• :
  • :
களத்தில்

சின்மயி குரலே இருக்கட்டும் - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்

சின்மயி குரலே இருக்கட்டும்  - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்

 சின்மயி பற்றி வைரமுத்து சொன்ன பழைய ஃப்ளாஷ்பேக் இது.

 
வைரமுத்து திரைத் துறைக்குள் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தனது திரைப் பயணத்தில் எழுதிய பாடல்களில் சிலவற்றைத் தேர்வுசெய்து, சில வருடங்களுக்கு முன்பு 'ஹலோ எஃப்.எம்' வானொலியில்  தொகுத்து வழங்கினார்.  'முப்பதாண்டு முத்துகள்' என்ற தலைப்பில் வெளியான அந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு பாடலுக்கும் வைரமுத்து முன்னுரை கொடுத்திருந்தார். அதில், பாடல் பிறந்த கதையும் சொல்லியிருந்தார். வைரமுத்து தேர்வுசெய்த 200 பாடல்களில், 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் 'தெய்வம் தந்த பூவே' பாடலும் ஒன்று. அந்தப் பாடலை பாடியது சின்மயி. 
 
அந்தப் பாடலுக்கு வைரமுத்து தனது குரலில் கொடுத்த முன்னுரை இதுதான்.
 
''இப்போது நீங்கள் கேட்க விரும்பும் பாட்டு, எனக்கு ஐந்தாம் தேசிய விருது பெற்றுத்தந்த பாட்டு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இரண்டாம் தேசிய விருது பெற்றுத்தந்த, 'சின்னச் சின்ன ஆசை' பாடலுக்கும் ஐந்தாம் தேசிய விருது பெற்ற இந்தப் பாடலுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. 
 
சின்னச் சின்ன ஆசை பாடலை ஒலிப்பதிவுசெய்து முடித்ததும், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாட்டை போட்டுக் காட்டி சொன்னார். 'ஒரு புதிய பாடகியை அறிமுகம் செய்திருக்கிறேன். இந்தக் குரல் நன்றாக இருந்தால் இதையே வைத்துக்கொள்ளலாம். அல்லது பெரும் பாடகி யாரையாவது அழைத்து ஒலிப்பதிவு செய்யலாம்' என்றார். சின்னச் சின்ன ஆசை பாடலை கேட்டுவிட்டுச் சொன்னேன்.  'தயவு செய்து மாற்றாதீர்கள். இந்தப் பாட்டுக்கென்றே பிறந்த குரல் மின்மினியின் குரல். அப்படியே இருக்கட்டும்' எனச் சொன்னேன். அதே நிலைதான் இந்தப் பாட்டுக்கும் நிகழ்ந்தது. இந்தப் பாடலை போட்டுக் காட்டிவிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னார், 'நன்றாக இருக்கிறதா, மாற்றலாமா' என்று. நான் சொன்னேன், 'இந்தப் பாடலை இதைவிடச் சிறந்த மென்மையான குரல் பாடிவிட முடியும் என எனக்குத் தோன்றவில்லை. தயவுசெய்து மாற்றாதீர்கள். சின்மயி குரலே இருக்கட்டும்' என்றேன். என்ன ஆச்சர்யம் இந்தப் பாடலைப் பாடிய சின்மயிக்கு தேசிய விருதே கிடைத்தது. இரட்டைத் தேசிய விருதுகள் பெற்றுத்தந்த பாட்டு, 'தெய்வம் தந்த பூவே'.