img/728x90.jpg
 மயிலாடுதுறை சோழன் நகர் கதை - கரண்ட் இருந்தா சொல்லு கல்யாணம் பண்ணிக்கிறேன்!

மயிலாடுதுறை சோழன் நகர் கதை - கரண்ட் இருந்தா சொல்லு கல்யாணம் பண்ணிக்கிறேன்!

 மயிலாடுதுறை அருகே 20 ஆண்டுகளாக மின் இணைப்பு பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வீட்டிற்கு மின் வசதி பெற முடியாமல் தவிக்கிறது நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்திலுள்ள மூவலூர் ஊராட்சியின் சோழன் நகர்.

 
சோழன் நகரில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் இவர்களின் வீடுகளுக்கு தற்போது வரை மின் இணைப்பு பெற முடியாமல் அந்தப் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
 
சோழன் நகர் பகுதி நீர்நிலை மற்றும் புறம்போக்கு இடம் என்று கூறி மின் இணைப்பு கொடுக்க மறுக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்றவை அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன. மின்சாரத்தைத் தவிர மற்ற அனைத்தும் சோழன் நகர் வாசிகளுக்குக் கிடைத்துள்ளது. 
 
 
"வீட்டு வரி, அது இதுன்னு எல்லாத்தையும் கட்டுறோம். 20 வருஷமா ஏறாத ஆபீஸ் இல்ல, பார்க்காத ஆபீசர்கள் இல்ல. மனு கொடுக்கிற இடத்துல எல்லாம், 'மின் இணைப்பு கொடுக்கலாம்'னு பரிந்துரை செஞ்சு மின் வாரியத்துக்கு அனுப்புறாங்க. ஆனா, எங்களுக்கு இன்னும் வெளிச்சம் வந்த பாடில்லை" என்று புலம்புகிறார் சோழன் நகரைச் சேர்ந்த தனலட்சுமி.
 
உரிய ஆவணங்களை இவர்கள் சமர்ப்பித்தாலும் மின் இணைப்பை மட்டும் பெற முடியவில்லை. இதனால் இவர்களின் குழந்தைகள் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற புறம்போக்கு நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எந்த அடிப்படையில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதோ, அதே அடிப்படையில் தங்களுக்கும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த சோழன் நகர் குடும்பங்களின் வேண்டுகோளாக வைக்கப்படுகிறது.
 
2017ல் தொடங்கப்பட்ட 'சௌபாக்கியா திட்ட'த்தின் கீழ், வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 'இப்போதாவது எங்களுக்கு மின்சாரம் கிடைக்குமா' என்று ஏங்கும் அவர்களின் வீடுகளில் மட்டுமல்ல, 20 ஆண்டுகால போராட்டத்தின் விரக்தியால் கண்களும் பிரகாசம் இன்றி இருண்டுதான் இருக்கின்றன.
 
"சோழன் நகர் பகுதியில் 20 வீடுகளுக்கு, 20 ஆண்டுகளாக மின் இணைப்பு ஏன் தரவில்லை?" என்ற கேள்வியோடு மின் வாரியத்தை அணுகினோம். மூவலூர் (பொறுப்பு) உதவி மின் பொறியாளர் பாலு நம்மிடம் பேசியபோது.. "மூவலூர் ஊராட்சி, சோழன் நகர் பகுதி 'நீர்நிலை புறம்போக்கு' என்பதால்தான் மின் இணைப்பு தரவில்லை. நீர்நிலை அல்லாத நத்தம் புறம்போக்காக இருந்தால் கூட சில அடிப்படையில் மின் இணைப்பு கொடுக்க முடியும். நீர்நிலை நத்தம் புறம்போக்கு பகுதிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசாணையே இருக்கிறது. ஆகவேதான், அந்தப் பகுதிக்கு மின் இணைப்பு கொடுக்கவில்லை" என்றார்.
 
மேலும் விவரங்களுக்குக் குத்தாலம் உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியனிடம் பேசினோம், "சோழன் நகர் மக்கள் பலரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். இருந்தாலும் அந்தப் பகுதி 'நீர்நிலை புறம்போக்கு' என்பதாலும், 'பொதுப்பணித்துறை மின் இணைப்பு தரக் கூடாது' என்று தடை விதிப்பதாலும்தான் மின் இணைப்பு வழங்கவில்லை. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சமீபத்தில் தெருவிளக்கு மட்டும் அந்தப் பகுதிக்கு வழங்கப்பட்டது. மேலும், அந்தப் பகுதி மக்கள் பொதுப்பணித்துறையிடம் இருந்து தங்களின் இடத்திற்கான 
தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்கிக் கொடுத்தால் மின் இணைப்பு தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும்" எனத் தெரிவித்தார்.
 
"ஒத்த சோலார் லைட்டு வெளிச்சத்துல எங்க குடும்பமே இயங்குது" எனச் சொல்லும் குடும்பத் தலைவர், " 'கரன்ட் இல்லாத வீட்டுல நான் பொண்ணு கட்ட மாட்டேன்'னு மாப்பிள்ளை வீட்டுல சொல்றதால என் பொண்ணுக்கு கல்யாணம் ஆக மாட்டேங்குது" எனக் கண்ணீர் விடும் அம்மா, " 'டிஜிட்டல் இந்தியா'ன்னு சொல்றீங்க.. ஆனா எங்க வீட்டுக்கு கரன்ட்கூட இல்ல. நான் எப்படி படிக்கிறது" எனக் கேள்வி கேட்கும் ஆறு வயது சிறுவன்... இந்தக் குரல்களுக்கு அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகிறது?