• :
  • :
களத்தில்

அரியலூரில் முன்னாள் ஊர்க்காவல் படை காவலர் கைது!

அரியலூரில் முன்னாள் ஊர்க்காவல் படை காவலர் கைது!

 அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.19 லட்சம் மோசடி செய்த முன்னாள் ஊர்க்காவல் படை காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
திருவள்ளூர் மாவட்டம் லெட்சுமணன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைப் பிரிவில் காவலராக பணியாற்றி உள்ளார். இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் கிராமத்தில் திருமணம் செய்துள்ளார். தற்போது ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொல்லாபுரம் கிள்ளைபாளையம் கிராமத்தில் வசித்து வருகின்றார். இவர் கடந்த ஒரு வருடமாகப் பலபேரிடம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஓட்டுநர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார். இதையடுத்து பலர் இவரிடம் வேலைக்காக பணம் கொடுத்துள்ளனர்.
 
 
பின்னர் பணம் கொடுத்தவர்கள் கார்த்திகேயனை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயங்கொண்டம் அருகே உள்ள நரசிங்கபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், அரியலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் சுமதி தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், ஜெயங்கொண்டத்தில் கார்த்திகேயன் இருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து தனிப்படையினர் ஜெயங்கொண்டத்தில் தேடினர்.
 
அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த கார்த்திகேயனை போலீசார் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் இடையக்குறிச்சியைச் சேர்ந்த ஜெயந்தி, அகஸ்டீன், ஜெரீன் உள்ளிட்ட 11 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ19 லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயனை ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.