• :
  • :
களத்தில்

மகாத்மா பிறந்தநாளில் கன்னியாகுமரி காந்திமண்டபத்தில் விழுந்த அபூர்வ சூரிய ஒளி!

மகாத்மா பிறந்தநாளில் கன்னியாகுமரி காந்திமண்டபத்தில் விழுந்த அபூர்வ சூரிய ஒளி!

 மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளான இன்று கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் விழுந்த அபூர்வ சூரிய ஒளியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர் .

 
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுவதற்கு முன்பு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்ட இடத்தில் காந்திமண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.  ஆண்டுதோறும் காந்தி ஜயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி காந்தி மண்டபத்தினுள் சூரிய ஒளி விழும் வகையில் இந்த மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அதிசய சூரிய ஒளி விழுந்தது. அபூர்வ சூரிய ஒளியை கண்டுரசிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
 
முன்னதாக, காந்தியடிகளின் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து குமரி மாவட்ட சர்வோதய சங்க பெண் ஊழியர்கள் இயந்திர ராட்டையில் நூல் நூற்கும் நூற்புவேள்வியில் ஈடுபட்டனர். மதியம் 12 மணிக்கு மேல் 12.10 மணி வரை அஸ்தி கட்டடத்தில் அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. சூரிய ஒளியை வெள்ளைத் துணியில் விழும்படி செய்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அஸ்தி கட்டடத்தில் விழுந்த சூரிய ஒளியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் செல்போனில் படம் எடுத்தனர். இதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காந்தி மண்டபத்தில் சிறிது நேரம் தியானம் செய்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.