img/728x90.jpg
நாங்கள் குறைத்துவிட்டோம், நீங்கள் எப்போது குறைப்பீர்கள்?- மாநில அரசுக்கு தமிழிசை கேள்வி

நாங்கள் குறைத்துவிட்டோம், நீங்கள் எப்போது குறைப்பீர்கள்?- மாநில அரசுக்கு தமிழிசை கேள்வி

 பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு ரூ.2.50 குறைத்துள்ளது. மாநில அரசு இதைவிட அதிகமாக குறைக்கவேண்டும் என தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார்.

 
மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை ரூ.2.50 குறைத்துள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் தமிழிசை கூறியதாவது:
 
இடைத்தேர்தலில் தயார் நிலையில் இருக்கிறீர்களா? அதிமுகவை ஆதரிக்க போகிறீர்களா?
 
அதாவது எந்தக்கட்சியையும் ஆதரிக்கும் கொள்கை முடிவில் நாங்கள் இல்லை. நாங்கள் போட்டியிட வேண்டும் என்பதுதான் மாநில பாஜகவின் திட்டம். அதற்கான ஆயத்தப்பணிகளை செய்து வருகிறோம். ஆனாலும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது எங்கள் மேலிட தலைவர்களின் ஆலோசனைப்படித்தான் நடக்கும்.
 
இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. வாக்குச்சாவடி அளவில் இரு தொகுதிகளிலும் எங்கள் பணி துரிதமாக நடந்து வருகிறது. ஆனால் தேர்தலில் நிற்பது பற்றி ஆலோசனை செய்து மத்திய தலைமையின் முடிவுப்படி அறிவிப்போம்.
 
பெட்ரோல் டீசல் விலையில் மத்திய அரசு குறைத்ததுபோல் மாநில அரசு குறைக்க வலியுறுத்துவீர்களா?
 
பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அதற்கு மத்திய அரசு காரணம் இல்லை என்பது நமக்குத் தெரியும், ஆனாலும், பெட்ரோல் டீசல் விலையில் ரூ. 2.50 என்கிற அளவில் மத்திய அரசு குறைத்துள்ளது.
 
இது மிகப்பெரிய சுமையில் கொஞ்சம் சுமையை குறைத்ததுபோல் இருக்கும். ஆனால் சதவிகிதத்தில் வரியை அதிகமாக பெறுவது மாநில அரசாங்கங்கள். மாநில அரசாங்கத்தில் ஏற்கெனவே பாஜக ஆளும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் வாட் வரி, கலால் வரியை குறைத்து முன்னுதாரணமாக இருக்கிறது.
 
அதனால் தமிழக அரசுக்கு மக்களும் கோரிக்கை வைத்தனர், மத்திய நிதி அமைச்சரும் கோரிக்கை வைத்துள்ளார். அதனால் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். அதுவும் உடனே பரிசீலிக்க வேண்டும் என்பது எனது கருத்து.
 
இவ்வாறு தமிழிசை வலியுறுத்தினார். இதே கருத்தை ட்விட்டரிலும் அவர் வலியுறித்தியுள்ளார். அதற்கு அவருக்கு ட்விட்டரில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
 
தமிழிசை ட்விட்டரில் “மத்திய அரசு பெட்ரோல்,டீசல் மீதான வரியை குறைத்தது போன்று தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டுமென தமிழக பாஜக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.”
 
என பதிவிட்டுள்ளார்.
 
இவரது பதிவின் கீழ் நிறைய வாசகர்கள் விமர்சித்துள்ளனர்.
 
கார்த்திக் சம்பத் என்பவர் பதிவில், “ Karthick Sampath‏ @karthick_aaron “20 ரூபா ஏத்திட்டு... 2.50 ரூபா குறைக்குறானுகலாமா... என்ன பிச்ச போடிறீங்களா... இந்த ஆட்சியே மக்கள் போட்ட பிச்சைனு மறந்து விட்டீர்களா”
 
குமாரசாமி என்பவர் பதிவில் “Kumarasamy‏ பெட்ரோல் டீசல் எரி பொருளை தயாரிக்க ராமர் பிள்ளையையும் பதஞ்சலி பாபாவையும் விட்டீங்கன்ன, 20 லிருந்து 30குள்ள தருகிறேன்னு சொன்னா ஏன் மோடி ஒத்துக்க மாட்டேங்கிறார். ஒரு வேளை இறக்குமதியினால் உங்க கட்சி மிகு பலனடையுதோ?. அனுமதிச்சா பெட்ரோல் விலையும் குறையும் டாலரும் 40க்கு வரும்.” என கிண்டலடித்துள்ளார்.
 
செந்தில் குமரன் என்பவர் பதிவில் “senthilkumaran‏ பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்துக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லைனு சொன்னது வேற வாயா ? இல்லை உங்க அட்மின் நாக்கா” என கேட்டுள்ளார்.
 
லோகேஷ்குமார் என்பவர் பதிவில் “ மேடம் இப்போது மட்டும் ட்விட் பண்றீங்க இவ்வளவுநாள் கேள்வி கேட்டப்ப பதிலே இல்லை?” என கிண்டலடித்துள்ளார்.