img/728x90.jpg
முதல்வர் திறந்துவைத்த 30 வது நாள் புதுக்கோட்டை பாலம்!

முதல்வர் திறந்துவைத்த 30 வது நாள் புதுக்கோட்டை பாலம்!

 தமிழக நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தங்கள் விடப்பட்டதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த சர்ச்சையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிக்கியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்தச் சூழலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த புதுக்கோட்டை மாவட்டத்தில் போடப்பட்ட புதிய சாலைகள் மற்றும் மேம்பாலம் நான்கு மாதத்திலேயே சேதமடைந்துள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் பகுதியில் உள்ளது பாம்பாறு. புதுக்கோட்டை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இடையில் ஓடுகிறது. இந்த ஆற்றை அடுத்துள்ளது சிறுகாம்பூர் எனும் கிராமம் உள்ளது. ஆற்றில் தண்ணீர் வந்தால், ஆவுடையார் கோயில் பாம்பாறு பகுதியிலிருந்து அக்கரைக்குச் செல்ல வேண்டுமென்றால் சுமார் 15 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டும் என்பதால், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சிறுகாம்பூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
 
 
இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அடுத்த பாம்பாற்றின் குறுக்கே சுமார் ரூ. 5.7 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பைக் கண்டதும் அப்பகுதி மக்கள் தங்களின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் இருந்தனர்.
 
அதையடுத்து பாம்பாற்றில் புதிய பாலங்கள் கட்டுமான பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்கியது. பணிகள் முடிவடைந்து கடந்த ஜூன் 4-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிய பாலத்தைத் திறந்து வைத்தார்.
 
ரூ 5.7 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அந்தப் பாலம் மற்றும் புதிய சாலைகள், சில மாதங்களிலேயே சேதமடைந்து பிதுங்கி நிற்கின்றன. இதனால் அப்பகுதிகளில் விபத்துகள் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பயணம் செய்ய முடியாமல் மிகவும் தவித்து வருகிறார்கள்.
 
இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி பொதுமக்கள், “ரொம்ப வருஷமா பாலம் கட்டச் சொல்லிப் போராடியதன் விளைவாக இந்தப் பாலம் கிடைத்தது. அப்படிப் போராடி வாங்கிய பாலமும் சாலையும் முறையாக வேலை செய்யாததால், பாலத்தைச் சுற்றியும் போடப்பட்ட சாலைகள் மற்றும் பாலத்தில் பல்வேறு பகுதிகளும் சிமென்ட், ஜல்லிக் கற்கள் வெடித்து நிற்கின்றன. சாலைகளில் ஆங்காங்கே பாளங்களாக வெடித்துப் பிளந்து நிற்கின்றது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். தெரியாமல் அந்த விரிசல்களில் வண்டிகளைவிட்டு விட்டால் சக்கரங்கள் சிக்கிக்கொள்கின்றன. தரமற்ற சாலைகள் மற்றும் பாலங்கள் போடப்பட்டது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் அவர்களும் கண்டுகொள்ளவில்லை. கொள்ளையடிக்கும் நோக்கில் பாலத்தைப் போட்டதால் நாங்கள் இப்படி சிரமப்படுகிறோம்” எனக் கலங்கினார்கள்.
 
இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அடுத்த பாம்பாறு உயர்மட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. கமிஷன், கலெக்ஷன், கரப்சன் அ.தி.மு.க ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த பாலம் நான்கு மாதத்தில் உடைந்தது போல அ.தி.மு.க ஆட்சியின் மூலம் பாலம் உடைந்துவிடும் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், “பாம்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் விரிசல்கள் நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் பலரின் கவனத்துக்கு வந்துள்ளது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்த ஒரே மாதத்திலேயே பாலம் பாலமாக வெடித்துக் கிடக்கிறது. இப்போது இன்னும் மோசமாக  உள்ளது. இப்படியான தரமான பாலத்தைத் கட்டிய பொறியாளர்கள் ஒப்பந்தக்காரர்கள் சாலை ஆய்வாளர்கள் அனைவரையும் பாராட்டித்தான் ஆக வேண்டும் என வஞ்சப்புகழ்ச்சி அணியில் பாராட்டி வருகிறார்கள். இந்தப் பதிவுகள் தற்போது வைரல் ஆகியுள்ளது.
 
ரூ.  5.7 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் ஒன்று கட்டிமுடிக்கப்பட்ட சில மாதங்களில் பழுதடைந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.