• :
  • :
களத்தில்

கனத்தது சடலமில்லை எங்கள் மனம்தான் உடலைப் பயிர்களுக்கு நடுவே சுமந்துசெல்லும் அவலம்

கனத்தது சடலமில்லை எங்கள் மனம்தான் உடலைப் பயிர்களுக்கு நடுவே சுமந்துசெல்லும் அவலம்

 இன்றைக்கும், தமிழகத்தில் சாதியின் பெயரில் பல கொடுமைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது ஆபரக்குடி எனும் கிராமம். திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது. இங்கு,  ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். அவர்களுக்கான முழு உரிமைகள் கிடைக்காமல்  சாதியின் பெயரால் பல இன்னல்களைச்  சந்தித்து வருகின்றனர்.

 
வாழ்வாதாரம்  மட்டுமின்றித்  தனது இறுதி ஊர்வலம் வரை இவர்களின் உரிமை மறுக்கப்பட்டுளந்து. இந்தச்  சமூகத்தைச்  சேர்த்த மக்களுக்கான  மயானம்,  அந்த ஊருக்கு  வெளியே  விவசாய நிலங்களுக்கு மத்தியில் உள்ளது. இந்தக் சமூகத்தைச்  சேர்ந்தவர்கள் யாரேனும்  இறந்துவிட்டால்,  அந்த விவாசாய நிலத்தின் வழியாகத்தான் தூக்கிச் செல்ல வேண்டும். விவசாயம் நடைபெறாத நாள்களில்கூட பரவாயில்லை  விவசாயம் செய்யும்போதும் அவர்கள் அந்த வழியைத்தான் பயன்படுத்த வேண்டும்.
 
 
இறந்தவர்கள் நினைத்துக்  கவலைகொள்வதைவிட, அதன்பிறகு அந்தச் சடலத்தை எடுத்துச்செல்வதில் உள்ள இடர்பாடுகளே அவர்களைத் துயரத்தில் ஆழ்த்துகின்றன. மனிதன், வாழும்வரை போராடலாம். ஆனால், இவர்களின்  போராட்டம் மயானம் செல்வது வரை தொடர்கிறது.  அந்தப் பகுதியைச்  சேர்ந்த  அய்யனார் என்பவர்  உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவரது இறுதி ஊர்வலம், விவசாயிகள் பாடுபட்டு வளர்த்த  சம்பா பயிரின்  நடுவே  சென்றுள்ளது. வாடிய பயிரை  பார்க்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளே,  தான் வளர்க்கும் சம்பா  பயிரை  மிதித்துக்கொண்டு அந்த உடலைத் தூக்கிச் சென்றுள்ளனர்.
 
``கனத்தது  சடலம் இல்லை. எங்கள் மனம் தான். மயானம்  செல்வதற்கான சாலை வசதியை  ஏற்படுத்தித் தருமாறு பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனாலும், இதுநாள் வரை எங்கள் கோரிக்கைகள் எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை.  எங்கள் வாழ்வில் காணும் மரணங்கள்  இரண்டு விதமான வலியைத் தருகின்றன.  இறந்தவரின்  பிரிவு ஒருபுறம். மறுபுறம், பாடுபட்டுக் காக்கும் பயிர்களும்  தங்கள் கால்களினால்  மிதிபட்டுச் சாகின்றன. எனவே,   வாழ்க்கையில்  நாங்கள் படும் இந்தத் துயரநிலையை  நீக்கும்பொருட்டு மாவட்ட நிர்வாகம் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும். விவசாயிகள்  தங்கள்   வாழ்வில்   விளைநிலங்களைக்  காக்கும் கடவுளாகவே  வாழ்கின்றனர். அவர்களது சடலம்கூட அதன் அழிவுக்குக் காரணமாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் அனைவரின்  வேண்டுகோள்'' என்று கண்ணீருடன் கூறுகின்றனர் ஆபரக்குடி மக்கள்.