• :
  • :
களத்தில்

கூடங்குளம் பகுதியில் விமான நிலையம்?

கூடங்குளம் பகுதியில் விமான நிலையம்?

 குமரி மாவட்டத்தில், விமான நிலையம் அமைக்க மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால், அங்கு அதற்கான சூழல் இல்லாததால், தென் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் நெல்லை மாவட்டத்தில் விமான நிலையத்தை அமைப்பதற்கான இடம் தேர்வுசெய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

 
மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன், விமானப் போக்குவரத்து ஆணையத்தின் துணை பொது மேலாளர் நீரஜ் குப்தா, நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் இந்த ஆய்வுப் பணியில் பங்கேற்றனர். நெல்லை மாவட்டத்தில் இருக்கன்துறை, பழவூர், காவல்கிணறு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்ற இக்குழுவினர் , அப்பகுதியில் புதிய சர்வதேச விமானநிலையம் அமைக்கும் சூழல் உள்ளதா என ஆய்வுசெய்தனர். 
 
பின்னர், கூடங்குளம் அனுவிஜய் நகரில் உள்ள சாகர்மிலன் கூட்டரங்கில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ``கன்னியாகுமரிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் விமான நிலையத்தை அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இதற்காக, குமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பில் புதிய விமானநிலையம் அமைப்பதற்கு மத்திய அரசினால் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. 
 
அதன் அடிப்படையில் அங்கு ஆய்வு மேற்கொண்டேன். ஆனால், குமரி மாவட்டத்தில் விமானநிலையம் அமைப்பதற்கான பூகோள ரீதியிலான அமைப்பு இல்லை. அத்துடன், அந்தப் பகுதியில் 500 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பும் கிடைக்கவில்லை. அதனால், நெல்லை மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளான கூடங்குளம் மற்றும் அதன் அருகில் உள்ள இருக்கன்துறை, பழவூர்,  காவல்கிணறு. பணகுடி போன்ற பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான இடங்களைப் பார்வையிட்டுவருகிறோம். உரிய இடம் தேர்வானதும் பணிகள் தொடங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.