• :
  • :
களத்தில்

அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்

அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்

 கிராமத்திலிருந்த அனைத்துக் கட்சி கொடிகளையும் அகற்றியதோடு, அரசியல்வாதிகள் ஊருக்குள் நுழையவும் தடைவிதித்துள்ள சம்பவம் சீர்காழி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 
நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள கடலோரக் கிராமம் தொடுவாய். இந்த ஊரைச் சேர்ந்த கவியரசன் என்ற மீனவர், கடந்த அக்டோபர் 10-ம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது தவறி விழுந்து மாயமானார். இவர் காணாமல் போனது குறித்து உரிய அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லியுள்ளனர். அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சக மீனவர்களும், உறவினர்களும் இரவு பகலாக இன்று வரை தேடி வருகின்றனர். இதுவரை கவியரசன் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில், கவியரசனைத் தேடவோ, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லவோ அரசு அதிகாரிகளோ அல்லது அரசியல் கட்சியினரோ யாரும் வரவில்லை.  
 
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், கிராமத்தில் வரிசையாகப் பறந்து கொண்டிருந்த ஆளும் அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிக் கொடிகளையும் இறக்கி அகற்றினர். கொடிமர பீடங்களிலிருந்த கல்வெட்டுகளை வெள்ளைத் துணிகளைக் கொண்டு மூடினர். அத்துடன் ஆபத்துக்கு உதவாத அரசியல் கட்சிகள் இனி நம்ம ஊருக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தனர். எனவே, அரசியல் கட்சியினர் இனி எவரும் ஊருக்குள் நுழையக்கூடாது என்று தடைவிதித்துள்ளதோடு, பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்றும் அறிவித்துள்ளனர்.  இதைக் கேள்விப்பட்ட அரசியல் கட்சியினர் தொடுவாய் கிராமத்தினரின் கோபத்தை எப்படி சாந்தப்படுத்தலாம் என்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.