img/728x90.jpg
டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி!

டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி!

 கழுகாரிடமிருந்து போன். காது கொடுத்ததுமே, ‘‘என்ன நீர் ‘கேம் சேஞ்சர்’ என்று பெரிய பில்டப் எல்லாம் கொடுத்தீர். ஆனால், கடைசியில் அவரும் கேமில் சிக்கிக்கொண்டுவிட்டாரே’’ என்று கேட்டோம். கழுகார் சளைக்கவில்லை. ‘‘இப்போதும் எடப்பாடிதான் கேம் சேஞ்சர். அவர் சிலரை வைத்து ஆட்டம் காண்பித்தார். இப்போது அவரை வைத்தே ஆட்டம் காட்ட ஆரம்பித்துள்ளது டெல்லி. மூன்றே நாள்களில் காட்சிகள் இப்படி மாறும் என்று எடப்பாடியேகூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்’’ என்ற கழுகார், ‘‘மற்றவை வாட்ஸ்அப்பில்’’ என்றபடி போனை துண்டித்தார். சில நிமிடங்களில் வாட்ஸ்அப்பில் செய்திவெள்ளம் பெருக்கெடுத்தது...

 
எடப்பாடிக்கு புரியாத ‘எல்லோரையும்’!
 
அக்டோபர் 8-ம் தேதி முதல்வர் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தபோது, அவரது கோரிக்கைகள் பலவற்றுக்கும் க்ரீன் சிக்னல் காட்டப்பட்டது. அதேசமயம், அவருக்குத் தெரியாமலே ரெட் சிக்னல்கள் சிலவும் விழுந்துள்ளன. உற்சாக மிகுதியில் அவற்றையெல்லாம் கவனிக்காமல் திரும்பிவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சிலர். நிதி சார்ந்த கோரிக்கை ஃபைல்களோடுதான் டெல்லி சென்றார் முதல்வர். ஆனால், தமிழகத்தின் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்துச் செல்லவில்லை. சந்திப்பின்போது, “எல்லோரையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்று பிரதமர் கூறினாராம். ஆனால், அதையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையாம் எடப்பாடி.
 
அதாவது, ‘பிரிந்துகிடக்கும் அ.தி.மு.க-வினர் அனைவரையும் ஒன்றாகத் திரட்டிக்கொண்டு வாருங்கள்’ என்பதுதான் அதன் அர்த்தம். பன்னீர்செல்வம்தான் முதலில் டெல்லிக்கு நெருக்கமானவராக இருந்தார். ஒரு கட்டத்தில் அந்த உறவு கெட்டுப்போனது. அதிலிருந்தே தமிழக ஆட்சி மற்றும் கட்சிப்பணிகளில் ஒட்டியும் ஒட்டாமலும்தான் இருந்துவருகிறது பன்னீர் தரப்பு. தனி ஆவர்த்தனம் நடத்திக்கொண்டிருக்கும் தினகரன் தரப்புக்கு, தமிழகத்தில் பரவலாக செல்வாக்கு உள்ளது. இத்தகைய சூழலில், எடப்பாடியை மட்டும் வைத்துக்கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முடியாது என்பதுதான் டெல்லி மேலிடத்தின் கணிப்பு. அதனால், ‘அ.தி.மு.க-வினரை ஒன்றாக இணைக்க வேண்டும்’ என்று நினைக்கிறது டெல்லி பி.ஜே.பி. அப்படி ஒன்றுபட்ட அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேரும்போது, ஜெயம் நிச்சயம் என்றும் கணக்குப்போடுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்துதான், ‘எல்லோரையும்’ என்று சொன்னாராம் பிரதமர். 
 
திரும்பியதும் திருப்பம்! 
 
டெல்லி பி.ஜே.பி-யின் மனநிலையை கணிக்கத் தவறிய எடப்பாடி, தான் சொன்னதை எல்லாம் டெல்லி ஆமோதித்துவிட்டது என்று உற்சாகமாக ஊர் திரும்பினார். ஆனால், ‘சி.பி.ஐ விசாரணை’ என்கிற உத்தரவு, அவரை மூன்று நாள்களாக உள்ளுக்குள்ளேயே முடக்கிப்போட்டுவிட்டது. தி.மு.க தொடர்ந்துள்ள வழக்கில், நீதிமன்றத்திலிருந்து தனக்கு எதிராக இப்படி ஓர் உத்தரவு பிறப்பிக்கப் படும் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லையாம் முதல்வர் எடப்பாடி. 
 
இப்படி முதல்வரை சிக்கலில் மாட்டிவிட்டதில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கும் (டி.வி.ஏ.சி) பங்கு உண்டு என்கிறார்கள். ஏற்கெனவே பன்னீர்மீது சொத்துக்குவிப்பு வழக்கு போட்டிருக்கிறது தி.மு.க. அது அப்படியே விசாரணையில் இருக்க, அதற்குப் பிறகு முதல்வர்மீது தி.மு.க தொடுத்த நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு வழக்கில் மட்டும் மின்னல்வேகத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்தது டி.வி.ஏ.சி. இதுவே, நீதிமன்றத்தின் சந்தேகத்தை அதிகரித்துவிட்டது.
 
டெல்லி ஆட்டம் ஆரம்பம்!
 
சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மூன்று மாதங்களுக்குள் முதல்கட்ட விசாரணையை முடிக்க வேண்டும் என்கிற கெடுவையும் கொடுத்திருப்பது, எடப்பாடியை மேலும் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. இது தனக்கு வைக்கப்பட்ட செக் என்று நினைக்கும் எடப்பாடியார், சி.பி.ஐ விசாரணையைத் துரிதப்படுத்தும் வகையில்தான் இப்படி கெடு விதிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறார். அதாவது, ஒரு மாதத்தில்கூட முதல்கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்யலாம். அப்படித் தாக்கல் செய்த அடுத்த நிமிடமே முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்யச்சொல்லி உத்தரவிட முடியும். விசாரணையின்போது முதல்வர் வீட்டிலேயே ரெய்டு நடத்தப்படலாம். ஆக, இனி அவரைக் காப்பாற்றுவது என்பது டெல்லி கையில்தான் உள்ளது.
 
இதில் இரண்டு விஷயங்களை பிரதானமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள் கோட்டையில் உள்ள அதிகாரிகள். ஒன்று, இந்த வழக்கு அழிக்கமுடியாத ஆவணங்களை உள்ளடக்கிய வழக்கு. இரண்டு, நெடுஞ்சாலைத் துறையின் ‘எம்பவர்டு கமிட்டி தலைவர்’ என்கிற அதிகாரத்துடன் ஒப்பந்தங்களை யாருக்குத் தரவேண்டும் எனத் தீர்மானித்தது அந்தத் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர்தான். அதனால், ‘எனக்கு ஒன்றும் தெரியாது’ என முதல்வர் ஒதுங்கிக்கொள்ள முடியாது. இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாக சி.பி.ஐ வழக்குப் போட்டால், குற்றம் சாட்டப்படுபவர்கள் பட்டியலில் முதல் பெயராக முதல்வரின் பெயரே இடம்பெறும் என்கிறார்கள். ஆக, பி.ஜே.பி-யின் பிடி எப்படி வேண்டுமானாலும் இறுகும் அளவுக்கு நிறைய வாய்ப்புகள் உருவாகிவிட்டன. இதை வைத்தே, ‘தான் சொல்லும்படியெல்லாம் ஆடவேண்டும்’ என்று டெல்லி எதிர்பார்க்கும் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் எடப்பாடி.
 
கூட்டணிக் கணக்கு?
 
‘அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வசம் போகவேண்டும்’ என்று பி.ஜே.பி மேலிடம் விரும்புவதாக ஒரு விஷயத்தை இங்கே ஓரிரு மாதங்களுக்கு முன்பு அலசியிருந்தோம். ‘‘அந்தக் கணக்கு, செயல்பாட்டுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது’’ என்கிறார்கள் டெல்லி தலைவர்கள் சிலர். ‘‘எடப்பாடி, பன்னீர்... இருவர்மீதும் ஏகப்பட்ட குறைகள் உள்ளன. அதனால், செங்கோட்டையனை ஆட்சிக்கும் கட்சிக்கும் தலைவராக மாற்றவேண்டும். அப்படிச் செய்தால், ரஜினியின் அருட்கடாட்சம் கிடைக்கும்’’ என்று பி.ஜே.பி திட்டமிட்டது. அதற்கு, எடப்பாடி தரப்பு அப்போது தலையாட்டவில்லை. இப்போது தலையாட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால், ‘‘விரைவில் செங்கோட்டையனை முதல்வர் பதவியில் உட்கார வைத்து, அ.தி.மு.க-வுக்கு இப்போது இருக்கும் ஊழல் இமேஜை மறைக்கும் வேலைகள் தொடங்கும். அடுத்து, தினகரன் அணியையும் இணைத்து மெகா கூட்டணி உருவெடுக்கும்’’ என்கிறார்கள் அவர்கள். 
 
தினகரனுக்கும் ஓகே!
 
‘அ.தி.மு.க-வின் தலைமையுடன்தான் எங்களுக்கு முரண்பாடு’ என இரு தினங்களுக்கு முன்புகூட தினகரன் அறிவித்துள்ளார். கூவத்தூரில் நடந்த ஆலோசனையின்போது, செங்கோட்டையனைத்தான் முதல்வராக்க விரும்பினராம் தினகரன். அதாவது, செங்கோட்டையன்மீது தினகரனுக்கு எப்போதுமே வருத்தம் ஏதுமில்லை. அதனால், தற்போதும் எந்த நிபந்தனையும் இல்லாமல் அவருடன் கரம் கோத்துவிடுவார் தினகரன். இனி இந்தப் பாதையில் பி.ஜே.பி பயணிக்க ஆரம்பிக்கும். இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு டாப் கியரில் டெல்லி நீதிமன்றத்தில் போய்க்கொண்டிருக்கிறது. அதை மனதில் வைத்து அரசியல் நெளிவு சுளிவுகளைக் காலத்துக்கு தகுந்தமாதிரி மாற்றிப்பேச தினகரனும் ரெடியாகத்தான் இருக்கிறாராம்.
 
எடப்பாடி மீது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட பிறகு, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், தற்போதைய அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை எம்.எல்.ஏ ஆகியோர் மூவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இது முதல்வரே செய்த ஏற்பாடுதானாம். ஆனால், அந்த பேட்டியும் தனக்கு எதிரான அம்பாக மாறும் என்று முதல்வர் நினைக்கவில்லை. ‘தீர்ப்பை எதிர்த்து டி.வி.ஏ.சி மேல்முறையீடு செய்யும்’ என்று பொன்னையன் சொன்னது தவறாகிவிட்டது. பொன்னையன் கட்சிக்காரர். அவருக்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லை. ‘கட்சி அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு டி.வி.ஏ.சி மேல்முறையீட்டுக்கு செல்வதைப் பற்றி அவர் எப்படி பேசலாம்’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கைவிட, ஆடிக்கிடக்கிறது எடப்பாடி தரப்பு. மேல்முறையீட்டு வழக்கில் இது மிக முக்கியமாக கவனிக்கப்படலாம்.
 
தன்னைச் சுற்றிப் பிடி இறுகுகிறது என்பதை உணர்ந்துவிட்டார் எடப்பாடி. இந்த அளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் தி.மு.க மீது ஏகக் கடுப்பில் இருக்கிறார் அவர். அதனால், புதிய தலைமைச் செயலகக் கட்டட முறைகேடு வழக்கைத் தீவிரப்படுத்தச் சொல்லியுள்ளார். இந்த வழக்குக்கு எதிராக ஸ்டாலின் தடை பெற்றிருக்கிறார். உடனடியாக அந்தத் தடையைத் தகர்க்கச் சொல்லியிருக்கிறாராம். தடை தகர்ந்ததும்... ரெய்டு, கைது என்று தி.மு.க-வை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறாராம். கூடவே, அ.தி.மு.க-அ.ம.மு.க இணைப்பைத் தடுப்பதிலும் தீவிரமாகியுள்ளார். தினகரனுடன் தனிப்பட்ட முறையில் எந்தெந்த அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்று ஆராயவும் உத்தரவிட்டுள்ளார். இதில் இரண்டு அமைச்சர்களின் பெயரும், டெல்லிக்குச் சென்றுள்ள முன்னாள் அமைச்சரின் உதவியாளர் பெயரும் இடம்பெற்றுள்ளன.
 
விஸ்வரூபமெடுக்கும் மயிலாப்பூர் சிலை!
 
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில், சிவபெருமானுக்கு மயில் வடிவில் அம்மன் பூஜை செய்யும் புன்னைவன நாதர் சந்நிதி உண்டு. இங்கிருந்த மயில் வடிவ அம்மன் சிலை திருப்பணியின்போது மாற்றப்பட்டுவிட்டதாகவும், அந்தச் சிலை காணாமல் போய்விட்டதாகவும் கூறப்பட்ட புகார் மீண்டும் விஸ்வரூபமெடுக்கிறது. அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஏகப்பட்ட தகவல்களை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸிடம் கூறியுள்ளாராம். முதற்கட்டமாக, இந்த விவகாரத்தில் திருமகள் கைது செய்யப்படலாம். அதனால், முன்ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார் திருமகள். இவரைத் தொடர்ந்து, கோயில் தொடர்பான முக்கியப்புள்ளிகள் சிலர் கைதாகக்கூடும்.
 
கடுப்பில் கவர்னர் மாளிகை!
 
நக்கீரன் கோபால் கைது விஷயத்தில், சென்னை போலீஸ் சொதப்பிவிட்டதாக நினைக்கிறதாம் கவர்னர் மாளிகை. ராஜ் பவனில் பர்னீச்சர்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக முன்பு ஒரு விவகாரம் போலீஸுக்குப் போனது. அப்போது, கவர்னர் மாளிகை பணியில் இருந்த உயர் அதிகாரிகள் இருவர்மீதும் கடுமையாக புகார் கூறப்பட்டது. அந்த இருவர் மீதும் கைது நடவடிக்கையைப் பாய்ச்சச் சொன்னார்களாம் அப்போது. ஆனால், உயர் அதிகாரிகளை விட்டுவிட்டு, சாதாரண ஊழியர்களை மட்டும் கைதுசெய்தது போலீஸார்.
 
இதையெல்லாம் வைத்து, ‘கவர்னர் மாளிகைக்கு எதிராகவே சென்னை போலீஸ் செயல்படுகிறது’ என்ற முடிவுக்கு வந்துள்ளனராம் கவர்னர் மாளிகை அதிகாரிகள் சிலர். அதனால், சென்னை மாநகர போலீஸ் உயர் அதிகாரிகளை கூண்டோடு மாற்றவேண்டும் என்று ராஜ் பவன் வட்டாரம் நினைக்கிறதாம். இந்த நேரம் பார்த்து, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இரண்டு நாள்கள் விடுமுறையில் செல்ல, அவரை லீவில் போகச் சொல்லிவிட்டார்கள் என்கிற ரீதியில் வதந்தி பரவி பரபரப்பைக் கிளப்பிவிட்டது.
 
கருணாநிதி சிலை... வருவாரா சோனியா?
 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலையை நவம்பர் 15-ம் தேதி திறக்க உள்ளனர். இதைத் திறந்துவைக்க சோனியா காந்தியைக் கூப்பிட உள்ளார்களாம். விழாவில் பங்கேற்க தேசியத் தலைவர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டணிக்கு அச்சாரம் போடும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று கூறுகின்றனர் தி.மு.க-வினர். ஆனால், ‘‘உடல்நிலை காரணமாக இந்த நிகழ்வில் சோனியா பங்கேற்பது சந்தேகம்தான்’’ என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில். அநேகமாக ராகுல் காந்தி, மன்மோகன் சிங் இருவரும் பங்கேற்க வாய்ப்புள்ளது.
 
கரூர் டு மன்னார்குடி... கலக்கிய சோதனை! 
 
உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜின் சம்பந்தி முறை உறவினர், மன்னார்குடியை சேர்ந்த மனோகரன். இவர், அரசு வேலைகளை டெண்டர் எடுப்பதில் முதல்நிலை ஒப்பந்ததாரர். மன்னார்குடியில் இவருக்கு சொந்தமான லாட்ஜ், பெட்ரோல் பங்க், அலுவலகம் உள்ளிட்ட ஆறு இடங்களில் கடந்த திங்கள்கிழமை  வருமானவரித் துறை சோதனை நடந்தது. சமீபத்தில் கரூர் கல்குவாரிகளில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டது. அது, வேறொரு அமைச்சருடன் தொடர்பில் இருப்பவர்களின் குவாரி என்றும் பேசப்பட்டது. அந்த சோதனையின்போது கிடைத்த ஆவணங்களை வைத்துதான், மன்னார்குடி மனோகரன்மீது திடீர் சோதனை நடந்தேறியுள்ளது.