img/728x90.jpg
மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார் அரசு பேருந்து ஓட்டுநர்

மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார் அரசு பேருந்து ஓட்டுநர்

 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு பேருந்துகளின் நிலை குறித்து கேள்வியெழுப்பி வீடியோ வெளியிட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு போக்குவரத்து பேருந்து ஓட்டுநர் விஜயகுமார் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.

 
பழனியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (34). அரசு போக்குவரத்து பேருந்து ஓட்டுநரான இவர், பழனியிலிருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்தின் ஓட்டுநராக உள்ளார். பேருந்தில் அமர்ந்தபடியே சமீபத்தில் அவர் வெளியிட்ட காணொலியில், அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டியிருந்தார். பேருந்துகளின் மேற்கூரையில் ஓட்டைகள் இருப்பதால், மழைகாலங்களில் மழையில் நனைந்தபடி பேருந்து ஓட்ட வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
இதனால், தான் உட்பட பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படுவதாக விஜயகுமார் ஆதங்கமடைந்தார். இந்த காணொலி வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது. இதையடுத்து ஆத்திரமடைந்த அதிகாரிகள் அரசுப் பேருந்து ஓட்டுநர் விஜயகுமாரை சஸ்பெண்ட் செய்தனர். இதனை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கண்டித்தன.
 
இந்நிலையில், மீண்டும் விஜயகுமார் பணியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து விஜயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் பணியில் மீண்டும் சேர்க்கப்படுவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.