• :
  • :
களத்தில்

ஹேப்பி பர்த்டே பகத்சிங் கோவை மாணவி சஸ்பெண்டு விஷயத்தில் என்ன நடந்தது?

ஹேப்பி பர்த்டே பகத்சிங் கோவை மாணவி சஸ்பெண்டு விஷயத்தில் என்ன நடந்தது?

 கோவை அரசு கலைக் கல்லூரியில், முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு படித்துவரும் மாலதி என்ற மாணவி, அனுமதியின்றி பகத்சிங் பிறந்தநாள் நிகழ்ச்சி நடத்தியதற்காக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

`ஹேப்பி பர்த்டே பகத்சிங்..!' கோவை மாணவி சஸ்பெண்டு விஷயத்தில் என்ன நடந்தது?
 
சம்பவம் ஒன்று:
கோவை சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவி ப்ரியா, காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சிறுமி குறித்துப் பேசியதற்காக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
 
சம்பவம் இரண்டு:
 
கோவை அரசுக் கலைக் கல்லூரியில், முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு படித்துவரும் மாலதி என்ற மாணவி, அனுமதியின்றிச் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் பிறந்தநாள் நிகழ்ச்சியை நடத்தியதற்காகச் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
 
 
"இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள்தாம். ஆனால், கல்வி நிலையங்களில் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுவதற்குச் சமகாலத்தில் நடந்த உதாரணங்கள் இவை" என்று கொந்தளிக்கின்றனர் மாணவர்கள்.
 
கோவை அரசுக் கலைக் கல்லூரி மைதானத்தில், மாணவ மாணவிகளுடன் இணைந்து கடந்த மாதம் 28-ம் தேதி மாலதி, சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இந்தக் கொண்டாட்டத்தின்போது பகத்சிங் தொடர்பான உரையாடல்களும் நடந்துள்ளன. ஆனால், கல்லூரி நிர்வாகம் இதற்கு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மாணவி மாலதியை மட்டும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.
 
 
இதுகுறித்து கோவை அரசுக் கலைக் கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை கடிதத்தில், "கோவை அரசுக் கலைக் கல்லூரியில், முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு பயின்றுவரும் மாணவி மாலதி, 28.9.2018 அன்று வகுப்புகளில் உள்ள மாணவ, மாணவிகளை அழைத்து கல்லூரி வளாகத்தில் தனியாகக் கூட்டம் நடத்தியுள்ளார். இந்தக் கூட்டம் குறித்து ஏற்கெனவே முதல்வரிடம் அனுமதி கேட்ட நிலையில், கல்லூரி முதல்வர் இதை அனுமதிக்கவில்லை. எனவே கூட்டம் நடத்த அனுமதி மறுத்த நிலையிலும் பிற மாணவ, மாணவிகளை அழைத்து கூட்டம் கூட்டி, கல்லூரி பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியும், ஒழுங்கீனமாகவும் நடந்துகொண்டுள்ளார். இதனால், மாணவி மாலதி 1.10.2018 முதல், கல்லூரியிலிருந்து விசாரணை அறிக்கை பெறும்வரை இடைநீக்கம் செய்யப்படுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.
 
கோவை அரசு கலைக் கல்லூரி
 
``பகத்சிங்கின் பிறந்தநாள் நிகழ்ச்சியைக் கல்லூரியில் நடத்திட, முதல்வரிடம் மாலதி அன்றைய தினம் காலையே அனுமதி கேட்டுள்ளார். ஆனால், கல்லூரி முதல்வர் இதை மறுத்தார். இதையடுத்து, நடந்த கூட்டத்தில் கல்லூரியிலுள்ள மற்ற மாணவ இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, அன்று மதியம் அதே மேடையில் கல்லூரியின் அடிப்படை வசதிகளுக்காக மாணவர்களின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுள்ளது. 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்துகொண்ட நிலையில், மாலதியை மட்டும் சஸ்பெண்டு செய்ததில் உள்நோக்கம் இருக்கிறது. மாலதி, சம்ஸ் (Students uprising movement for social welfare) என்ற மாணவர் இயக்கத்தில் இருக்கிறார். அவர், இளநிலை படிக்கும்போதே, ஹாஸ்டல் தொடங்கி மாணவர்களின் பல்வேறு பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார். அவரை, உளவுத்துறை, க்யூ பிராஞ்ச் போலீஸ் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்தப் பிரச்னையை வைத்து, அவரை ஆஃப் செய்வதற்காகவே, மாலதியை மட்டும் சஸ்பெண்டு செய்துள்ளனர்" என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
 
மாணவி மாலதியிடம் பேசியபோது, ``பகத்சிங் பிறந்தநாள் கூட்டத்துக்கு, மரியாதை நிமித்தமாகத்தான் அனுமதி கேட்டோம். ஆனால், கல்லூரி முதல்வரும் எங்கள் துறைத் தலைவரும் அனுமதி மறுத்தனர். ஜே.என்.யு தொடங்கி பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள், கல்லூரி வளாகத்தில்தான் அரசியல் பேசி வருகிறார்கள். இது எங்களது ஜனநாயக உரிமை. கூட்டத்தில், நாங்கள் பகத்சிங்கின் பணிகள், மாணவர்கள் ஏன் அவரை நினைவுகூர வேண்டும் உள்ளிட்டவை குறித்துப் பேசினோம். எங்களது தலையெழுத்து எல்லாம் யு.ஜி.சி-யின் கையில்தான் உள்ளது. யு.ஜி.சி-யைக் கலைத்துவிட்டால், என்னைப் போன்றவர்கள் படிக்க முடியாது. எங்களால் வெளியே சென்று எல்லாம் படிக்க முடியாத நிலை இருக்கிறது. அதற்காகத்தான் அரசியல் பேசுகிறோம். எங்களது நலனுக்காக நாங்கள் பேசித்தானே ஆக வேண்டும்?
 
கல்லூரிகளில், எப்போதெல்லாம் மாணவர்களின் விரோதப்போக்கு நடக்கிறதோ, அப்போதெல்லாம் அங்கு முற்போக்கு இயக்க மாணவர்களின் கைகள் ஓங்கும். இங்கேயும், அதுபோன்று நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒடுக்குகிறார்கள். என்னைச் சஸ்பெண்டு செய்தது தொடர்பான கடிதத்தையே, எனக்கு நீண்ட இழுபறிக்குப் பிறகுதான் கொடுத்தனர். இப்போது, ஊடகங்களில் செய்தி வெளியான பிறகுதான், வருகிற 22-ம் தேதிதான் விசாரணை வைத்துள்ளோம் என்று கூறுகின்றனர். கல்லூரி நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பொறுத்து, எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்" என்றார்.
 
மாணவி மாலதி
 
கோவை அரசுக் கலைக் கல்லூரி முதல்வர் சித்ரா, "பகத்சிங்குக்காகக் கூட்டம் நடத்தக் கூடாது என்று நாங்கள் தடை போடவில்லை. மாணவி மாலதி, அன்றைய தினம் காலைதான் என்னிடம் அந்தக் கூட்டத்துக்கு அனுமதி கேட்டார். அப்போது, தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் அனுமதி வழங்கவில்லை. பகத்சிங் குறித்து மாணவர்கள் பேசுவது மிகவும் அவசியம்தான். இரண்டு நாள்களுக்கு முன்பு அந்த மாணவி கேட்டிருந்தால், நிச்சயம் அனுமதி கொடுத்திருப்போம். அனுமதி மறுத்த பிறகும், அந்த மாணவி ஒவ்வொரு வகுப்பாகச் சென்று மாணவர்களைத் திரட்டி கூட்டம் நடத்தியுள்ளார். அதற்காகத்தான் அவரை சஸ்பெண்டு செய்துள்ளோம். இதில், கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பது எல்லாம் இல்லை. விசாரணைக்குப் பிறகு மாணவியின் சஸ்பெண்டு உத்தரவைத் திரும்பப் பெறுவது தொடர்பாக முடிவு எடுப்போம்" என்றார்.
 
மாணவியின் எதிர்காலத்தைக் கல்லூரி நிர்வாகம் கவனத்தில்கொள்ள வேண்டும்.