img/728x90.jpg
மன்னார் வளைகுடா பவளப்பாறைகளை சிதைக்கும் பிளாஸ்டிக்  ஸ்கூபா டைவிங் மூலம் மீட்கும் அதிகாரிகள்

மன்னார் வளைகுடா பவளப்பாறைகளை சிதைக்கும் பிளாஸ்டிக் ஸ்கூபா டைவிங் மூலம் மீட்கும் அதிகாரிகள்

 அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கமாக இருந்து வருவது மன்னார் வளைகுடா கடல் பகுதி. இப்பகுதியில் அமைந்துள்ள 21 தீவுகளைச் சுற்றிலும் 3600-க்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. கடலில் ஏற்படும் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் கேடு, கடலில் கலக்கப்படும் எண்ணெய் உள்ளிட்ட கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், தவறான மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை இத்தகைய அரியவகை உயிரினங்களுக்கு ஆபத்தினை விளைவித்து வருகிறது. இதனால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றின் எண்ணிக்கை அருகிவருகிறது.

 
இதனைத் தடுக்கும் வகையிலும் அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசு இப்பகுதியை மன்னார் வளைகுடா  உயிர்க்கோள  காப்பகமாக அறிவித்துள்ளது. இதனால் உரிய அனுமதி இன்றி இப்பகுதிகளுக்கு மீனவர்கள் உள்ளிட்டோர் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்களால் ஏற்படும் இத்தகைய பாதிப்புகள் ஓரளவு குறைந்துள்ளன. அதே வேளையில் மனிதர்களால் ஏற்படும் மறைமுக பாதிப்புகளான கழிவுகள் கலப்பு, வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் எனத் தண்ணீரில் மிதக்கும் குப்பைக்களங்களாக மாறி வருகின்றன.
 
உலகம் முழுவதும் உள்ள கடல் பரப்பினுள் சுமார் 8 மில்லியன் டன் கழிவுகள் கிடப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலில் உணவு தேடி வரும் திமிங்கிலம், பாலூட்டி வகையைச் சேர்ந்த கடல் பசுக்கள், கடலின் தூய்மை காவலனாக விளங்கும் ஆமைகள் உள்ளிட்டவை இந்த கழிவுகளை தவறுதலாக உட்கொள்வதால் உயிரிழந்து கரை ஒதுங்கி வருகின்றன. கடலின் பாதுகாப்பு அரணாக விளங்கும் பவளப்பாறைகளின் மீது சிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் அவை மூச்சுவிட முடியாமல் அழியும் நிலைக்குச் செல்கின்றன. மேலும் சில மீன்களின் தாவர வகை உணவான கடற்புற்கள் ஆகியவற்றிற்கும் இவை அழிவினை ஏற்படுத்தி வருகின்றன. இவை தவிர கடலில் மிதக்கும் நுண்துகள் நெகிழி (Micro Plastics)யை உட்கொள்ளும் மீன்களை மனிதர்கள் உணவாக உட்கொள்ளும் போதும் அவர்களுக்கும் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இத்தகைய சுற்றுச்சுழல் கேடுகளில் இருந்து கடல்வாழ் உயிரினங்களைக் காப்பாற்றும் மற்றொரு முயற்சியினை வன உயிரின பாதுகாப்பு அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.
 
தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் மற்றும் பசுமையாக்கம் திட்டத்தின்கீழ் கடலில் மூழ்கிச் சென்று கழிவுப் பொருட்களை சேகரிக்கும் 'ஸ்கூபா டைவிங்' பயிற்சியை வன உயிரின பாதுகாப்பு துறையினர் மேற்கொண்டுள்ளனர். மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக துறையில் பணியாற்றி வரும் மண்டபம் மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வனச்சரகர்கள், வனவர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள்  உள்ளிட்ட 15 பேருக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் போது நீச்சல், ஸ்கூபா டைவிங்கின் மூலம் பாதுகாப்பான முறையில் கடலின் உட்பகுதிகளுக்கு நீந்தியபடியே அங்கு மிதந்து கிடக்கும் கழிவுப் பொருட்களை சேகரிப்பது, வலை உள்ளிட்ட பொருட்களில் சிக்கிக் கொண்டு காயமடைந்த சிறிய வகையிலான  உயிரினங்களைக் கண்டறிவது, தூத்துக்குடி-தொண்டி இடையிலான கடல் பரப்பில் போடப்பட்டுள்ள செயற்கை பவளப்பாறைகள் மற்றும் மண்டபம் கடல் பகுதியில் போடப்பட்டுள்ள கடற்புற்கள் போன்றவற்றின் வளர்ச்சியைக் கண்காணிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வீரர்கள் ஒவ்வொருவரும் கடலின் மட்டத்திலிருந்து 15 அடி ஆழம் வரை சென்று இத்தகைய பணிகளில் ஈடுபடும் வகையில் பயிற்சிகள் அமைந்துள்ளன.
 
பயிற்சியின் நிறைவு நாளன்று சோதனை முயற்சியாக  மண்டபம் தோணித்துறை கடல் பகுதியில் கலந்து கிடந்த சுமார் 7 கிலோ எடை கொண்ட பாலித்தீன் பைகள், பாட்டில்கள், சேதமடைந்த வலைகள் ஆகியவற்றை அகற்றியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கு ஒருமுறை முக்கியமான கடலோரப் பகுதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் கடலோரப் பகுதிகளில், இன்னும் அதிகளவிலான கழிவுகளைக் கடல்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தவுள்ளதாக மண்டபம் வனச்சரக அலுவலர் சதீஷ் தெரிவித்தார்.