• :
  • :
களத்தில்

தீபாவளி நெருங்குது கொஞ்சம் கவனிச்சு விடுங்க 5,000 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது

தீபாவளி நெருங்குது கொஞ்சம் கவனிச்சு விடுங்க 5,000 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது

 ஈரோட்டில் அரசு மானியத் தொகையைப் பெற வந்த இளைஞரிடம் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்ட தாட்கோ மேலாளரை, மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் அதிரடியாகக் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா கோசக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சொந்தமாக ‘அசோக் லைலண்டு தோஸ்து’ மினி லாரியை, இ.டி.பி திட்டத்தின் கீழ் மானியம் பெற்று வாங்க நினைத்திருக்கிறார். அதையடுத்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தினுடைய (தாட்கோ) ஈரோடு அலுவலகத்தில், கடந்த ஜூலை மாதம் விண்ணப்பம் கொடுத்திருக்கிறார். கடன் கேட்டு விண்ணப்பித்த ராஜ்குமார், பலமுறை தாட்கோ அலுவலகத்துக்குச் சென்று விசாரிக்க, இன்று போய் நாளை வா கணக்காக இழுத்தடித்திருக்கின்றனர்.
 
இதற்கிடையே, கடந்த அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கடன் சம்பந்தமாக விசாரிக்க, தாட்கோ அலுவலகத்துக்கு ராஜ்குமார் சென்றிருக்கிறார். அப்போது, ஈரோடு மாவட்ட தாட்கோ மேலாளரான போஜன், ‘உங்களுக்குத்தான் அரசினுடைய மானியத் தொகை 2 லட்ச ரூபாய் கிடைக்கப் போகிறதே!... 5,000 பணத்தைக் கொடுங்கள் உடனடியாக வேலையை முடித்துக் கொடுக்கிறேன். தீபாவளி செலவுக்காகத் தான் கேக்குறேன். இல்லைன்னா கேட்க மாட்டேன்’ எனக் கருணையுடன் டீல் பேசியிருக்கிறார். ‘உங்க டீல்க்கு ஓகே சார்!’ எனச் சொல்லிவிட்டு வந்த ராஜ்குமார், நேரடியாக ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரைச் சந்தித்து, தாட்கோ மேலாளரின் டீல் விவகாரத்தை புகாராகக் கொடுத்தார். ராஜ்குமாரிடம் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டைக் கொடுத்து அனுப்பிய அதிகாரிகள், பின்னே சென்று லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளரான போஜனை அவரது அலுவலகத்தில் வைத்தே கைது செய்திருக்கின்றனர். போலீஸாரிடம் வசமாக சிக்கிக்கொண்டதை உணர்ந்த போஜன், ‘சார்... நான் லஞ்சம் கேட்டது உண்மைதான். தீபாவளி நெருங்கிடுச்சி, கூட இருக்கிற ஊழியர்களுக்கு கொடுக்கத்தான் கேட்டேன். இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா அசிங்கமாயிடும் சார். விட்டுடுங்க’ என அப்பாவியாக நடித்திருக்கிறார். லஞ்சம் வாங்கி வசமாக மாட்டிக் கொண்டதுடன், உண்மையை ஒப்புக்கொண்ட தாட்கோ மேலாளர் போஜன் மீது, வழக்கு பதிவு செய்த போலீஸார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.