• :
  • :
களத்தில்

மீண்டும் மீண்டும் பழுதாகும் விமானங்கள் திக்திக் திருச்சி விமான நிலையம்

மீண்டும் மீண்டும் பழுதாகும் விமானங்கள்  திக்திக் திருச்சி விமான நிலையம்

 கடந்த சில தினங்களில் மட்டும் மூன்று விமானங்களில் பழுது மற்றும் விமான விபத்து காரணமாகத் திருச்சி விமான நிலையம் திக் திக் எனக் கிடக்கிறது.

 
கடந்த 12-ம் தேதி நள்ளிரவில் திருச்சியிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், திருச்சி விமான ஓடுதளப் பாதையிலிருந்து மேல் எழும்பும்போது, மிகவும் தாழ்வாகப் பறந்து சென்றதால், விமான நிலையத்தின் காம்பவுண்டு சுவர் மற்றும் ஆண்டெனா ஆகியவற்றில் மோதியது. இந்த விபத்து, திருச்சி மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
 
ஆனால், விபத்தில் சிக்கிய விமானம் தங்கு தடையின்றி 3,000 மீட்டர் உயரத்தில் பறந்தபடி, துபாய் எல்லைக்குச் சென்றது. அதற்கு முன்பாக துபாய் விமான நிலையத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் போகவே, துபாய் விமான நிலையத்தில் அவர்கள், விபத்தில் சிக்கிய விமானத்தைத் தரையிறக்க அனுமதி தர மறுத்தனர். அதனால் அவசரமாக அந்த விமானம் மும்பை வரவழைக்கப்பட்டு தரையிறக்கப்பட்டது. அதையடுத்து அந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 136 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து திருச்சி விமான நிலையம் நிர்வாகம் விசாரணை நடத்தி இந்திய விமான நிலைய ஆணைய குழுவுக்கும் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிக்கைகள் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், விபத்தில் சிக்கிய விமானத்தில் விமானம் ஓட்டிய கணேஷ் பாபுவின் கவனக்குறைவால்தான் இந்த விபத்து நடைபெற்றதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், நடந்த விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரக விபத்து விசாரணை பிரிவு அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
நிலைமை இப்படி இருக்க, கடந்த 14-ம் தேதி மாலை 4 மணிக்கு 115 பயணிகளுடன் திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு, ஏர் இந்தியா விமானம் கிளம்பியது. மிக வேகமாக ரன்வேயில் ஓடிய விமானம், வானத்தில் பறப்பதற்கு மேலெழும்பியபோது ஏசி இயங்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தொழில்நுட்பக் கோளாறு விமானம் வானத்தில் பறக்கும்போது கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், மிகவும் சிக்கல் உண்டாகி இருக்கும்.
 
ஏசி வேலை செய்யவில்லை என்றால், விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு மூச்சுத் திணறல் சுவாசப் பிரச்னை ஏற்பட்டு இருக்கக் கூடும். ஏசி வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டவுடன், விமானம் தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்யும், ஏர்பிரான் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று திருச்சியிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
 
துபாயிலிருந்து நள்ளிரவு 12 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வரும். அடுத்து அந்த விமானம், திருச்சியிலிருந்து 1 மணி அளவில் மீண்டும் துபாய்க்குப் புறப்பட்டுச் செல்வது வழக்கம். அப்படி நேற்று நள்ளிரவு அந்த விமானம் திருச்சி வந்த விமானம், மீண்டும் துபாய்க்குப் புறப்பட நேற்று அதிகாலை தயாராக இருந்தது. அனைத்து சோதனைப் பணிகளும் முடிவடைந்த நிலையில், விமானத்தில் 84 பயணிகள் ஏற்றி அமர வைக்கப்பட்டனர். அப்போது விமான ஓட்டுநர் விமானத்தை இயக்க முயன்றபோது விமானத்தின் முகப்பு விளக்கு எரியவில்லை என்பது தெரியவந்தது. விமானம் வானில் பறக்கும்போது சிக்னலுக்கான பயன்படுத்தப்படும் அந்த விளக்குகள் எரியாததை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சாமர்த்தியமாக விமானத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால், ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு வானில் பறக்கும்போது முகப்பு விளக்குகள் எரியாமல் போனால் நிலைமை மோசமாகி இருக்குமாம். பிரச்னையை உணர்ந்த விமான நிலைய அதிகாரிகள், தொழில்நுட்ப பணியாளர்களை வரவழைத்து விமானத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்தனர். ஆனால், அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உடனடியாகச் சரி செய்யப்படவில்லை என்பதால், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
 
விமானத்தில் இருந்த பயணிகள் 64 பயணிகளை நேற்று அதிகாலை நான்கு மணிக்குக் கிளம்பிய சார்ஜா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்கள். மீத மிருந்தவர்கள், வேறு சில விமானங்களில் துபாய்க்கு அனுப்பப்பட்டனர். திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கும் விமானங்களில் ஏர் இந்தியா விமானங்களில் தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதால் விமான நிலைய அதிகாரிகளும் பயணிகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.