img/728x90.jpg
பல்லாயிரம் வோல்டேஜ் இடி தாங்கும் இடிதாங்கி மரம் உண்மையா ?

பல்லாயிரம் வோல்டேஜ் இடி தாங்கும் இடிதாங்கி மரம் உண்மையா ?

 ஆத்தி மரம் இடியைத் தாங்கி வளரும் என்று சொல்கிறார்கள். இடியைத் தாங்குவதற்காக இதைப் பல ஊர்களில் வளர்த்திருக்கின்றனர்.

பல்லாயிரம் வோல்டேஜ் இடி தாங்கும் இடிதாங்கி மரம்... உண்மையா!?
 
ஒருமுறை கோயிலுக்குச் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தேன். அம்மரம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதைப்பற்றி விசாரித்தபோது அது, ``இடிதாங்கி மரம்" எனத் தெரியவந்தது. எவ்வளவு பெரிய இடி விழுந்தாலும் இந்த மரம் தாங்கும் எனப் பலரும் விளக்கமளித்தனர். அட... இப்படியொரு மரமா என நினைத்து அதுபற்றிக் கூடுதலாகத் தகவல்கள் சேகரிக்கத் தொடங்கினேன். 
 
மரங்களில் பல வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு மரத்துக்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு. அனைத்துக் குணங்களும், அதன் தனித்தன்மையை வெளிப்படுத்துபவை. அந்த வரிசையில் ஆத்தி மரம் மிக முக்கியமானது. இதை வட்டார வழக்குகளில் `இடிதாங்கி மரம்' என்றும் அழைப்பர். அதிகமான மருத்துவக் குணங்களைக் கொண்ட இம்மரங்கள் பெரும்பாலும் கோயில்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இம்மரம் சுமார் 10 முதல் 15 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இலைகள் அரை வட்ட வடிவத்துடன் ஒன்றை ஒன்று இணைத்தது போலக் காணப்படும். 
 
ஆத்தி மரம் இலையுதிர் மர வகையைச் சார்ந்தது. கடும் வெப்பத்தை அதிகமாகத் தாங்கி வளரும். சொரசொரப்பான கருமையான தண்டுகளுடன் காணப்படும். இம்மரம் பிப்ரவரி மாதத்தில் இலையை உதிர்த்து, மார்ச் மாதம் துளிர் விடும். ஏப்ரல் மாதம் பூத்து ஆகஸ்ட் மாதம் காய்க்க ஆரம்பித்துவிடும். இதன் மலர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். 
 
இதன் காய்கள் திருகி வளைந்து, தகடு வடிவில் இருக்கும். இதன் விதைகள் கருஞ்சிவப்பு நிறங்களில் இருக்கும். வறட்சியான காட்டுப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். ஆனால், இன்றளவில் தமிழகத்தில் குறைவான எண்ணிக்கையில்தான் காணப்படுகின்றன. தமிழகத்தில் ஆத்தி மரமானது, அரசமந்தம், பேயத்தி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த மரத்தின் இலை, காய், கனி, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்களைக் கொண்டது. இம்மரத்திலிருந்து எடுக்கப்படும் பட்டை மருத்துவக் குணம் வாய்ந்தது. வீடுகளில் அலங்கார மரமாகவும் சிலர் வளர்க்கிறார்கள். 
 
இதன் மருத்துவக் குணங்களைப் பொறுத்தவரை, வேர், பட்டையை இடித்து தண்ணீரில் போட்டுக் காய்ச்சி குடித்தால் கல்லீரல் வீக்கம், வலி ஆகியவை குணமாகும். பசியின்மையைப் போக்கும். ஆத்தி மரத்தின் காயைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து, அந்தத் தண்ணீரால் வாய்க்கொப்பளித்தால் நாக்கில் இருக்கும் புண், தொண்டை நோய்கள் குணமாகும். பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் நன்மை தரும். சங்கக்காலத்தில் சேரருக்கு போந்தை என்று அழைக்கப்படும் பனம்பூ, பாண்டியருக்கு வேப்பம் பூ, சோழருக்கு ஆர் எனும் ஆத்திப்பூ ஆகியவை அடையாளமாக இருந்திருக்கிறது. இதைத் பழைமையான தொல்காப்பியம் நூலின் மூலம் அறியலாம். 
 
சீசல்பினாய்டியே எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் தாவரவியல் பெயர் பாஹினியா ரசிமோசா (Bauhinia racemosa). பழங்காலத்தில் இடி ஊரைத் தாக்காமல் தாங்க இம்மரத்தைப் பயன்படுத்தியதாகச் சொல்கிறார்கள். இந்தியா தவிர சீனா, இலங்கை ஆகிய நாடுகளிலும் ஆத்தி மரம் காணப்படுகிறது. இந்தியாவின் சில பகுதிகளில் ஆத்தி இலை பீடி சுற்றப் பயன்படுத்தப்படுகிறது. 
 
ஆத்தி மரம் பற்றி ஓய்வுபெற்ற வனத்துறை உதவி வனப்பாதுகாவலர் மரம் ராஜசேகரனிடம் பேசினோம். "ஆத்தி மரம் இடியைத் தாங்கி வளரும் என்று சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பொதுவாக எல்லா மரங்களுக்கும் இடியை ஈர்க்கக்கூடிய தன்மை அதிகமாக இருக்கும். அதனால் ஆத்தி மரம் இடியைத் தாங்கும் என்பதற்கு உறுதியான தரவுகள் இதுவரை இல்லை. பழங்காலத்திலிருந்து இதை 'இடிதாங்கி மரம்' என்றும் பெயர் வைத்து அழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். அதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், இது மூலிகைகளுக்காக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருவது உண்மைதான்" என்றார்.