• :
  • :
களத்தில்

களத்தில் செய்தி எதிரொலி தீண்டாமைக் கொடுமை அங்கன்வாடியில் அதிகாரிகள் ஆய்வு

களத்தில் செய்தி எதிரொலி தீண்டாமைக் கொடுமை அங்கன்வாடியில் அதிகாரிகள் ஆய்வு

 ஆண்டிபட்டி அருகே அங்கன்வாடியில் தீண்டாமைக் கொடுமை நடப்பதாகக் கடந்த 28-ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் அந்த அங்கன்வாடிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பிள்ளைமுகன்பட்டி. இங்கு புதிதாக  கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக திறக்கப்பட்டது. பட்டியல் இன மக்கள் வசிக்கும் பிள்ளைமுகன்பட்டிக்கு அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் வசிக்கும் பிற சமூகத்தைச் சேர்ந்த மக்களின் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்புவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
 
 
``உணவு இடைவேளைக்கு மட்டும் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அழைத்துவந்து உணவு வாங்கிக் கொள்கிறார்கள். அப்போது எங்கள் குழந்தைகள் அங்கு வந்தால் சத்தம் போட்டு விரட்டுகிறார்கள்” என்ற குற்றச்சாட்டை பிள்ளைமுகன்பட்டி கிராம மக்கள் கூறியிருந்தனர். இவ்விவகாரம் தொடர்பாக, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபிரீத்தா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று பிள்ளைமுகன்பட்டிக்குச் சென்று அங்கன்வாடியில் ஆய்வு நடத்தினர். பிள்ளைமுகன்பட்டி கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.
 
இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் ஜெயபிரீத்தாவிடம் பேசினோம். ``ஆண்டிப்பட்டி  தாசில்தார் அர்ச்சுனன்  மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பிள்ளைமுகன்பட்டியில் இன்று ஆய்வு செய்தோம். இந்திரா நகர் மக்களிடமும் விசாரணை செய்தோம். இந்திரா நகரில் இருந்து பிள்ளைமுகன்பட்டிக்கு அரை கிலோமீட்டர் தூரம் என்பதால், குழந்தைகளை அனுப்புவதில் சிரமம் இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்திரா நகர் பகுதிக்கும் அங்கன்வாடி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றார்கள். அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்பாததற்கு இதுதான் காரணம். வேறு எந்த காரணமும் இல்லை” என்றார்.