img/728x90.jpg
ஐந்து நிறுவனங்கள் ரூ 1,259 கோடி டெண்டர் மர்மம் சூழ்ந்த நெம்மேலி குடிநீர்த் திட்டம்!

ஐந்து நிறுவனங்கள் ரூ 1,259 கோடி டெண்டர் மர்மம் சூழ்ந்த நெம்மேலி குடிநீர்த் திட்டம்!

 தமிழகத்துக்கே ரெட் அலெர்ட் கொடுக்கும் அளவுக்கு மழை பெய்திருக்கிறது. ஆனாலும், சென்னைக்குக் குடிநீர் தரும் ஏரிகள் இன்னமும் நிரம்பாததால், தலைநகரில் குடிநீர்த் தட்டுப்பாடுதான் நிலவுகிறது. கடந்த ஆண்டு கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தில் தவித்தது சென்னை. இதையெல்லாம் தவிர்க்க ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒரு திட்டத்தை, இன்னமும் இழுத்தடித்து வருகிறது தமிழக அரசு. இதற்கான டெண்டரும் நீதிமன்ற வழக்கில் சிக்க, இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்ற சந்தேகம் பெரிதாக எழுந்துள்ளது.

 
சென்னை அருகே மீஞ்சூர், நெம்மேலி என இரு இடங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் செயல்படுகின்றன. மூன்றாவதாக, ‘‘நெம்மேலியில் ரூ.1,000 கோடியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்படும். சுமார் 6.46 லட்சம் மக்கள் பயனடைவர்’’ என 2013-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி தமிழக சட்டசபையில் 110 விதியின்கீழ் அறிவிப்பு வெளியிட்டார் ஜெயலலிதா. இந்தத் திட்டம்தான், அரசியல் போர்வைக்குள் ஐந்தரை ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கிறது. இதில் நடந்துகொண்டிருக்கும் மர்மமான திருப்பங்கள்தான், அரசியல் அதிரடிகளைக் கிளப்பிக்கொண்டிருக்கின்றன.
 
 
 
இப்படி ஒரு திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கவும், டெண்டர் விதிகளை இறுதி செய்யவும், ‘ஏயிகாம்’ (AECOM) என்ற நிறுவனத்தை ‘கன்சல்டன்ட்’ ஆக சென்னைப் பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் 2012 டிசம்பர் 3-ம் தேதி நியமித்தது. அவர்களின் பரிந்துரை அடிப்படையில்தான் இந்தத் திட்டத்தை ஜெயலலிதா 2013-ல் அறிவித்தார். 2016-ம் ஆண்டு இதற்கான உலகளாவிய டெண்டர் கோரப்பட்டபோது, திட்டத்தின் மொத்தத்தொகை ரூ.1,259 கோடியாக உயர்ந்திருந்தது. ஜெர்மனியின் KfW என்ற நிறுவனம், இதில் ரூ.700 கோடி நிதியுதவி செய்ய முன்வந்தது. 
 
2017 ஜனவரி 19-ம் தேதி, டெண்டருக்கான இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. என்ன காரணத்தாலோ, எட்டு முறை டெண்டர் தேதி நீட்டிக்கப்பட்டது. 2017 செப்டம்பர் 15-ம் தேதி இது இறுதி செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஐந்து நிறுவனங்களின் டெண்டர்களை, ‘ஏயிகாம்’ நிறுவனம் பரிசீலித்தது. இதில், ‘ஸ்பெயின் நாட்டின் Cobra Instalaciones Y Servicios, வளைகுடா நாடுகளில் செயல்படும் Tecton Engineering & Construction ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே தொழில்நுட்பரீதியாகத் தகுதியானவை’ என ஏயிகாம் அறிவித்தது. இந்த நிலையில் ராஞ்சியைச் சேர்ந்த சிங் எலெக்ட்ரிக்கல்ஸ் அண்டு கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனம், டெண்டர் தேதியை நீட்டிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. அப்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘‘சிங் நிறுவனம் டெண்டர் விதிகளின்படித் தகுதியற்றது. பங்கேற்ற நிறுவனங்களில் இரண்டு மட்டுமே தகுதியானவை’’ என நீதிமன்றத்திலேயே சொன்னார். 
 
ஆனால், அதன்பின் இந்த விவகாரத்தில் பல திருப்பங்கள் நிகழ்ந்தன. சென்னை குடிநீர் வாரிய டெண்டர் கமிட்டி கூட்டம் கூடியது. அதில், இத்திட்டத்துக்கு நிதியுதவி செய்யும் ஜெர்மனியின் KfW நிறுவனத்தின் ஒப்புதலுடன், ‘Cobra Spain-Tecton மற்றும் பிரான்ஸின் Suez International ஆகிய நிறுவனங்களும் தகுதியானவை’ என அறிவிக்கப்பட்டன. பிறகு Acciona Aqua என்ற ஸ்பெயின் நிறுவனத்தின் டெண்டரையும் சென்னை குடிநீர் வாரியம் பரிசீலனைக்கு அனுமதித்தது. 
 
இந்தச் சூழலில்தான், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Suez International நிறுவனம், ‘நாங்கள் மட்டுமே தொழில்நுட்பரீதியாகத் தகுதியானவர்கள் என அறிவிக்க வேண்டும்’ என இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம், கோவை மக்களுக்குக் குடிநீர் வழங்கிப் பராமரிக்கும் உரிமத்தை ரூ.3,150 கோடிக்கு எடுத்த நிறுவனம்தான் சூயஸ். இப்போது இந்தத் திட்டத்தையும் அவர்களுக்கே கொடுக்க இருப்பதாகப் புகார் கிளம்பியிருக்கிறது. ‘டெண்டரை இறுதி செய்தாலும், பணி ஆணையை வழங்கக் கூடாது’ என நீதிமன்றம் இப்போது உத்தரவிட்டிருக்கிறது.
 
 
 
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘‘ரூ.14 கோடி கொடுத்து நியமிக்கப்பட்ட கன்சல்டன்ட் நிறுவனத்தின் ஆலோசனைகளைப் புறக்கணித்தார்கள். ஒப்பந்தப் புள்ளிகளை பல மாதங்கள் திறக்கவேயில்லை. கோப்ரா நிறுவனம் சி.பி.ஐ விசாரணையில் சிக்கியுள்ளது. இறுதிக்கட்டத்தில் கோப்ராவை நிராகரித்து, சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கும் உள்நோக்கத்துடன், முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, தற்போது உத்தேசித்துள்ள டெண்டரை இறுதிசெய்யக் கூடாது. மறுடெண்டர் கோர வேண்டும். தவறிழைத்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’  என்றார்.
 
சென்னைக் குடிநீர் வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளர் ராஜேந்திரன், ‘‘இது உலகளாவிய டெண்டர். இதற்கென்று விதிமுறைகள் உள்ளன. ஆலோசனை நிறுவனம், தமிழக அரசின் டெண்டர் கமிட்டி, 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்ட டெண்டர் போர்டு, நிதி வழங்கும் ஜெர்மன் நிறுவனம் ஆகியவற்றின் ஒப்புதலுடன்தான் டெண்டர் நடவடிக்கைகள் வெளிப்படையாக நடக்கின்றன’’ என்று முடித்துக்கொண்டார்.
 
ஜெயலலிதா அறிவித்த வேலையைத் தொடங்கவே ஐந்தரை ஆண்டுகள் ஆகியுள்ளன. ‘அம்மாவழியில்’ செயல்படும் அரசு, அதில் நிகழ்த்தும் மர்மங்கள் தலைசுற்ற வைக்கின்றன.