• :
  • :
களத்தில்

எங்களுக்கும் அரசு வேலை வேணும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தர்கள் கலெக்டரிடம் மனு!

எங்களுக்கும் அரசு வேலை வேணும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தர்கள் கலெக்டரிடம் மனு!

 எங்களுக்கும் அரசு வேலை வேண்டும்” என தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். போலீஸாரின் தடியடியால் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலையும் வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்படி, இழப்பீட்டுத் தொகை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் உடனடியாக ஒப்படைக்கபட்டது.
 
 
தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் யாருக்குப் பணி வழங்கலாம் என்பதுகுறித்து ஆய்வுசெய்து, அதற்கான ஆவணங்கள் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த 9 பேருக்கும் அரசு வேலை வழங்கிட மாவட்ட நிர்வாகம் பரிந்துரைப்படி, அவர்கள்குறித்த ஆவணங்களும் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில், சண்முகத்தின் தந்தை தங்கள் குடும்பத்தில் அரசு வேலை யாருக்கும் வேண்டாம் எனக் கூறிவிட்டார்.
 
கிளாட்சன் மற்றும் அந்தோணி செல்வராஜ் ஆகியோரின் குழந்தைகளுக்குப் போதிய வயது இல்லை என்பதால், அவர்களுக்கு பின்னர் பணி வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது. இந்த மூன்று பேர் தவிர, மீதமுள்ள 10 பேர் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த 9 பேர் என மொத்தம் 19 பேருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை  ஆகியவற்றில் பணியிடம் ஒதுக்கப்பட்டு, இவர்களுக்கான பணி நியமன ஆணையைக்  கடந்த 27-ம் தேதி, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் வழங்கினார்.  
 
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவர் மற்றும் பலத்த காயம் அடைந்தவர்கள் என 19 பேரில் 17 பேருக்கு கிராம உதவியாளர் பணியிடமும், 2 பேருக்கு சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடமும் ஒதுக்கி, பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பட்டப்படிப்புத் தகுதி உடையவர்கள்.  இதில், அரசுப்பணி வழங்கப்படாமல் கடைநிலை ஊழியர் நிலையில் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. அவரவர் தகுதிக்கேற்ற பணியிடம் வழங்கப்பட வேண்டும் என பல கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில்,  துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நடந்த தடியடியில் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கும் அரசுப்பணி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை மனுக்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது பேசுகையில், “இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் பல நாள்கள் சிகிச்சைபெற்று, வேறு வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளோம். உடலின் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே,  எங்களுக்கும் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கிட வேண்டும்” எனக் கூறினர்.