்கி பாசனப் பிரிவில் முன் அனுபவம் பெற்றவர்களை மட்டுமே தலைமை, கண்காணிப்பு, செயற்பொறியாளர்களாக நியமிக்க வேண்டும். ஆசிய வளர்ச்சி, உலக வங்கி நிதி திட்டங்களை செயல்படுத்துவதில் உரிய ஒருங்கிணைப்பை உருவாக்கி தேவைக்கேற்ப பணிகளை வடிவமைத்து செயல்படுத்த வேண்டும். பாசனத்துக்கான விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்று வதை உறுதி செய்து, அனுமதிக்கப்பட்ட பாசன தண்ணீர் விடுவிப்பதற்க்கான கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும். இதில் அரசியல் தலையீடுகளை அனுமதிக்கக் கூடாது.
 
பாசனப் பிரிவில் ஏற்படும் காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பு வதோடு, கரைக் காவலர்களை தேவைக் கேற்ப நியமிக்க வேண்டும். காவிரி, கொள்ளிடம், தென்பெண்ணை, வைகை போன்ற பெரும் பாசன வடிகால் ஆறுகளில் 5 கி.மீட்டருக்கு ஒரு கதவணை அமைத்து கசிவு நீர் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும். இதன் மூலம் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும்.
 
மேட்டூர் அணை முதல் கிளை ஆறுகள் வரை தண்ணீர் திறப்பது, தூர்வாருவது, பராமரிப்பு, குடிமராமத்துப் பணிகள் குறித்த விபரங்களை வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதற்காக தனியாக செல்போன் செயலி உருவாக்க வேண்டும்.
 
முக்கொம்பு மேலணை உடைந்த கொள்ளிடம் கதவணை தற்காலிக மணல் மூட்டை, பாறாங்கற்கள் மூலம் அடைத்திருப்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது. இதனால் 25 ஆயிரம் கனஅடிக்கு மேல் மேட்டூரிலிருந்து விடுவிக் கும் நிலை ஏற்படும் போது பாசனத்துக்கும், கல்லணைக்கும் பாதிப்பு ஏற்படும்.
 
தற்காலிக கதவணை
 
புதிய கதவணை கட்டுவதற்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் ஆகும். எனவே பாதிப்புகளை கருத்தில் கொண்டு ராணுவம், மற்றும் பாரத மிகுமின் நிறுவனம் போன்ற நிறுவனங்களின் துணையுடன் தற்காலிக கதவணை அமைப்பது மட்டுமே உடனடி தீர்வாகும்.
 
காவிரியில் கடலில் சென்று கலக்கும் தண்ணீரை தடுத்து பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையிலும், அணைகள், கட்டுமானங்களை பாதுகாக்கும் வகை யிலும் ஒகேனக்கலுக்கு மேலே கிருஷ்ணகிரி மாவட்டம் ராசி மணல் அணை கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். இதுபோன்ற விவசாயிகளின் கோரிக்கைகளை செயல்படுத்தினால் காவிரி டெல்டா மாவட்டங்களில் தடையின்றி சாகுபடி நடைபெறும். இதனை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.