• :
  • :
களத்தில்

வெண்புள்ளிக்காக வேலையைப் பறிப்பதா?

வெண்புள்ளிக்காக வேலையைப் பறிப்பதா?

 சமயம், சாதி, பால், இனம் மற்றும் நிறம் அடிப்படையில் எவரையும் வேறுபடுத்தக் கூடாது’ என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். இந்தப் பட்டியலில் நோய்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ‘வெண்புள்ளி என்பது நோயே அல்ல. அதைக் காரணம் காட்டி யாரையும் பணிநீக்கம் செய்யக்கூடாது’ என அரசாணையே உள்ளது. ஆனால், உடலில் வெண்புள்ளிகள் தோன்றியதற்காக அரசுப் பணியிலிருந்து ஒருவரைப் பணிநீக்கம் செய்த அவலம் நிகழ்ந்துள்ளது.

 
விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே இருக்கிறது குடியநல்லூர். இங்கு பொதுக்குடிநீர் விசைப்பம்பு ஆபரேட்டராகப் பணிபுரிந்தவர் பொன்னுசாமி. திடீரென இவரது உடலில் வெண்புள்ளிகள் தோன்றின. அதனால், இவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டனர். இதுகுறித்து அவர் ‘ஜூ.வி ஆக்‌ஷன்’ பகுதிக்குப் புகார் அனுப்பினார். உடனடியாக குடியநல்லூர் புறப்பட்டோம். ஊருக்கு வெளியில் இருக்கிறது பொன்னுசாமியின் வீடு. எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் கூரை. செங்கற்களால் முட்டுக்கொடுக்கப்பட்ட கயிற்றுக் கட்டில், கிழிந்த பாய், சில பாத்திரங்கள்... இவற்றின் நடுவில் ஒடுங்கிக் கிடக்கிறார் பொன்னுசாமி.
 
 
 
தனது எட்டு ஆண்டுப் போராட்டத்தை உடைந்த குரலில் அவர் விவரித்தார். “1992-ல் இந்த வேலையில சேர்ந்தேன். வேலை நேரம் போக, எழுதப் படிக்கத் தெரியாத எங்க ஊரு மக்களுக்கு ரேஷன் கார்டு வாங்கித் தர்றது, ஒரு லைட் சர்வீஸ் வாங்கித் தர்றதுனு உதவிகளைச் செஞ்சிட்டிருந்தேன். 2010-ம் வருஷம் என் உடம்புல வெண்புள்ளி பரவுனது. ஊராட்சித் தலைவரா இருந்த பாலகிருஷ்ணன், ‘நீ தண்ணி திறந்துவிட்டா, வெண்குஷ்டம் எல்லாருக்கும் பரவிடும். அதனால, நீ வேலைக்கு வரவேணாம்’னு சொல்லிட்டாரு. தலையில இடி விழுந்த மாதிரி இருந்துச்சு. இது தொற்று வியாதி இல்லைன்னு அவர்கிட்ட சொன்னேன். அவர் கேட்கல. நான் போகாத இடம் இல்லை; பார்க்காத வைத்தியம் இல்லை. வைத்தியத்துக்காக வீட்டுல இருந்த பாத்திரம், பண்டம் எல்லாத்தையும் வித்துட்டேன். ‘இது தொற்றுநோய் இல்லை’னு பாண்டிச்சேரி ஜிப்மர் ஹாஸ்பிட்டல்ல இருந்து ரெண்டு முறை சான்றிதழ் வாங்கிட்டு கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுத்தேன். எந்தப் பலனும் இல்லை. 
 
இருந்ததையெல்லாம் வித்து எம் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். இப்ப இந்த ஏழை செத்துட்டா தூக்கிப்போடுறதுக்குக்கூட சல்லிக்காசு இல்லைங்கய்யா. வாரத்துக்கு ஒரு நாளு கூலி வேலை கிடைக்கிறதே பெருசுங்க. அதுல கிடைக்குற நூறு, இருநூறை வெச்சிக்கிட்டு கால் வயித்துக் கஞ்சி குடிக்கிறோம். எந்தத் தப்பும் செய்யாத எனக்கு ஏன்யா இவ்வளவு பெரிய தண்டனை?” என்றார் வேதனையுடன்.
 
இதுகுறித்து வெண்புள்ளிகள் விழிப்பு உணர்வு இயக்கத்தின் தலைவர் டாக்டர் உமாபதியிடம் பேசினோம். “வெண்புள்ளியைக் காரணம் காட்டி அரசுப் பணியிலிருந்து யாரையும் நீக்க முடியாது. ‘வெண்புள்ளி என்பது நோயும் அல்ல; தொற்றுநோயும் அல்ல’ என்று நாங்கள் தொடர்ந்து போராடினோம். தமிழக அரசு 2010-ம் ஆண்டு இதை அரசாணையாகவே வெளியிட்டது. பொன்னுசாமியை வேலையை விட்டு நீக்கியிருப்பது குற்றம். அவருக்கு உடனடியாக பணி வழங்குவதுடன், அவருக்குக் கொடுக்கவேண்டிய சம்பளம் உள்ளிட்ட பணிப் பலன்களை வட்டியுடன் வழங்க வேண்டும்” என்றார்.
 
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியத்திடம் இதுகுறித்து விளக்கினோம். ‘‘இந்த விஷயம் என் கவனத்துக்கு வரவில்லை. பொன்னுசாமியை வேலையை விட்டு நீக்கியிருந்தால், அது தவறு. அவரை உடனடியாக என்னை வந்து சந்திக்கச் சொல்லுங்கள்’’ என்றார்.
 
ஆட்சியரைச் சந்திக்கப்போகிறார் பொன்னுசாமி. நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம்.