• :
  • :
களத்தில்

நியாயம் கேட்டால் மிரட்டுகிறார் தஞ்சாவூரில் போலீஸ் ஏட்டு மீது வழக்கு பதிவு!

நியாயம் கேட்டால் மிரட்டுகிறார்  தஞ்சாவூரில் போலீஸ் ஏட்டு மீது வழக்கு பதிவு!

தஞ்சாவூரில் போலீஸ் ஏட்டு ஒருவர் மீது பெண் அளித்த புகாரை அடுத்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாப்பேட்டை காவல்நிலையத்தில் தலைமைக்  காவலராக பணிபுரிவர் அஜித்குமார். இவருக்கும், கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கும், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததாகவும், பின்னர்  அந்தப் பெண் அஜித்குமாரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அஜித்குமார், தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் கிராம நாட்டாமை நெல்சனை அணுகி, எனது மனைவி இன்னொருவருடன் சென்றுவிட்டார். 13 ஆண்டுகளாக மறுமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன். தற்போது, எனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால், திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். உங்கள் கிராமத்தில் பெண் இருந்தால் சொல்லுங்கள் எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து ஜெபமாலைபுரம் கிராமத்தைச் சேர்ந்த இருதயமேரி என்பவரின் மகள் கோகிலாவை கேட்டதற்கு இருதயமேரி, இரண்டாம் தாரமாக என் பெண்ணை  தரமாட்டேன்  என  மறுத்திருக்கிறார்.
 
 
முதல் மனைவியோடு 15 நாள்கள் தான் வாழ்ந்தேன். அவர், இன்னொருவரோடு ஓடி விட்டார். அதனால், விவகாரத்து வாங்கி விட்டேன். உங்கள் பெண், முதல் தாரம் மாதிரி தான், என இருதயமேரியை நம்ப வைத்துள்ளார் அஜித்குமார். இதையடுத்து, கடந்த ஆண்டு வேளாங்கண்ணியில் கோகிலாவுக்கும், அஜித்குமாருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின்போதுதான் பிரச்னை ஆரம்பமானது. விவாகரத்து தீர்ப்பு நகல் கிடைக்கவில்லை. எனவே, திருமணத்தை போட்டோ, வீடியோ எடுக்க வேண்டாம். நகல் கிடைத்தவுடன், 3 மாதம் கழித்து பதிவுத் திருமணம் செய்துகொள்ளலாம் எனக் கூறியுள்ளார். ஆனால், உறவினர்கள் தங்களது செல்போனில் திருமண நிகழ்வுகளை படம் பிடித்துள்ளனர். திருமணமாகி 3 மாதங்கள் கடந்தும் பதிவுத் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது குறித்து கேட்டதால், கோகிலாவை, அஜித்குமாரும் அவரது தாயாரும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் அவர் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கோகிலாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
 
இதற்கிடையே, அஜித்குமார் தனது முதல் மனைவியிடம் சமரசம் பேசி, அவரைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இது குறித்து கூறிய கோகிலா, ``நான் எனது உறவினர்களை அழைத்துக்கொண்டு சென்று அஜித்குமாரிடம் எனக்கான நியாயம் கேட்டேன். ஆனால், என்னை அவர் தரக்குறைவாக விமர்சித்ததோடு, முதல் மனைவியுடன்தான்  சேர்ந்து வாழ்வேன் என்றார். தொடர்ந்து தொல்லை அளித்தால் கொலை செய்து விடுவேன் என்றும் அதிகாரத் தோரணையில் மிரட்டுகிறார்” எனக் கூறினார். கோகிலா இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் ஏட்டு  மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.