• :
  • :
களத்தில்

மதுரையில் எய்ம்ஸ் திட்ட அறிக்கை தயார்

மதுரையில் எய்ம்ஸ்  திட்ட அறிக்கை தயார்

மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாராகி உள்ளது. விரைவில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை, தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:மதுரையில் அமைய உள்ள, எய்ம்ஸ் மருத்துவமனை நிலை குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள், செப்., 30ல் வெளியாகின. மருத்துவமனை அமைப்பதன், தற்போதைய நிலவரம் குறித்து, சுகாதார செயலர், ராதாகிருஷ்ணன், அக்., 1ல், மத்திய அரசிடம் கேட்டார்.நேற்று முன்தினம், மத்திய அரசிடமிருந்து, அதிகாரப்பூர்வமாக பதில் வந்துள்ளது. பாரத் நிர்மான் பிரதம மந்திரி சதக் யோஜனா என்ற, பி.எம்.எஸ்.எஸ்.ஒய்., திட்டத்தில், 'எய்ம்ஸ் மருத்துவமனை' வழங்கப்பட்டுள்ளது. இதன் இயக்குனர் சஞ்சய் ராய், அனுப்பியுள்ள மெயிலில், 'தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார்.'மதுரை மாவட்டம் தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்' என, அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, விரிவான திட்ட அறிக்கை தயாராகி உள்ளது. ஆரம்ப கட்ட பணிக்கு, 'ஹைட்ஸ்' நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. மண் ஆய்வு முடிந்துள்ளது.முதல் கட்டமாக, 1,264 கோடி ரூபாய் ஒதுக்கக் கோரி, செலவின நிதிக்குழுவிற்கு, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது விரைவில், அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும். தோப்பூரில் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ள, 200 ஏக்கர் நிலம், மருத்துவ துறைக்கு சொந்தமானது.முதல்வர் டில்லியில், பிரதமரை சந்தித்து, அமைச்சரவையில் விரைவாக ஒப்புதல் வழங்கும்படி வலியுறுத்த உள்ளார். நானும், சுகாதாரத்துறை செயலரும், வரும், 9ம் தேதி, மத்திய அமைச்சரை சந்தித்து, பணியை விரைவுப்படுத்தும்படி, வலியுறுத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.