img/728x90.jpg
தமிழர்க்குப் பெருமை

தமிழர்க்குப் பெருமை

காந்தி பிறந்த 150-வது ஆண்டை ஒட்டி நாடு முழுக்க நடந்துகொண்டிருக்கும் பல முக்கியமான காரியங்களுக்கு கிரியா ஊக்கியாகச் செயல்படுவது டெல்லியிலுள்ள ‘தேசிய காந்தி அருங்காட்சியகம்’. உலகெங்கும் உள்ள காந்திய நிறுவனங்களுக்கும், காந்திய படிப்புகள் ஆய்வுகளுக்கும் இதயம் போன்று செயல்படும் நிறுவனம் இது. வரலாற்று முக்கியத்துவம் மிக்க ‘காந்தி 150’ தருணத்தில், தமிழகம் பெருமை கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உண்டு. தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இன்றைய இயக்குநர் ஒரு தமிழர் அண்ணாமலை. இதுநாள் வரை இப்பதவியில் அமர்ந்திருக்கும் ஒரே தமிழரும் இவரே. காந்தியின் ஒட்டுமொத்த எழுத்துகளையும் மின்னணுமயமாக்குவது, காந்தியின் படைப்புகளை அடுத்த தளத்துக்குக் கொண்டுசெல்வது என்று நிறைய பணிகள் இன்று டெல்லியில் நடக்கின்றன. கூடவே, தமிழுக்கும் கவனம் அளித்துவருகிறார் அண்ணாமலை. ஏ.கே.செட்டியார் தயாரித்த காந்தி ஆவணப் படத்தைக் கொண்டுவந்தது, தமிழில் காந்தி எழுத்துகளைத் தொகுத்தது ஆகியன முக்கியமான பணிகள். ‘மக்கள் விழிப்புணர்வு மையம்’ சார்பில் சமீபத்தில் நடந்த விழாவில் இவருக்கு விருது அளித்துக் கௌரவித்திருக்கிறார் நீதிபதி சந்துரு.