img/728x90.jpg
மைக் பிடித்துப் பேசிய கையோடு பேக்கரிக்குள் புகுந்த நிர்வாகி  கரூர் அ ம மு க உண்ணாவிரதக் காட்சிகள்

மைக் பிடித்துப் பேசிய கையோடு பேக்கரிக்குள் புகுந்த நிர்வாகி கரூர் அ ம மு க உண்ணாவிரதக் காட்சிகள்

 தமிழக அரசுக்கு எதிராக கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நடத்திய உண்ணாவிரத்தில் அ.ம.மு.க நிர்வாகி ஒருவர் பேசிய கையோடு பேக்கரில் புகுந்து வடையும், டீயும் சாப்பிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

 
 அ.ம.மு.க அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தனது தொகுதியான அரவக்குறிச்சி தொகுதியில் தமிழக அரசு எந்தத் திட்டங்களையும் செயல்படுத்துவதில்லை என்று குற்றம்சாட்டி வந்தார். திட்டங்களை செயல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து கடந்த 20, 25, 27-ம் தேதிகளில் அரவக்குறிச்சி, க.பரமத்தி மற்றும் வேலாயுதம்பாளையம் ஆகிய இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவெடுத்தார். ஆனால், கரூர் மாவட்ட காவல்துறை அதற்கு அனுமதி மறுத்துவிட்டது. இதனால், போராட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். மாற்றுத் தேதிகளில் செந்தில்பாலாஜிக்கு அனுமதி வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கும் காவல்துறை முட்டுக்கட்டை போட்டது. மறுபடியும் மதுரை உயர்நீதிமன்றத்தில் கரூர் மாவட்ட காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டு, மாற்றுத் தேதிகளில் போராட்டம் நடத்த அனுமதி வாங்கினார். அதைதொடர்ந்து, முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை க.பரமத்தி கடைவீதியில் நடத்தினார். அ.ம.மு.க வைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். செந்தில்பாலாஜி பேசுவதற்கு முன்பு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் வரிசையாகப் பேசினர்.
 
 
அதனையொட்டி,எம்.ஜி.ஆர் அணியின் துணைச் செயலாளர் தியாகராஜன் என்பவர் அரவக்குறிச்சி தொகுதிக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யாமல் இருப்பதாக தமிழக அரசை குற்றம்சாட்டிப் பேசினார். பேசி முடித்ததும் நாலாபக்கமும் பார்த்தபடி, அருகில் இருந்த பேக்கரிக்குள் விருட்டென்று நுழைந்தார். 'உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டவர் இங்கே எப்படி சாப்பிடுவார்?' என்று பேக்கரியைச் சேர்ந்தவர்கள் இவரை கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஊழியரை அழைத்த தியாகராஜன் வடை இரண்டை கேட்டு வாங்கி சாப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தொடர்ந்து டீ ஒன்றைச் சொல்லி, அதையும் வாங்கிக் குடித்து, கடை ஊழியரை ஆச்சர்யத்தோடு பார்க்க வைத்தார். ஆனால், உண்ணாவிரதப் பந்தலில் அப்போது ஒரு நிர்வாகி, 'இந்த உண்ணாவிரதப் போராட்டம் முறையாக நடக்கிறது" என்று பேசினார். அதைக் கேட்டதும் கடை ஊழியர் குபுக்கென்று சிரித்துவிட்டார்.