img/728x90.jpg
குவிக்கப்பட்ட 1,500 போலீஸார் - சிவகங்கையில் ரசாயன ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் குவிந்த மக்கள்

குவிக்கப்பட்ட 1,500 போலீஸார் - சிவகங்கையில் ரசாயன ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் குவிந்த மக்கள்

 சிவகங்கையில் செயல்பட்டுவரும் தனியார் ரசாயன ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாளை அந்த ஆலை முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், பெரிய அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோவிலூரில் 1976-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு கெமிக்கல் என்ற தனியார் ரசாயன ஆலையை இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த ஆலையில் சோடியம் ஹைட்ரோ சல்பைட் தயார் செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஆலையால் 800 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்படைந்துள்ளது. ரசாயனக் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.  இப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல், பெண்களுக்கு கருச்சிதைவு, உடல் ஊனம் போன்றவை ஏற்படுகிறது. எனவே, ஆலையை மூட வேண்டும்' என்று 2015-ம் ஆண்டு முதல் அம்மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறனர். அந்த ஊர் மக்களும் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள்போல நடந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழகக் காவல்துறை முன்னெச்சரிக்கையாகப் போலீஸைக் குவித்து போராட்டக் குழுவினரைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். நாளை கிராம மக்கள் சார்பில் மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதால் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி காமினி தலைமையில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் ஏ.டி.எஸ்.பி 2 பேர், டி.எஸ்.பி 13 பேர் இன்ஸ்பெக்டர் 50 பேர் சார்பு ஆய்வாளர்கள் 125 பேர்  பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸார் சுமார் 1,500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனால் கோவிலூர் பகுதி முழுவதும் பதற்றத்தோடு காணப்படுகிறது.