img/728x90.jpg
வருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்

வருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்

 மன்னார்குடியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜின் சம்பந்திமுறை உறவினரான கான்ட்ராக்டர் மனோகரனுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினர் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் மனோகரனுக்கு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தச் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மன்னார்குடியைச் சேர்ந்த மனோகரன், 'இன்ப்ராஸ்ட்ரக்சர்' என்ற பெயரில் அரசுப் பணிகளை டெண்டர் எடுக்கும் ஒப்பந்தத் தொழில் செய்து வருகிறார். இதுதவிர, மணல், தங்கும் விடுதி, வணிக வளாகம், பெட்ரோல் பங்க், ஜல்லி உடைக்கும் பிளாண்ட், டிரான்ஸ்போர்ட், சவுடு மண் விற்பனை, சாலைகள் போடுவதற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தயாரித்து விற்பனை செய்வது என இவர் செய்யும் தொழில்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்த நிலையில் அக்டோபர் 15-ம் தேதியன்று காலை ஒரே நேரத்தில் மன்னார்குடியில் மனோகரனுக்குச் சொந்தமான ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை மறுநாள் காலை 9 மணிவரை நீடித்தது. சோதனையின்போது டெண்டர் பணிகள் தொடர்பான ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மனோகரனின் அண்ணன் பாலசுப்பிரமணியன் மகளை அமைச்சர் ஆர்.காமராஜ் அண்ணன் நடன சிகாமணியின் மகன் ராஜகோபால் திருமணம் செய்துள்ளார். இந்த வகையில் மனோகரன், அமைச்சர் ஆர்.காமராஜூக்கு சம்பந்தி முறை என்பதால் இந்தச் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மன்னார்குடி அருகேயுள்ள சேரன்குளத்தை சேர்ந்தவர் மனோகரன். அ.தி.மு.க-வில் ஊராட்சிமன்றச் செயலாளராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் விவசாயத் தொழில் மட்டுமே செய்து வந்த இவர், பின்னர் மன்னார்குடி தென்மடல் ஆறாம் தெருவில் குடியேறிய பின்னர், சசிகலா தம்பி திவாகரனின் நட்பு கிடைத்ததும், பல்வேறு தொழில்களைச் செய்தார். அதனைக் கொண்டு 1991-96-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசுப் பணிகளுக்கான மிகச் சிறிய அளவு  டெண்டர்களை எடுத்து செய்து வந்தார். பின்னர் திவாகரனின் ஆசியோடு பெரிய வேலைகளை எடுக்க ஆரம்பித்து, படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டார். அதன் பிறகு ஆர்.காமராஜ் அமைச்சராகப் பொறுப்பேற்றதும், மனோகரன், அசுர வளர்ச்சி அடைந்தார்" என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
 
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் செய்யத்துரை வீட்டில் ரெய்டு நடந்தபோதே மனோகரன் குறித்த சில ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதற்கடுத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் உறவினருக்குச் சொந்தமான கரூரில் உள்ள கல்குவாரி ஒன்றில் நடைபெற்ற சோதனையின்போது இவரின் குவாரியில் பொருள்கள் வாங்கியதற்கான 28 கோடி ரூபாய் பாக்கி இருந்ததற்கான ஆவணமும் சிக்கியதாகத் தெரிகிறது. அப்போதே மனோகரன் மீது ஒரு கண் வைத்த வருமான வரித்துறையினர், சரியான நேரத்தில் சோதனை நடத்தியிருக்கின்றனர்" என்கிறார்கள். 
 
 
"மனோகரன் டெண்டர் எடுப்பதில் எந்த அளவிற்கு மும்முரம் காட்டினாரோ, அதே அளவிற்கு அமைச்சர் ஆர். காமராஜின் உறவினர் என்றஆர்.காமராஜ் முறையில் தனக்குச் சொந்தமான லாரிகளில் விதிமுறைகளை மீறி மணல் விற்பனை செய்வதிலும் ஈடுபட்டு வந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு மணல் கடத்திச் சென்ற இவருக்குச் சொந்தமான லாரியை மடக்கிப் பிடித்து, முத்துப்பேட்டை முன்னாள் டி.எஸ்.பி. பறிமுதல் செய்தார். இதில் கோபமடைந்த மனோகரன் நேராக ஸ்டேஷனுக்கே சென்று டி.எஸ்.பி-யின் சட்டையைப் பிடித்து, 'இது யாருடைய லாரி என தெரியாதா? விடவேண்டியதுதானே?' என கடுமையாக நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல் நிலம் வாங்குவதிலும் கடுமையாக நடந்து கொள்வார். முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, சவுடு மண் எடுத்து விற்பனை செய்யும் உரிமம் பெற்றவர். சவுடு மண் என்கிற பெயரில் மணல் விற்பனையைச் செய்து வந்தார். இதில் பெரிய அளவில் சம்பாதித்ததாகச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அமைச்சர் ஆர்.காமராஜின் அக்கா மகன் ஆர்.ஜி.குமார், 'ஆர்.ஜி.கே இன்ப்ராட்ரக்சர்' என்ற பெயரில் அரசுப் பணிகளை டெண்டர் எடுத்து செய்யும் ஒப்பந்தப் பணிகளும் இவருடைய மேற்பார்வையில்தான் நடக்கும்" என்கிறார்கள் அவர்கள். 
 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோரை மாதம் தவறாமல் மனோகரன் சந்தித்து, அவர்களுக்குச் சேர வேண்டியதை சரியாகக் கொடுத்து விடுவார். பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் அதிக அளவிலான டெண்டர் பணிகள் எடுத்து வருவதால், எடப்பாடி பழனிசாமிக்கு இவர் ஏற்கெனவே நெருக்கம்" என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 
 
திருவாரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மனோகரனிடம் தனிப்பட்ட முறையில்மனோகரன் கொஞ்சநேரம் பேசினார். அந்த அளவிற்கு முதல்வருக்கு நெருக்கமாக இருந்துவருபவர். சமீபத்தில் அமைச்சர் ஆர்.காமராஜிடம் நான் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன் 'சீட்டு வாங்கி கொடுங்கள். எத்தனை கோடி வேண்டுமானாலும் நானே செலவு செய்து கொள்வதோடு ஜெயித்துக் காட்டுகிறேன்' என சொன்னதைக் கேட்டு, அமைச்சரே ஆடிப் போய்விட்டாராம். கடந்த 25 வருடமாக காண்ட்ராக்ட் தொழிலில் கோலோச்சி வரும் மனோகரனுக்கு சுமார் 500 கோடிக்கும் அதிமான சொத்துக்கள் இருக்கிறது. இவரின் சொத்து மதிப்பைக் கண்டு வருமான வரித் துறையினரே அதிர்ச்சியில் உறைந்து போனதோடு பல முக்கிய ஆவணங்களையும் அள்ளிச் சென்றுள்ளனராம். 
 
மனோகரனிடம் இதற்கு முன்பும் இதுபோல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கின்றனர். ஆனால், இந்த அளவிற்கு கடுமையாக இருந்ததில்லை. ஆனால், இந்தமுறை கடுமையான முறையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை வைத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தவே, இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். அமைச்சர் ஆர்.காமராஜ் இந்த ரெய்டு விஷயத்தை அதிகம் கண்டு கொள்ளவில்லையாம். 'ஏற்கனவே சொத்து விஷயத்தில் அமைச்சரை மிஞ்சி இருக்கிறார் மனோகரன். இப்போது தேர்தலில் போட்டியிட சீட்டும் கேட்கிறார். எங்கே தன்னை மிஞ்சி விடுவாரோ' என நினைத்த காமராஜ். மனோகரனை கட்டுக்குள் வைக்கவே இந்தச் சோதனையை நடத்த சொல்லியிருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
 
இதுகுறித்து மனோகரனிடம் பேசினோம். 'ஏதாவது கிடைக்கும் என்று சந்தேகத்தோடு வந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். எல்லாவற்றுக்கும் கணக்கு இருந்தது. அதனால், எதுவும் கிடைக்கவில்லை. எதையும் எடுத்துச் செல்லவில்லை. நாங்கள் அறுபது வருடமாக காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறோம். எதற்காக இந்த சோதனை? இதில் அரசியல் பின்புலம் எதுவும் இருக்கிறதா என தெரியவில்லை" என்றார்.