img/728x90.jpg
பா.ஜ.க-வை விமர்சிக்கத் தி மு க வுக்குத் தகுதியில்லை  - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

பா.ஜ.க-வை விமர்சிக்கத் தி மு க வுக்குத் தகுதியில்லை - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வின் 47 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று உளுந்தூர்பேட்டை எம்.ஜி.ஆர் திடலில் நடந்தது. இந்த விழாவில் தி.மு.க-வைக் கடுமையாகத் தாக்கிப்பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: "நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் 8 மாதம் ஆகின்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியை நாங்கள் சிறப்பாகச் செய்து வருகிறோம். எங்களை மிரட்டிப் பார்க்கின்றனர். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. அதனால் வழியில் பயம் இல்லை. உங்களுக்குத்தான் பயம் உள்ளது. புதிய தலைமைச் செயலகம் கட்டிய விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டபோது நீங்கள்தான் நீதிமன்றம் சென்றீர்கள், ஆனால், என் மீது புகார் கொடுத்தீர்கள். நாங்கள் நீதி மன்றம் செல்லவில்லை.
 
எங்களுக்கு மடியில் கனமில்லாததால் எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்கத் தயார். தி.மு.க-வில் கருணாநிதி, அவருக்குப் பின்னர் மு.க.ஸ்டாலின், உதயநிதி என வாரிசு அரசியல் நடக்கிறது. தி.மு.க கட்சி அல்ல, அது கம்பெனியாக்கிவிட்டார்கள். ஆனால், அ.தி.மு.க-வில் அப்படி அல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கட்சியில் ஒரு சாதாரண தொண்டனைக்கூட எம்.பி, எம்.எல்.ஏ ஆக்கி அழகு பார்த்தார்கள். கருணாநிதி இருக்கும் வரை தி.மு.க-வில் ஸ்டாலின் தலைவராக முடியவில்லை. கருணாநிதி மறைவுக்குப் பிறகுதான் ஸ்டாலின் தலைவராகியுள்ளார்.
 
 
தி.மு.க ஒரு கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கிறது. ஜெயலலிதா மறைந்துவிட்டார். ஆட்சியைக் கலைத்துவிடலாம் என்று திட்டம் போட்டார்கள். அது நிறைவேறவில்லை. அதன் பிறகு, கட்சியை உடைக்கப் போட்ட திட்டமும் நிறைவேறவில்லை. இன்று மூன்றாவது திட்டமாகப் புகார் செய்துள்ளனர். இதிலும் அவர்களுக்குத் தோல்விதான் கிடைக்கும். உங்கள் கனவு பகல் கனவாகவும், கானல் நீராகவும்தான் இருக்கும். டி.டி.வி.தினகரன் நேற்று பேட்டி கொடுத்துள்ளார். அதில் அ.ம.மு.க-வுடன் அ.தி.மு.க சேர வேண்டும் என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்கள் கட்டிக் காத்த இந்த இயக்கம் இவரோடு போய் இணைய வேண்டுமாம். வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு அ.ம.மு.க காணாமல் போய்விடும். பா.ஜ.க மோசமான கட்சி என்று தி.மு.க-வினர் பேசி வருகின்றனர். இதைச் சொல்வதற்கு தி.மு.க-வுக்குத் தகுதி இல்லை. நீங்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கவில்லையா? உங்களுக்கு அதிகாரம் பதவிதான் முக்கியம். உங்களுக்கு மதச்சார்பின்மை பற்றிப் பேசத் தகுதியில்லை. எங்களைப் பொறுத்தவரை யாருடனும் கூட்டணி இல்லை. நாங்கள் எதுவும் பேசலாம். தமிழக மக்களுக்கு எந்தக் கட்சி நன்மை செய்கிறதோ அவர்களுடன் கூட்டணி வைப்போம்" என்றார்.