img/728x90.jpg
ஹெச் ராஜா கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்

ஹெச் ராஜா கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்

 கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வர உள்ளது. அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் ஒரு இந்து விரோத சக்தி’ என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார். 

 
தாமிரபரணி நதியில் 144 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மகாபுஷ்கரம் விழா கடந்த 11-ம் தேதி தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை நடைபெற உள்ள அந்த விழாவில் சாதுக்கள், சன்னியாசிகள், மடாதிபதிகள், ஜீயர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தாமிரபரணி நதியில் புனித நீராடி வருகிறார்கள். இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா நெல்லை சந்திப்பு குறுக்குத்துறையில் தாமிரபரணி நதியில் நீராடினார். 
 
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுவது புஷ்கரம் விழா. 144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது மஹாபுஷ்கரம். இந்த ஆண்டு தாமிரபரணி நதியில் மஹாபுஷ்கரம் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். ஆனால், அரசு உதவி என்பது எந்த நிலையிலும் இல்லை. அரசு சார்பாக பக்தர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.
 
 
தமிழகத்தில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி பெறுவதற்குக் கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைமையை திராவிட கட்சிகள் உருவாக்கி உள்ளனர். அறநிலையத்துறை என்பது இந்து சமயத்தை அழிக்கும் துறையாக செயல்பட்டு வருகிறது. ஆன்மிக விஷயங்களில் அறநிலையத்துறை தலையீடு இருக்கக் கூடாது. ஆன்மிக விஷயங்களில் தலையிடுவதற்கான உரிமையும் அறநிலையத்துறைக்கு இல்லை. 
 
கோயில் சொத்துகளையும், உண்டியல் காணிக்கைகளையும் கொள்ளையடிக்கும் செயலில்தான் அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் 38,646 கோயில்கள் உள்ளன. இதில் பல கோயில்கள் பூஜை நடக்காமல் பூட்டப்பட்டுள்ளன. சில கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் அழியும் நிலையில் உள்ளன. அதனால் 38,646 கோயில்களையும் 12 மாதத்துக்குள் வழிபாடு நடத்தும் அளவுக்கு மாற்ற வேண்டும். 
 
அப்படி நடக்காவிட்டால், இந்து அமைப்புகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் அறப் போராட்டத்தில் ஈடுபடுவோம். எந்ததெந்த கோயில்களுக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன; எத்தனை கோயில்களில் தினமும் பூஜை நடக்கிறது போன்ற விவரங்களை தமிழக அரசு 30 நாள்களுக்குள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சபரிமலை பிரச்னைக்கு ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகள்தான் காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பது அப்பட்டமான பொய். அவர் இந்து விரோத சக்தி, கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்’’ என்றார்.